Pages

Saturday, December 29, 2012

தமிழ் திரை உலகின் இரு மேதைகள் கவிஞர்.கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும்...


தமிழ் திரைஉலகிற்கு இவ்விரு மாமேதைகளும் கிடைத்ததால் அருமையான அபூர்வமான பல சங்-கீதங்கள் கிடைத்தன.

திரு.எம்.எஸ்.வி அய்யா, கவிஞர்.கண்ணதாசன் அவர்களுக்கிடையேயான எதார்த்தமான அண்ணன் தம்பி உறவு, சினிமாவின்மேல் அவர்கள் கொண்டிருந்த காதல் பல அற்புத படைப்புகளை தந்தது என்றால் மிகையில்லை.


குமுதம் இதழில் ஒருகாலத்தில் வாரா வாரம் எழுதப்பட்ட ஒரு தொடர் " இந்த வாரம் சந்தித்தேன் " 

மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விசுவநாதன் அவர்களை பற்றி கவிஞர் எழுதியவை "மலரும் நினைவுகளாக..."
=====================================================================
இந்தியா முழுவதிலும் பல இசை அமைப்பாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இந்தியாவின் எந்த மொழியிலும் தம்பி விஸ்வநாதனுக்கு இணையான ஓர் இசை அமைப்பாளரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை..

'ஆமாம்,.. நீ அடிக்கடி சந்திக்கும் விஸ்வநாதனைப் பற்றி இந்த வாரம் சந்தித்தேன் என்று எழுதுவதில் என்ன பொருள் ?  ' என்று நண்பர்கள் கேட்கக்கூடும்.

காரணம் உண்டு.

தம்பி விஸ்வநாதனை மூன்று வாரங்களாக நான் சந்திக்கவில்லை.  இவ்வளவு பெரிய இடைவெளி எங்களுக்குள் விழுந்ததில்லை.  தம்பி ஏராளமான ரீ - ரெக்கார்டிங்குகளில் மாட்டிக்கொண்டதால், இந்த வாரம்தான் சந்தித்தேன்.

உலகத்தில் எந்தப் பாகத்தில் என்ன இசை இருக்கிறது என்பது விஸ்வநாதனுக்குத் தெரியும்.  விஸ்வநாதனுடைய இசைக்கு நான் பாட்டெழுதத் தொடங்கி முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.  இந்த முப்பது ஆண்டுகளில் தம்பியின் திறமையை நான் கண்டு வியந்திருக்கிறேன்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ' யில் எகிப்திய இசையைக் கேட்டேன். 'தென்றல் வந்து வீசாதோ ? " பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாடையைக் கண்டