Followers

Wednesday, October 30, 2013

ஐம்பது ரூபாய்க்கு எழுதிய சினிமா பாட்டு - கவிஞர் வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து, தலைமுறைகள் தாண்டித் தடம்பதித்து நிற்பவர். 15000 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டாலும் அவர் பாடல்களில் இன்னும் நவீனமும் உயிர்ப்பும் குறையவில்லை. ஒரு பொன்மாலைப் பொழுதில்..,

கவிதை என்பது உயிர் உந்துதல் -வைரமுத்துவின் நேர்காணல் தி இந்து தீபாவளி 2013 மலரில் வெளியாகி உள்ளது. (பேட்டி கண்டவர்: அருள்செல்வன்)


நீங்கள் பிரமிப்புடன் பார்த்தவர்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் சமகாலத்தவர்களுக்கும் எழுதியிருக்கிறீர்கள், உங்கள் பிரமிப்புடன் பார்ப்பவர்களுக்கும் எழுதுகிறீர்கள். என்ன வேறுபாடு உணர முடிகிறது ? இந்த மூன்று தலைமுறை வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒப்பிட முடியுமா?
தலைமுறைகள் மாறினாலும் தமிழ் ஒன்றுதான். நான் வியந்து பார்த்தவர்களுக்கும் என்னை வியந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரிதான் உழைக்கிறேன்.  காரணம் தமிழ் என்பது யாருக்குப் போய்ச் சேர்கிறதோ அவர்களின் பெயரால் அழைக்கப்படுவதில்லை;  தமிழ் படைத்தவன் பெயரால் தான் அழைக்கப்படுகிறது.  அதனால் யாருக்குப் பாட்டெழுதினாலும் வைரமுத்து பாட்டா என்று அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பது என் கருத்து.  ஒரு பாணியை உண்டாக்கிட காலம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது.  என் சுவடுகளைப் பாடலில் விட்டுச் செல்ல ஆசைப் படுகிறேன்.

காலம் தோறும் பண்பாட்டு விழுமியங்கள் மாறுகிற போது என் அடிப்படைப் பண்புகள் குறைந்து விடாதபடி பார்க்கிறேன்.  ஹீதருக்குப் பாட்டெழுதினேன்.  அதன் பிறகு பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், ஷ்ங்கர் போன்றவர்களுக்கும் எழுதினேன்.  இன்று இளைய தலைமுறையினருக்கும் பாட்டெழுதுகிறேன்.

சமகாலத்தோடு என்னையும் என்னைச் சம காலத்தோடும் பின்னிப் பிணைந்திருக்குமாறு வரித்துக் கொண்டு பாட்டெழுதுகிறேன்.  பாடலும் நானும் பழையதாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

கிராமத்திலிருந்து வந்த உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்?  இதற்கு காரணம் ஏதாவது உள்ளதா?  எந்த வயதுவரை சாமி கும்பிட நேர்ந்தது. ?

உணவு, உடை, கலாசாரம் எல்லாமே சொல்லிக் கொடுத்தது வருவதே பழக்கங்கள்.  குல தெய்வ வழிபாடு சிறந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவந்தான் நான்.  ஆகவே கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஒரு பழக்கமாக இருந்தது.  கோயிலுக்கு என் பெற்றோரோடும் உறவினரோடும் போய்க் கொண்டிருந்தேன்.  அதை ஒரு பழக்கமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

பின்னாளில் இந்த உருவ வழிபாடு பற்றி எனக்குக் கேள்வி வந்தது.  கடவுளுக்கு ஒரே உருவம்தான் இருந்திருக்க முடியும்.  கடவுளுக்கு உருவம் என்பது வடிவத்தில் இல்லை என்று தெரிந்தது.  அப்படி இருந்தால் சூரியனுக்கு ஒரு வடிவம், நிலவுக்கு ஒருவடிவம் மனிதனுக்கு ஒரு வடிவம் என்று இருப்பது. மாதிரி கடவுளுக்கும் ஒரே வடிவம் தான் இருந்திருக்க வேண்டும். என்று கருதினேன்.  ஆனால் கடவுளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருப்பதை பார்த்து குழம்பினேன்.  அந்த குழப்பம் வந்த போது கடவுளைக் கும்பிடுவதையும் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் திராவிட இயக்க கொள்கைகளில் என்னைத் தோய்த்துக் கொண்ட போது என் கேள்விகளுக்கு விடை கிடைத்தது.  கடவுள் என்பது உருவம் சம்பந்தப்பட்டதல்ல உளவியல் சம்பந்தப்பட்ட தென்று புரிந்து கொண்டேன்.

அறிவியல் கருத்துக்களையும் உண்மைகளையும் பாடல் வழியே தமிழ் ரசிகர்களுக்குக் கடத்தியிருகிறீர்கள்.  இதற்கு உங்களுக்கு தூண்டுதல் எது?

நான் திரையுலகதிற்கு வந்த போது பாடல் மொழி களைத்துப் போயிருந்தது.  காதலைப் பாடி அலுத்துப் போயிருந்தது.  ஏறாளமான அற்புதமான பதிவுகளை எல்லாம் கவிஞர்கள் செய்துவிட்டு போயிருந்தார்கள்.  எழுதுவதற்கு எதுவுமில்லையோ எல்லாம் சொல்லிவிட்டார்களே,  நாம் எழுத ஒன்றுமில்லையோ என்கிற வியப்பும் அச்சமும் வந்தது.

அப்போது அவர்கள் சொல்லாத செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டு வர வேண்டுமென்றால் எது சிறந்தது என்று யோசித்தேன்.   காதலைக் கூட விஞ்ஞானபூர்வமாகப் பார்க்க வேண்டும்; வாழ்கையைக்கூட விஞ்ஞான பூர்வமாக பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.   பாட்டு என்பது களிப்பூட்டுகிற கருவியாக மட்டுமல்லாமல், கற்றுத் தருகிற கருவியாகவும் இருக்க வேண்டும் என்றூ தீர்மானித்தேன்.

நான் ஏற்கனவே பியூசியில் விஞ்ஞான மாணவன். கடவுள் நம்பிக்கை அற்றவனுக்கு விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வரும்.  அதன்படி விஞ்ஞானச் செய்தியைப் பாட்டுக்குள் கொண்டுவந்து வைத்த போது பாட்டுக்கு அர்த்தமும் புது நிறமும் கிடைத்தன.

குத்துப் பாட்டு - குடிகாரப் பாட்டு என்று சினிமாவில் ஒரு கவிஞன் தள்ளப் படும் போது குற்ற உணர்ச்சி மற்றும் சங்கடம் இருக்குமா?

இருக்கத்தான் செய்கிறது.  மறைக்க விரும்பவில்லை நான் இதற்காகவா தமிழ் செய்ய வந்தேன் என்கிற கோபமும் சலிப்பும் இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் அதுவும் சேர்ந்ததே கலை என்று எனக்குத் தெரிகிறது.  சுத்தமான காற்றை எல்லோரும் சுவாசித்துவிட முடியாது.  நம் உடம்பே கரியமில வாய்வை வெளியேற்றும்படிதான் படைக்கப்பட்டுள்ளது.  ஆகவே நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்வும் கலையும்,  எனவே இரண்டுக்கும் உடன்பட வேண்டியிருக்கிறது.   நான் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறேன் என்றால் அது நல்ல் நுரையீரலாக இருக்க முடியாது.

இப்படிப்பட்ட பாடலை நான் எழுத மாட்டேன் என்று நீங்கள் எழுத மறுத்த அனுபவம் உண்டா?

மிகவும் கொச்சையாக எழுதச் சொன்னபோது அப்படி நான் சொன்னதுண்டு.  ஆடை கட்டிய வார்த்தையிலும் பாலுணர்வைச் சொல்ல முடியும் என்று போராடி மாற்றி எழுதிக் கொடுத்ததுண்டு.

முதல் தேசிய விருது, ஆறாவது தேசிய விருது அனுபவங்களை ஒப்பிடிவீர்களா ?

முதல் தேசிய விருது ஒரு பரவசம், சின்னதாக ஒரு ஆனந்தக் கண்ணீர்,  ஆறாவது தேசிய விருது ஒரு செய்தி.

நன்றாக எழுதும்போது குறைவாகக் கொடுத்தார்கள்; மோசமாக எழுதும்போது அள்ளித் தருகிறார்கள் இதுதான் சினிமா “ என்றார் வாலி, உங்களுக்கு இப்படி நேர்ந்ததுண்டா?

அவர் சொன்ன உண்மைகளில் இதுவும் ஒன்று.  வாலி சொல்லிவிட்டார்.  நான் சொல்ல முடிவதில்லை.

திரைப்படம்- பாடல் இன்று கேளிக்கை, கொண்டாட்டம் என்று பொழுது போக்குக் கலாசாரத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்றனவே?

இது உண்மைதான்.  எல்லாக் காலத்திலும் பொழுது போக்கு இருந்திருக்கிறது.  உழைப்புக்குப் பிறகுதான் துய்ப்பு என்று இருந்தது போய்,  துய்ப்பே உழைப்பு என்று ஆகிறபோது ஒரு சமுதாயம் மேம்பட முடியாது.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு பங்களிப்பு செய்து விட்டுத்தான் துய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இது சம்பந்தமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீங்கள் எழுதியதில் குறைந்த சம்பளம் பெற்ற பாடல் எது?  அதிகம் பெற்றது எது?

குறைந்த சம்பளம் பெற்ற பாடல் முதல் பாடல்.  பாரதிராஜா ஐம்பது ரூபாய்க் கட்டைக் கொடுத்து எடுத்துக் கொள்ளச்சொன்னார்.  நான் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டேன்.  ‘ பொன்மாலைப் பொழுது’ பாடலுக்கு நான் எடுத்துக் கொண்ட சம்பளம் ஐம்பது ரூபாய்.  அதிகம் பெற்ற பாடல்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிற பல படங்கள்.

கடவுள் மறுப்புக் கொள்கையால் பக்தி சார்ந்த சிலவித பாடல்களை எழுதும் வாய்ப்பை இழந்திருக்கிறீர்களே?

அதைப் பற்றி நான் வருத்தப் படவில்லை.  கடவுளே அதுபற்றிக் கவலைப்படாத போது நான் ஏன் கவலைப் பட வேண்டும்.

திரைப்படம் பார்ப்பதில் நீங்கள் எந்த ரகம்?  அவ்வப்போது பார்பீர்களா? ஒரே நேரத்தில் பல படங்களையா?

தினந்தோறும் ஒரு படம் என்று பார்க்கிற வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.  புதிய படங்களோடு நான் பழைய படங்களின் ரசிகனாகவும் இருக்கிறேன்.

ரஜினி, கமல் இருவரிடமும் இறுக்கமான நெருக்கமான நட்பு உண்டு உங்களுக்கு, அவர்களிடம் வியந்த நிகழ்ச்சிகள் பல இருக்கும்.  ருசிக்க முந்திரியாக தலா ஒன்று கூறுவீர்களா?

ரஜினிகாந்த் உடல் நலம் தேறிவந்த போது அவரை முதன் முதலாகச் சந்தித்தேன்.  அந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.  அப்போது நான் ஒன்று தெரிந்து கொண்டேன். இவர் உணமையாகவே மனதில் பக்குவப் பட்ட மனிதர் என்று.  கிட்டத்தட்ட வாழ்வை இழந்து மீண்டும் பெற்று வந்த நிலையில் வாழ்வு, மரணம் இரண்டையும் சமமாகப் பார்கிற மனநிலையை எண்ணி வியந்தேன், ஆச்சர்யப்பட்டேன்.  எனக்குப் பெருமையாக இருந்தது.  உண்மையிலேயே வாழ்க்கை அவரைப் பழுக்க வைத்துப் பக்குவப்படுத்தியிருக்கிறது, என்று உணர்ந்தேன்.

கமலிடம் நான் பார்த்து வியந்தது ஒன்று உண்டு.  போர்க்களம் என்று ஒன்று வருகிறபோதுதான் ஒருவரது மேன்மை தெரியும்.  ‘விஸ்வரூபம்” படத்திற்குச் சிக்கல் வந்த போது அதை அவர் கையாண்ட விதம் அவர் மிகவும் பக்குவமான மனிதர், நெளிவு சுளிவு தெரிந்த ஒரு ராஜதந்திரி, எந்த நிலையிலும் வார்த்தைகளைச் சிதறவிடாதவர் என்று புரிந்து வியந்தேன்.  அந்த நிலையில் வேறு ஒருவராக இருந்திருந்தால் சிதறிப் போயிருப்பார்கள்.  தன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவர் பண்பு, மேலும் அவர் மேல் மதிப்பைக் கூட்டியது.

இந்த இருவரும் பக்குவத்தில் முழு மனிதர்களாகத் தெரிகிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள்.  அப்பழுக்கற்ற இலக்கிய நண்பர்களைக் கட்சிக்கு ஒருவர் வீதம் கூற முடியுமா?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நட்புக் கூட இலக்கியம் சார்ந்த நட்புதான்.  வைகோ அவர்களின் நட்பு இலக்கியம் சார்ந்ததுதான்.  பாரதீய ஜனதா கட்சியின் இல.கணேசன் நல்ல இலக்கிய நண்பர்.  கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் இலக்கியம் பேசும் நண்பர்.  காங்கிரஸில் குமரி அனந்தன்.  இப்படி நண்பர்கள் இருக்கிறார்கள்.  அ.தி.மு.கவில் நண்பர் காளிமுத்து முன்பு இருந்தார். அவர் இப்போது இல்லையே.

காகிதத் தமிழ் கணிப்பொறித் தமிழாகிவிட்ட சூழலில், நீங்கள் எப்படி வாகனம் மாற்றிப் பயணம் செய்கிறீர்கள் ?

மாறித்தானே தீர வேண்டும்.  வாகனங்கள் மாறியது மாதிரி.  நான் கட்டை வண்டியிலிருந்து விமானத்திற்கு மாறியது மாதிரி.  இந்த வாகனத்திற்கும் மாறித்தான் ஆக வேண்டும்.

கணினி யுகத்தில் தாய்மொழியில் படிப்பது குறையும் அபாயம் உள்ளதே ?

குறைந்து கொண்டே போகிறது என்பது கவலை தருகிறது.  மொழிக்கல்வி என்பது வயிற்றோடு சம்பந்தப் படுத்தப்பட்டால் தமிழ் தேய்ந்து போய்விடும்.  தாய் மொழி என்பது பண்பாட்டோடு சம்பந்தப் படுத்தப்பட்டது என்று நம்பினால் தமிழ் மொழி வளரும்.  தாய்மொழி என்பது உங்கள் கலாசாரத்தோடு தொடர்புடையது என்று பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.
Download As PDF

Tuesday, October 29, 2013

கரப்பான்களை ஒழிக்க ஐடியா கேட்ட பிரபல வலைபதிவர்

சமீபத்தில் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியாகி இருந்தது (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்). தலைப்பு இதுதான் “சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான் பூச்சி பண்ணை ”. பால் பண்ணை ,கோழிப்பண்ணை,ஆட்டுப் பண்ணை போல் இது என்ன ? இந்த கேள்விதான் படித்தவர்களின் எண்ணம். 

இந்தியா ஒரு கட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தது. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதி விலக்கல்ல.  என் தந்தை மற்றும் அந்த கால பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். கடுமையான பஞ்சம் தலை விரித்தாடிய அந்த கால கட்டத்தில் மக்கள் சப்பாத்திகள்ளியின் சதைப் பகுதியையும்,எலிகளையும், ஈசல்களையும் பிடித்து பொறியல் செய்து சாப்பிட்டதை கதை கதையாக சொல்வார்கள். 

சைனா காரர்கள் எதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவார்கள் என்ற கருத்தும் உண்மையே. சிலவகை கூட்டு புழுக்கள், வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சிகளை வறுத்து சாப்பிடுகிறார்கள். தவளை சூப், இவைகள் அறுசுவை உணவின் ஒரு அங்கம்.   கரப்பான்களை உலரவைத்து மருந்துகள், அழகு சாதனப் பொருட்களில் பயன் படுத்துகிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னாடி ரகசிய கரப்பான் பண்ணை வைத்திருந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆனார். (சின்ன கல்லு பெத்த லாபம் !)
கொதிக்கும் நீரில் போட்டு இவற்றை கொன்று வடாம் காயவைப்பதை போல் காய வைத்து பயன் படுத்துகிறார்கள்.

சீனா மற்றும் தென்கொரிய பல்கலைக் கழகங்கள் இதற்கென்றே ஆய்வு துறைகளை வைத்துள்ளது.  பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன எதற்கு? இவைகள் எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்தாகுமா? ஏன் இந்த எண்ணம் என்றால் அணுகுண்டின் கதிர்வீச்சை கூட தாங்கி இவை உயிர் வாழ்ந்திருக்கின்றன என்பது தான்.

சட்னி போல அரைத்து தலையில் பூச, சொட்டை தலையில் முடி வளரும் என்கிறார் 78 வயதான சீன வைத்தியர் ஒருவர். (உவ்வே...)
எதை தின்றால் பித்தம் தெளியும் ? என்ற கதைதான்.

இதைவிட கறை நல்லது என்ற விளம்பரம் போல ஐ.நா வும் பூச்சிகளை சாப்பிடலாம் தப்பே இல்லை என்று சான்றளிக்கிறது.

நம்முடைய பிரபலபதிவர் (தமிழ்வாசி பிரகாஷ்) வீட்டிலும் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.  என்ன செய்வது என்று பரிதவித்த அவருக்கு நம் சகாக்கள் சொன்ன அட்வைசை படியுங்களேன். (சீரியசான மேட்டருக்கு பின் கொஞ்சம் சிரிப்போமே..! )

Download As PDF

Saturday, October 26, 2013

மூளைக்கு வேலை புதிரின் விடை இந்த பதிவில்


இந்த புதிரில் உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா ? என்பதே கேள்வி.

இந்த காணொளியை பாருங்கள்அதாவது ஒன்றுடன் ஒன்று அச்சில் இணைக்கப்பட்ட மூன்று தொடர் பல் சக்கரங்களில் முதல் சக்கரம் வலப் பக்கம் சுழன்றால் மூன்றாவது சக்கரம் வலது பக்கம் திரும்பும்.   முதல் சக்கரம் இடது பக்கம் திரும்பினால் இணைப்பில் உள்ள மூன்றாவது சக்கரம் இடப்பக்கம் திரும்பும்.
இந்த படத்தில் மொத்தம் 17 பல் சக்கரங்கள் இருக்கு (அதாவது ஒன்றைப் படை) முதல் பல் சக்கரம் இடது புரம் திருப்பப்படுகிறது  இறுதியில் இருக்கும் சக்கரம் இடது புரம் தான் திரும்ப வேண்டும்.

 


ஆனால் இந்த தொடர் இணைப்பின் நடு நடுவில் நாடாவால் (belt ) இணைக்கப்பட்டு உள்ளது அதனால் உறுதியாக மேல் சொன்னது போல் முடிவை சொல்ல முடியாது.  இந்த பெல்ட் தான் இந்த புதிரின் டிவிஸ்ட்.   இடையில் இரண்டு டிவிஸ்ட்டான பெல்டுகள் இருக்கே அதனால சக்கரம் சுத்தாம நிக்குமா ? என்றால்  நிற்காது. வேகம் வேணா குறையும்.

இரண்டு சக்கரங்கள் பெல்டால் இணைக்கப்பட்டால் முதல் சக்கரம் வலதுபுரம் சுற்றினால் இரண்டாவது அப்படியே தான் சுற்றும்.

ஆனால் பெல்ட் டிவிஸ்டாகி இருந்தால் முதல் சக்கரம் வலது புரம் என்றால் இரண்டாவது இடது புரம் சுற்றும்.

(வைஸ்வெர்சா  இடதுன்னா வலது)

இந்த விளக்கப் படம் புதிரை விடுவிக்கிறது.

புதிருக்கான விடை :  இரண்டு (2)

கலந்து கொண்டவர்களில்
55 % பேர்  ஒன்றை தொடும் என்றும்
36 %  பேர் இரண்டை தொடும் என்றும்
4%  பேர் சக்கரம் சுற்றாது என்றும் பதில் அளித்திருந்தார்கள்.

புதிரை விடுவிக்க கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கீழே உள்ள படத்தில் ஒரு எலி கலாட்டா செய்கிறது.  அந்த எலி எங்கே ? என்று கண்டுபிடியுங்கள்.


கீழே உள்ள படத்தில் ஒரு  " C "  ஒளிந்திருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா ?
Download As PDF

Wednesday, October 23, 2013

ஐ-பேட் மேஜிக் டிரிக் என்ன?


அந்த கால இந்தியாவில் நடுத் தெருவில் செய்து காட்டப்படும் ஒரு மேஜிக் வெளி நாட்டினரே அதிசயத்தது.  கயிறு பாம்பாட்டி வாசிக்கும் மகுடிக்கு தகுந்த படி நட்டமாக கம்பு போலே எழும்பி நிற்குமாம், சிறுவன் ஒருவன் அதமேல் ஏறி நிற்பானாம். நான் இந்த மாயாஜாலத்தை பார்த்தது இல்லை (இந்த மேஜிக் புகைப்படம் கீழே)   காலம் மாறும் போது டெக்னாலஜியும் வளர்கிறது அது போல மேஜிக்கின் வளர்ச்சியும் அதற்கு தகுந்தார் போல் மாற்றம் பெறுகிறது.


யு-டியூபில் வெளிவந்திருக்கும் இந்த ஐ-பேட் மேஜிகை பலரும் பார்த்து வியந்து இருக்கலாம்.

இந்த ஐபேட் மேஜிக்கிற்கு மூன்று முக்கிய அம்சங்கள் வேண்டி இருக்கும்

1. டைமிங் சென்ஸ் - நொடிக்கு தகுந்தாற்போல நுணுக்கமான அசைவுகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

2. ஏற்கனவே திட்ட மிட்டு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், அதை புரிந்து செயல்படுவது மிக மிக அவசியம்.

3. வீடியோவில் சம்பந்தப்பட்ட மேஜிக் டிரிக் பொருட்கள்.


இந்த ஐபேட் மேஜிக் அவர் செய்வதற்கு கண்டிப்பாக தீவிர பயிற்சி செய்திருப்பார். இவர் திறமையான மேஜிக் நிபுணர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விளக்கமெல்லாம் நான் இங்கே சொல்ல காரணம் எதையும் நம்பாமல் கொஞ்சம் யோசித்து பார்க்கவேண்டும் ஏமாற்றுகாரர்கள் நிறைந்த உலகம் இது என்பதை சொல்வதற்கே.  இந்த மேஜிக் நிபுணரை தரம் தாழ்த்துவது எம் நோக்கமல்ல.


முதலில் மூன்றரை நிமிசம் ஓடக்கூடிய இந்த விடியோவைப் பாருங்கள். பிறகு என் விளக்கத்தை படியுங்கள்.


தயாராக வைக்கப்பட்டிருக்கும் இந்த நவீன மேஜிக் பெட்டியின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்கிறார். உட்கார்வதற்கு முன் சேரில் முன்னமேயே வைக்கப்பட்ட ஐபேடை கையில் எடுக்கிறார். இந்த ஐபேட் பின்னாடி, முன்னாடியே போட்டோ ஒட்டி வைச்சிருக்கார். லாகவமாக அதை கையில் எடுத்து ஐபேடை ஆன் செய்கிறார்.

ஐந்து வரிசை கொண்ட ஐகான்கள் நிறந்திருக்கும் படி ஐபேடில் செட் செய்து வைத்திருக்கும் படங்களை டச் மூலமாக அவற்றை நகர்த்திக் காட்டி டக் கென பின்னாடி இருக்கும் படத்தை வெளியே எடுக்கிறார் (கவனிக்க ஐபேட் முன்னாடி இருந்து இல்லை பின்னாடி இருந்து)
போட்டோவை மேஜிக் பாக்ஸில் வைத்த கையோடு அங்கிருந்த நூலோடு இணைந்த பிளாஸ்டிக் மணியை எடுத்து கையினுள் மறைத்து வைத்துக்கொள்கிறார். பேசிக்கொண்டே விடியோவை ஆன் செய்கிறார். நம் கவனம் முழுவது அவர் பேசுவதில் தான் இருக்கும்.  மிகச்சரியாக தொங்கும் மணியை எடுக்க கையை ஐபேடினுள் விடுவது போல் பாவனை செய்கிறார். நூலில் இருக்கும் பசையை அழுத்தி ஒட்டிய படியே வெளியே இழுத்து அது ஐபேடிகுள் இருந்து எடுப்பது போல பாவனை செய்கிறார். (சில நொடிகளில் நடக்கும் செயல் என்பதால் இது கண்டிப்பாக நம்மால் அவர் செய்வது என்ன என்பது தெரியாது)

பிளாஸ்டிக் மணியை மேஜிக் பாக்சில் போட்டு தயாராக அங்கு இருக்கும் சின்ன போட்டோவை உள்ளங்கைக்குள் மறைத்து எடுத்துக் கொள்கிறார்.

அடுத்து ஒரு இமேஜை கிளிக் செய்து அந்த இமேஜை விரல்களால் சுருக்கி டக் கென்று உள்ளங்கைக்குள் மறைத்து வைத்திருந்த போட்டவை ஐபேட் மேலிருந்து எடுப்பதாக காட்டுகிறார்.

அடுத்து ஒரு ஃப்ளாஸ் (flash image - sleeping mode of sun ) இமேஜை கிளிக் செய்கிறார் அதில் நகரும் சூரியனை சுட்டுவிரலால் நகர்த்துவது போல் செய்து காலை மதியம் மாலை இரவு என்று நான்கு எஃபக்ட்டும் விரலால் நகர்த்தும் சூரியன் தான் என்பதை நம் மூளையில் பதிய வைக்கிறார். (கில்லாடி)

அடுத்து வரும் இந்த மேஜிக் (டென்னிஸ் பால்) மிகத்திறம்பட இம்மி பிசகாமல் செய்யப் பட வேண்டிய அபூர்வமானது.

வலது கையால் டென்னிஸ் பந்தை எடுத்துக் கொள்கிறார் அதை லாவகமாக ஐபேடை வைத்து மறைத்தபடியே ஐபேடின் பின்னால் அழுத்தி பிடித்து கொள்கிறார். டென்னிஸ் பந்து இருக்கும் வீடியோ இமேஜை பெரிது படுத்து வதுபோல் செய்கை செய்து ஐபேடின் பின்னால் நழுவ விடும் பந்தை இடது கையில் பிடித்து வைத்து கொள்கிறார் (இப்போது கையை அவரால் விரிக்க முடியாது)அதன் பின் ஐபேடிற்குள் எடுப்பது போல் உள்ளங்கையில் வைத்திருக்கும் பந்தை காட்டுகிறார். அதன் பின் ஐபேடினுள் வைத்து அமிழ்த்துவது போல் பாவனை செய்கிறார். ஆனால் உண்மையில் அவர் இடது கையிலேயே இருக்கிறது.  ஐபேடின் பின்னால் இரண்டு கைகளின் நடு விரல்களை பயன் படுத்தி பிடித்தபடியே நகர்த்தி வலது கையில் வைத்து ஐபேடை திரும்பி காட்டி பின் நெஞ்சோடு சேர்த்தணைத்து பின் கீழாக நழுவவிட்டு அசத்துகிறார்.

அடுத்த வீடியோ ஓடுகிறது ஓரப்பகுதியில் வாயால் ஊதுவது போல் செய்கிறார் வீடியோவில் வரும் நீயூஸ் ரீடரின் தலைமுடி பறக்கிறது.


அடுத்து நேரடி ஸ்கைபை போல சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சி.

உள்பகுதி ரூமில் இருக்கும் நபர் ஸ்டாரவை உயர்த்திப் பிடிக்க அதை இவர் ஐபேட் உள்ளிருந்து எடுப்பது போலவும். அந்த நபர் கையில் வைத்திருக்கும் குளிர் பானத்தை இவர் உறிஞ்சி குடிப்பது போலவும் அமைக்கப்பட்டது.

இதற்கு இவர் ஸ்டாராவை வலது கையில் மறைத்து பிடித்து வைத்து செய்து விடுகிறார். ஸ்டாராவை தூக்கி போட்டுவிடுகிறார்.

அடுத்து செம்மையான ஒரு மேஜிக் பாலை வீடியோவில் தெரியும் நபரின் தலை மேல் ஊற்றுவது.

மேஜிக் பெட்டியில் இருந்து பால் நிரம்பிய கண்ணாடி டம்ளரை எடுத்து ஐபேடில் உள்ளிருக்கும் நபரின் தலைமேல் பாலை ஊற்றுகிறார் பால் எங்கும் வெளியே சிந்துவது இல்லை.

இதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒன்றினுள் ஒன்று அமிழ்த்தி வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர் (பளாஸ்டிக்காகவும் இருக்கலாம்) இரண்டு டம்ளர்களின் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் கொஞ்சூண்டு பால் நமக்கு முக்கால் கிளாஸ் இருப்பது போல தோற்றம் தருகிறது. மேல் பகுதி மூடியுடன் இருக்கும்.  உள்ளிருக்கும் கண்ணாடி கிளாசை மேலாக தூக்கினால் பால் கீழே போய் விடும். கவனித்து பார்த்தால் காட்சியின் இறுதியில் டம்ளரில் கொஞ்சூண்டு பால் மீதம் இருக்கும்.

நீங்கள் செய்ய முடியுமா? என்று என்னை கேட்டால் என்னால் நிச்சயமாக செய்ய முடியாது என்றுதான் சொல்லுவேன். மேஜிக் செய்வதற்கு தனித்திறமை வேண்டும். நாம் சொல்லுவது எளிது.

Download As PDF

Monday, October 21, 2013

மூளைக்கு வேலைஇது ஒரு கற்பனையான இயந்திரம்,இதில்  இரண்டு விதமான மெக்கானிசங்கள் உள்ளன
(1.)பல்சக்கரங்கள் இணைப்பு, (2) அதனுடன் நாடா (பெல்ட்) இணைப்பு

உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா என்பதே கேள்வி. இதோடு நான் இன்னொரு கேள்வியையும் இணைத்திருக்கிறேன் அது முள் இரண்டு எண்களையும் தொடாது என்பது.  (இது ஏன் என்றால் இந்த மெக்கானிசம் வேலை செய்யாது போனால் முள் எந்த எண்ணையும் தொடாது இல்லையா ? )உங்களது பதிலை மேலே உள்ள ஓட்டு பெட்டியில் போடவும்.


 மொபைல் மூலமாகப் படிப்பவர்கள் view web version - ஐ கிளிக் செய்து வந்தால் உங்கள் பதிலை பதிவு செய்ய முடியும்.

இந்த கேள்வியின் பதிலை வரும் சனி (26.10.2013) அன்று வெளியிடுகிறேன்.  ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்து டப்பியில் கேட்கலாம்.

Labels: அறிவியல் புதிர், மூளைக்கு வேலை
Download As PDF

Tuesday, October 15, 2013

எறும்புதின்னி


எறும்புதின்னி எனும் இந்த விலங்கு பீடபூமி,மழைக்காடுகள் மற்றும் மலைக் குன்று பிரதேசத்தில் வசிக்கக் கூடியது. வெப்பமண்டல பிராணி. இந்தியாவில் மட்டும் இன்றி ஆப்பிரிக்கா, இலங்கை, நேபாள், பாகிஸ்தானில் சில பகுதிகளில் இருக்கிறது. மேற்சொன்ன பகுதிகளிலும் பரவலாக காண முடியாது.

இதனுடைய உடலின் மேல் பகுதி மற்றும் வால் பகுதிகள் முழுமையும் கெட்டியான கடினமான செதில்களை (Perils) கொண்டிருக்கும். ஆமை ஓடு போல இதன் மேல் கூடுதான் இதற்கு பாதுகாப்பளிக்கும் கேடயம். புலி போன்ற விலங்கு இதை தாக்க வரும் போது பந்து போல சுருண்டு கொள்ளும்.

 இதற்கு பிடித்த மற்றும் முக்கிய உணவு கரையான்கள், எறும்புகள். புற்றுக்களில் உள்ள இவற்றை இதன் நீண்ட நாக்கால் பசைபோல ஒட்டி இழுத்து உண்கிறது. 80 சென்டிமீட்டர் நீளம் உள்ள இதற்கு நாக்கு 40 சென்டிமீட்டர்கள். சாதுவான இப்பிராணி குழிகளிலும், பொந்துகளிலும் வசிக்கிறது. இதன் சுவையான இறைச்சிக்காகவும், மருத்துவ எண்ணெய்க்காகவும் இது வேட்டையாடப் படுகிறது.

ஆண் பெண் அலுங்குகள் வெளியிடங்களில் இல்லாமல் பொந்துகளுக்குள்ளேயே இணைகின்றன. பிறந்த குட்டி இரண்டு நாட்களிலேயே அதன் செதில்கள் கெட்டித்தன்மை அடைகிறது, அதோடு அப்போதே பந்தாக தன்னை சுருட்டிக்கொள்ளவும் செய்யும். சமயங்களில் தாய் அலுங்கு தன்னோடு சேர்த்து பந்தாகவும் சுருட்டிக்கொள்ளும். மெதுவாக மேப்பம் பிடித்து செல்லும் அலுங்கு இரைதேட பயணிக்கும் பொழுது குட்டிகள் இவற்றின் மேல் அமர்ந்து கொண்டு சவாரி செய்யும்.

கேரளாவில் இதனை ஈனம்பேச்சி என்றும்
சிங்களத்தில் இதனை காபாலீவா என்றும்
செந்தமிழில் அலங்கு (அ) அலுங்கு என்றும்
ஒரியாவில் பஜ்ராகப்டா என்றும்
ஆங்கிலத்தில் பங்கவ்லின் pangolin என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கில வார்த்தை மலேய வார்த்தையின் திரிபு (அந்த பாஷையில் இதன் அர்த்தம் சுருட்டி)


அலுங்கு தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இவை ஆயிரக்கணக்காக 2000 ஆம் வருடம் வரையிலும் திருட்டு தனமாக கடத்தப் பட்டு விற்கப் பட்டன (சரியான புள்ளிவிவரம் இல்லை) இதன் பாதுகாப்பிற்காக இயற்கை அளித்த செதில்களே இவற்றிற்கு எமனாகவும் மாறியது மனிதனின் பேராசையால். ஆம் இதன் செதில் களில் இருந்து பெறப்படும் எண்ணெய் புற்றுநோயை குணப்படுத்துவதாக சொல்லி இவை அழிக்கப்பட்டு வருகின்றன. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க அலுங்குகள் கடத்தல் கண்காணிக்கப் படுகின்றன.

இருப்பினும் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த இனம் இருக்குமோ என்பது ( ? )


Labels: Scaly Anteater, pangolin,
Download As PDF

நிலப்பரப்பை கடல்கள் விழுங்கும் ஆபத்து


கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தாழ் நிலப்பரப்புகள் கடல் விழுங்கும் அபாயத்தில் உள்ளது. உலக அளவில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது.

கடல் மட்ட அளவானது, கடல் ஓரப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அலைகளின் போக்கு அளவீடுகள், மற்றும் சாட்டிலைட் கணக்கீடுகள் கொண்டு கணிக்கப் படுகிறது.

(Global mean sea level - GMSL) உலக கடல் மட்ட அளவிட்டு தரம் தெரிவிக்கும்  புள்ளிவிவரம் என்னவென்றால் கடந்த நூற்றாண்டில் 4 முதல் 6 இன்சுகள் ( 10 முதல் 20 சென்டிமீட்டர்கள்) கடல் மட்டம் உயர்ந்துள்ளது.  கடந்த 20 வருடங்களில் வருடத்திற்கு சுமார்  0.13 இன்சுகள் (3.2 மீட்டர்கள்) உயர்ந்து வருகிறது. முன்பிருந்ததை விட கடந்த 80 வருடங்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது.


கடந்த இரண்டாயிரம் வருடங்களில் கடல் மட்ட உயரம் இந்த அளவில் உயர்ந்ததில்லை. எப்போது பூமி வெப்பமயமாதல் பிரச்சனைக்குள்ளானதோ அப்போதிருந்து, அதாவது 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் இருந்து கடல் மட்ட உயர்வு ஆரம்பித்து விட்டது. உலக அளவில் தற்போது இருக்கும் மட்ட அளவை விட சராசரியாக மூன்று அடிகள் 2100ல் உயர்ந்திருக்கும்.

குறிப்பாக 1880க்கு பிறகு பெரிய மாற்றம் ஏதும் இல்லாது இருந்த கடல் மட்ட உயரமானது 1992 ல் இருந்து கனிசமாக உயர ஆரம்பித்தது என்பதை சாட்டிலைட் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது  OECD (Organisation for Econimic co operation and development)யின் கணிப்பு.


வரும் 2070 ல் பெரிய கடற்கரை நகரங்களில் 136 பெரிய கடற்கரை நகரங்களில் கடற்மட்டம் உயரும் அபாயம், வசிக்கும் 150 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்டம் உயர்வதால் பாதிப்படைவார்கள், அதனோடு 35 டிரில்லியன் டாலர் சொத்துகளும் சேதமடையும். உலக அளவில் 9% சதவீத இழப்பு(GDP). இது குறைந்த பட்ச கணக்கீடு


கடல் மட்டம் உயர முக்கிய காரணங்கள் :

1. உலக வெப்பமயமாதல் Thermal expansion
2. பனிமலைகள், பனிப்பாறைகள் உருகுதல் Melting of glaciers and polar ice caps: 
3. கிரீன்லாந்து மற்றும் மேற்கு அன்டார்டிகா பனி பாறைகளின் இழப்பு   Ice loss from Greenland and West Antarctica:

உலக வெப்பமயமாதல் கடல் மட்டத்தை உயர்த்த காரணமாகிறது. 


Thermal expansion :

பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்களால் வெளியாகும் வெப்பம் பூமியை சூடாக்கி வருகிறது. கார்பன் டையாக்சைட் மற்றும் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாயுக்களால் இது அதிகரித்து வருகிறது. கடந்த நூறு வருடங்களில் கடல் மட்டத்தினை சராசரியாக எட்டு இஞ்சுகள் உயர்த்தி விட்டது.  தற்போது எரிபொருட்டகளின் உபயோகத்தை நிறுத்தி வைத்தால் கூட வாயுக்களின் ஊடே அமிழ்ந்துள்ள வெப்பம் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு குறையாது என்கிறார்கள். அப்படியானால் எதிர்காலத்திலும் கடல் மட்ட உயரத்தினை தவிர்க்க இயலாது போகும்.


பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், கடல் நீரின் வெப்பம் உயர்கிறது. 80 சதவீத வெப்பம் கடலால் உறிஞ்சப்படுகிறது. கடல் மட்டம் உயர இதுவும் முக்கிய காரணம்.

வெப்பமான கடல் நீர், கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனி பாளங்கள், பனிமலைகளை உருக வைக்கிறது. கோடைகாலங்களில் அதிகமான உருகுதலும், குளிர் காலத்தில் பனி குறைவாக இருப்பதும்.


பூமியின் வெப்பம் அதிகரிப்பு ஏன் ? அதிக அளவில் எரிபொருள் எரிக்கப்படுவது, இயற்கை நடவடிக்கைகள், வெப்பத்தை தக்கவைத்து கொள்ளும் வாயுக்களின் உயர்வு, சூழல் மாசுக்களின் அதிகரிப்பு இப்படி பல காரணிகள்.

ஆறுவருடங்களூக்கு முன்னால் Intergovernmental panel on climate change (IPCC) ஐபிசிசி தெரிவித்த எதிர்பார்க்கும் குறியீட்டு அளவீட்டை காட்டிலும், எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் குறியீட்டு அளவீடு அதிகமாகி செல்கிறது.


கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்.

  • நல்ல நிலங்கள் உவர்நிலங்களாக மாறும்
  • தாழ்வு நிலப்பரப்பு தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்
  • பறவைகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் மற்றும் மீன்வள பாதிப்பு
  • மக்கள் இருப்பிடம், உயிர்சேதம் பொருள் இழப்பு
  • கடல் சீற்றம் அதன் பாதையில் உள்ள பகுதிகளை நாசமாக்கும்.

சாண்டி புயல் போல பல அதிதீவிர புயல்கள், சுனாமிகள் உருவாக புவி வெப்பமடைதல் தான் காரணம்.


படங்கள் பனிமலைகளும் பனிபாளங்களும் உருகிவருவதை காட்டுகிறது.


வரும் 2100 ல் 2.5 அடி முதல் 6 அடிவரை கடல் மட்டம் உயர்வு ஏற்படலாம் என கணிக்கப் பட்டிருக்கிறது. இந்த கூற்றின் படி நடந்துவிட்டால் உலகின் பல கடற்கரை நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதில் இன்னும் ஒரு ஆபத்து என்னவென்றால் பூமியின் வெப்ப சமநிலை பாதிப்பு ஏற்பட்டு கிரீன்லாந்தின் பனிமலை முழுவதும் உருகுவிட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இலண்டன், லாஸ் ஏஞ்சல் முதற்கொண்டு, மாலத்தீவு மணிலா, பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.


மாலதீவின் மக்கள் தொகை 3,94,000.  தலைநகரான மாலேவினை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கடற்கரை சுவர்கள் கடல் சீற்றத்தில் இருந்து அரணாக பாதுகாக்கிறது.  இந்திய கடற்பிராந்தியத்தில் மாலத்தீவு கூட்டம் கடல் மட்ட அளவில் தாழ்வான நிலபரப்பு. 2100 அளவில் ஏற்படும் கடல்மட்ட உயரம் இத்தீவுகளை கபளீகரம் செய்யும் ஆபத்து உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது.

உலகின் அநேக கடற்கரை நகரங்கள் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது.

உலகநாடுகள் இணைந்து உலக வெப்ப மயமாதலை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது மிக மிக அவசியம்.   

labels : புவி வெப்பமாதல், கடல் மட்ட உயர்வு, விழுங்கும் கடல், Sea level Rise

Download As PDF

Friday, October 11, 2013

நானூறு மில்லியன் வருட பழமையான இயந்திரம்


கடந்த ஜூலை மாதத்தில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது அந்த செய்தி சொல்லும் சேதி இதுதான்.

ரஷ்யாவின் விலாடிவாஸ்டோவில் (vladivostok) அலுமினியத்தாலான 400 வருட பழமையான இயந்திர படிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

கம்ஷட்கா பெனின்சூலாவின் ஒதுக்குப்புரமான பகுதியில் அதாவது 150 மைல்கள் தொலைவில் உள்ள டைகில் எனும் கிராமத்தில் புதைபொருள் ஆராய்சியாளர்களுக்கு (செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த) புதை படிமம் ஒன்று கிடைத்தது. இது பற்றி யுரி குளோப்(Yuri Golubev)  என்பவர் இது ஒருவகையான கியர் மெசின் போல் இருப்பதாக தெரிவித்தார். இந்த இயந்திர படிமம் (fossil) 400 மில்லியன் வருட பழமையானது.

இந்த இயந்திர படிமத்தின் படமும் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி படிமம் பிரான்ஸில் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Ancient machine gears embedded in rock

செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தில் யுரி குளோப் என்ற பேராசிரியர் இல்லை.

உண்மையில் இந்த படிமமானது பிரெஞ்சு மியூசியத்தில் வைக்கப்பட்டிக்கு, இதன் காணொளி 2007 ல் வெளிப்பட்டதாக தெரிகிறது.

பின் ஏன் ரஷ்யாவில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது ?

டூரிஸ விளம்பரத்திற்காக ரஷ்யாவில் இதுமாதிரியான செய்திகள் வெளியிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்த காணொளியில் வெளியிடப்பட்ட தவறான தகவல் மெசின் படிமம் என்பது. ரஷ்ய செய்தி வெளிப்பட்டபோது இது குறித்து விஞ்ஞானிகள் நிலைத்தகவல் எதையும் வெளியிடவில்லை. இத்தகவல் உண்மையாக இருப்பின் அவ்வாறு விஞ்ஞானிகள் மெளனியாக இருக்க வாய்ப்பில்லை.

Weekly World News  எனும் செய்தி தளமும் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.


சரி உண்மை என்னவாக இருக்கும் ?

முதலில் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இயந்திரம் என்பதே ஒரு முரண்.

கிரிநாய்ட் அல்லது கடல் லில்லி என அழைக்கப்படும் கடல் உயிரினத்தின் படிமமாக (crinoids steam fossils) இது இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இது கடலடியில் 6000 மீட்டர் ஆழத்தில் வாழும் ஒரு உயிரினம்) இதனுடைய படிமமே பார்பதற்கு கியர்கள் உள்ள இயந்திரம் போல் தோற்றம் தருகிறது.Labels : ஏன் எதற்கு எப்படி, crinoids,crinoids steam fossils,கடல் லில்லி,

Download As PDF

Wednesday, October 9, 2013

மூட நம்பிக்கைகளும் மூடிய மனசும்..

சமூகத்தில் மூட நம்பிக்கை வேரூன்றி போய்விட்ட ஒன்று.  ஒரு சிலேடைக்காகவும் யாரோவால் கிளப்பி விடப்பட்ட எண்ணங்கள் இட்டு கட்டப்பட்டு மூட நம்பிக்கையாக வடிவு எடுக்கிறது.  சினிமா , டி.வி  சக்திவாய்ந்த உடகங்கள் இவைகளில் கதைக்காக கற்பனையாக சொல்லப் படுபவை உண்மை என நம்பிவிடும் மக்களும் இருக்கிறார்கள்.  (உ.ம் : நீயா )

தற்போது கோவையில் நடைபெற்று வரும் 10 வது கானுயிர் புகைப்பட கண்காட்சி " உயிர் நிழல் 2013" .   இதில் விலங்குகள், உயிரினங்கள் மீதான தவறான மூட நம்பிக்கைகள் ஏன் தவறானவை என்பதற்கு சுருக்கமான விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.  அவற்றை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.நம்பிக்கைகளும் உண்மைகளும்

முருங்கை, புளியமரங்கள் பேய்கள் வாழுமிடம்..

நம் உடல் நலம் தான் அங்கு வாழ்கிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் உணவாகிறது. புளியும் தான்.  இந்த இரு மரங்களுமே பறவைகளுக்குப் பிரியமான வாழ்விடங்களாகும்.

பாம்புகள் பால் குடிக்கும்..

பாலூட்டிகள் மட்டுமே பால் குடிக்கும்.  பாம்புகள் ஊர்வன வகையை சேர்ந்தவை.  பாலூட்டவோ குடிக்கவோ தெரியாது அதற்கு.

மகுடி ஒலி  கேட்டால் பாம்பு படமெடுத்தாடும்..


பாம்புக்கு காது கேட்காது. பாம்பாட்டியின் மகுடி அசைவிற்கு தகுந்தவாறு தலையை திருப்பிக் கொள்ளும்.

பாம்புகள் நடனமாடிக் கொண்டே இணை சேரும்..


அது நடனம் அல்ல இரண்டு ஆண் பாம்புகளின் சண்டை.  பெண்ணுடன் இணைசேரும் உரிமைக்கான ஆடவர்களின் சண்டை அது.

நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணை சேரும்..

சேராது இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.  நாகம் நாகத்துடனும் சாரை சாரையுடனும் தான் இணை சேரும்.

பாம்பு பழிவாங்கும்..

அந்த அளவுக்கு நினைவாற்றல் கிடையாது அதற்கு.  அடிபடும் போது சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளை  நுகர்ந்தவாறே இன்னொரு பாம்பு வருவதைப் பழிவாங்க வருவதாக நினைக்கின்றனர்.  மேலும் பாம்புகளில் நிரந்தர இணை என்பதே கிடையாது.

வயது முதிர்ந்த பாம்பு மாணிக்கத்தைத் தலையில் வைத்திருக்கும்..myth

மாணிக்கம் என்பது மண்ணில் புதைந்து கிடக்கும் அரியவகைக் கல் ஆகும். இதை மெருகேற்றி விலைமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். குட்டியோ, முதிர்ந்ததோ மாணிக்கம் தரும் பாம்புகள் இல்லை.

பச்சைப் பாம்பு கண்ணைக் கொத்தும்..

தற்காத்துக் கொள்ளப் பாம்புகள் கொத்தும். அப்போது கண், மூக்கு, காது, கால், கை, எனத் தேடிக்கொண்டிருக்காது.

இருதலை, ஐந்துதலை, பத்துதலைப் பாம்புகள் உண்டு..

மரபணுக் கோளாரு காரணமாக மனிதர்கள், ஆடு, கோழிகளைப் போல் அரிதாகச் சில இருதலைகள் கொண்ட பாம்புகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் இருதலை, பல தலை கொண்ட பாம்பு வகைகள் இல்லை.

ஆமை புகுந்த வீடு உருப்படாது..

கல்லாமை, இல்லாமை, இயலாமை போன்றவைதான் ஒரு வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

விசப் பாம்பு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும்..
ஆதாரம் இல்லை.

நரி முகத்தில் விழிப்பது நல்லது. நரிக்கொம்பு அதிர்ஷ்டம் தரக்கூடியது.

கிராமங்களில் சாதாரணமாக தென்பட்ட நரிகளை தற்போது காண முடிவதில்லை.  அதன் முகத்தில் விழிப்பது யாருக்கு நன்மை என்று சொல்ல முடியாது.  மேலும் நாய் இனத்தை சேர்ந்ததால் நரிக்கும் கொம்பு கிடையாது.

நரி ஊளையிடுவது கெட்ட சகுணம்..

தனது இருப்பை அறிவிப்பதற்கான தொடர்பு மொழியே ஊழையிடுதல் ஆகும். இது மனிதர்களுக்கு  எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பூனை குறுக்கே போனால் காரியம் கெட்டுவிடும்...

உணவு தேட இனச்சேர்க்கைக்கு எனத் தனது எல்லைக்குள் நடந்து கொண்டேயிருப்பது பூனை.  மனிதர்களின் நல்ல காரியங்கள், சடங்குகள் பற்றி அதற்குத் தெரியாது.

யானை முடி செல்வத்தை தரக்கூடியது..

கழுதை, குங்கு, பன்றி போன்ற விலங்குகளின் முடியில் என்ன இருக்கிறதோ அதுதான் யானை முடியிலும் இருக்கிறது.  யானையின் வாலிலுள்ள முடியை அதிர்ஷ்டம் தரும் என்று அகற்றி விடுவதால், அதனை துன்புறுத்தும் கொசு, ஈக்களை விரட்டத் தூரிகை போன்ற வால் இல்லாமல் சிரமப் படுகிறது என்பதே கவலைக்குரியதாகும்.

தொடர்புடைய பதிவு : சகுணங்களும் மூட பழக்கவழக்கங்களும் !
Download As PDF

Tuesday, October 8, 2013

ஈஸ்டர் தீவின் விளங்காத எழுத்துக்கள்


ஈஸ்டர் தீவின் ஆதி குடிகள் ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்களை (கீற்றுகள் glyphs ) பயன்படுத்தியுள்ளனர். 

ஸ்பானியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்ததற்கு பின்னே அதாவது 1770க்கு பின் ஸ்பானிஸ் வார்தைகளை லத்தீன் எழுத்துகளில் எழுதிவந்திருக்கிறார்கள். இது 1860 வரைக்கும் நடைமுறையில் இருந்திருக்கிறது.

1860க்கு பின்நுழைந்த மிஷனரியை சேர்ந்தவர்கள் (missionaries) ஈஸ்டர் தீவின் குறியீட்டு (Rongorongo script) எழுத்துக்களை வடிவங்களின் புதிர்களை விடுவிக்க முயன்றார்கள்.  முயற்சி தோல்வி அடைந்தது.

ரெங்காரெங்கா குறியீட்டை எழுத்தை தவிர அத்தீவு மக்கள் தவு(Ta'u and Mama) மற்றும் மமா என்ற எழுத்துக்களை பயன் படுத்தி இருக்கிறார்கள்.


ரெங்காரெங்கா ஸ்கிரிப்டில் 120  வடிவங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.  பறவைகள், மீன்கள், கடவுள்களை, தாவர குறியீட்டுகளை, பல்கோண வடிவங்களை உள்ளடக்கி உள்ளது.


                                                                  pic : thanks to wikipedia

ஒவ்வொரு குறியீடும் வார்த்தைகளையோ, ஒலியையோ, கருத்து கோர்வையை,எண்களையோ வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.
ரப்பானூய் பேச்சு மொழி பாலிநேசியன் மொழியை ஒத்தது என்கிறார்கள்.

ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்கள் இன்னும் விளங்கிக் கொள்ளப்படாத எழுத்து வடிவமாகவும், ஒரு மர்மக் குறியீடாகவே உள்ளது.

தொடர்புடைய பதிவு :   ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்

label : Easter Island, Rongorongo script

Download As PDF

நகரத்திற்குள் ஒரு காட்டுப் பயணம் - உயிர் நிழல் 2013

"இந்திய நாகரீகத்தின் வேர் காடுகள் தான்.  கூட்டங்களில் இருந்து விலகியிருந்த மரங்களுடன் ஆறுகளுடன், ஏரிகளுடன் ஒன்றாய்க் கலந்து இருந்த மனிதர்களிடமிருந்துதான் இந்தியாவின் தலை சிறந்த கருத்துக்கள் வந்துள்ளன.  காடுகளின் அமைதி மனிதனின் அறிவாற்றல் பெருக உதவி புரிந்துள்ளது  " - இரவிந்திரநாத் தாகூர்.

shola எனும் ஆங்கில மொழி வார்த்தையின் மூலம் தமிழ்.  தமிழில் வழங்கப்படும் சோலையின் திரிபு தான் அது. பூஞ்சோலை, மாஞ்சோலை, பசுஞ்சோலை... இந்த பாட்டையும் கேட்டு மெய் மறந்திருப்பீங்க..
மாஞ்சோலை கிளிதானோ, மான் தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூ தானோ
நடைதேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ...

(பாடல் முத்துலிங்கம் : படம்: கிழக்கே போகும் ரயில்)

பீடபூமி பகுதியில் சோலைகள் நீர் மற்றும் தாவர இனங்களை பாதுகாக்கும் களம் எனச் சொல்லலாம்.


10 வது கானுயிர் புகைப்பட கண்காட்சி " உயிர் நிழல் 2013" நகரத்திற்குள் ஒரு காட்டுப் பயணம். அக்டோபர் 4 முதல் அக்டோபர் 16 வரை. இடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை.கண்காட்சியின் நோக்கம் :
நம் காட்டையும் காட்டுயிர்களையும் பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளிப்பது.

வரிக்குதிரை, நீர் யானை, ஒட்டகச் சிவிங்கி போன்ற வெளிநாட்டு விலங்கினங்களை தெரிந்து வைத்திருக்கும் நம் இளைய தலைமுறைக்கு நம் காட்டில் வாழும் உயிரினங்களைப் பற்றி அறிய வைப்பது.


உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறியப் பட்டுள்ள நமது மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மிக அரிய நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகியவற்றின் சிறப்பை அறிவுறுத்தி அவற்றின் பாதுகாப்பில் மக்களை பங்கேற்க வைப்பது.


காடுகளைக் காப்பாற்றுவதன் மூலமே நம் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் நீர் நிலைகளையும், உயிர்ச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்பதை அறிவுறுத்துவது.


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே தொடரும் மோதல்களைத் தவிர்த்து விலங்கினங்களோடு இணைந்து வாழும் மன நினலையை உருவாக்குவது.


இந்த கண்காட்சியின் இறுதிக் கட்டத்தில் வருபவர்களுக்கு சாருஹாசன் குரலில் (?) நாகரஹோலே - ஒரு காட்டின் கதை எனும் அருமையான டாக்குமென்றி காத்திருக்கும் தவறவிடாதீர்கள்.


இந்தியாவிலேயே அதிக வகையான பூக்கும் தாவரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன (5640). இந்தியாவிலேயே மொத்தம் 17622 வகை பூக்கும் தாவரங்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த பூ பூக்கும் தாவரங்களின் பட்டியளில் அருகி வருபவை (ரெட் லிஸ்ட்) 230 ஆகும்.

தமிழ் நாட்டில் ஒரு டசன் பறவை சரணாலங்கள் உள்ளன.  ராமநாதபுரத்தில் உள்ள மேல் செல்வனூர் - கீழ் செல்வனூர் லிஸ்டில் இறுதியாக (1998) இடம் பிடித்தது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஒதுக்கம் ( conservation reserve)  தஞ்சை திருவிடைமருதூரில் உள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு புலிகள் சரணாலயங்கள் : கள்ளக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம்.

ஒரு அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் மொத்தமுள்ள 165 நன்னீர் மீன் வகைகளில் 126 அழியும் தருவாயில் உள்ளது.  

அதே போல 76 நீர் நில வாழ்விகளில் 56 அழியும் தருவாயில் உள்ளது.
பறவை இனங்களில் 32 வகைகள் தேடப்பட்டு வருகிறது.(மொத்தம் உள்ளவைகள் :456)

கடைசியாக சேர்க்கப்பட்ட சரணாலயம் : காவேரி (தர்மபுரி - கிருஷ்ணகிரி)
கொடைக்கானல் (திண்டுக்கல்)

பூமி
தன்னை ஒரு பூங்காவாய் ஒப்படைத்தது
நீயேன் அதை
மயானமாய் மாற்றுகிறாய்?
இயற்கை போற்று
ஐம்பூதங்களை ஆராதி
கோயில்கள் போதும்
மரங்களை தொழு
நெடுஞ்சான் கிடையாய்
நீரைக் கும்பிடு !
ஐம்பூதங்களை
அறிவால் வணங்கு  ( வைரமுத்துவின் வரிகள்..)


காடுகளை அழித்து
மழை கவிழ்த்து விட்டோம்
மேகங்களும் உலர்ந்து வற்றின
யாரும் சொல்லித் தராத
மழைப்பாட்டு
இப்போதுள்ள குட்டிகளுக்கு இல்லை
திசை சொல்லித் தந்த
மழைப் பூச்சியின்
சுவடில்லை   ( தேன்மொழி)


 “நமக்கு ஒர் உயிரனம் எப்படிப் பயன்படும் என்பதைப் பார்க்கவே கூடாது. ஒவ்வொன்றுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு ” என்று 1982 ல் வெளியிடப்பட்ட உலக இயற்கைச் சாசனம் தெளிவுபடுத்துகிறது.

ஒரு வளமான காட்டை அங்குள்ள பறவைகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.  ஒரு செழுமையான காட்டில் பறவையினங்கள் அதிகமாக இருக்கும்.

ஒரு காட்டில் பிணந்தின்னி கழுகுகள் (vultures) அதிகமாக காணப்பட்டால் உயிர் சுழற்சியின் உச்சத்தில் உள்ளது என அர்த்தம் கொள்ளலாம். அவற்றை வளமையான காட்டின் குறியீடு என்கின்றனர்.

மழைக்காடு என்று சொன்னால் அங்கு இருவாச்சிப் பறவைகள் இருக்கும் (hornbills) மலை முழங்கான் என இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
தற்போது இவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. காலம் கனியும் என எதிர்பார்ப்போம்.  மரப்பொந்து கூட்டில் குஞ்சு பொறித்து குறிப்பிட்ட பருவம் வரை தாய் பறவை அவற்றை விட்டுப் பிரிவதில்லை.  அந்த காலம் வரை ஆண்பறவைதான் இரண்டிற்கும் உணவு தேடி கொடுக்கிறது.


பறவைகளிடமும் விலங்குகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் எவ்வளவோ உண்டு.

சில பறவைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு :


Great pied Hornbill = பெரிய கருப்பு வெள்ளை இருவாச்சி


Malabar Trogon = தீக்காக்கை


Indian Roller = பனங்காடை

Spotted Owlet = புள்ளி ஆந்தைBrown wood owl = பழுப்பு காட்டு ஆந்தை

Greater Coucal = செம்பகம்


Eurasian  Collared Dove = கள்ளிப்புறாSmall Blue Kingfisher = சிரால் மீன் கொத்தி
Little stint = கொசு உள்ளான்


Crested Hawk Eagle =  குடுமிப் பருந்து
Little Egret = சின்னக் கொக்கு
Great Flamingo = பெரிய பூநாரை
Knob Bill Duck = செண்டுவாத்து
Cotton teal = குள்ளத் தாரா

நண்பர் ஓசை "காளிதாஸன்" உடன் நான்

(பி.கு : இது போன்ற பலப் பல தகவல்கள் இந்த கண்காட்சியில் அறிய கிடைக்கிறது )
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)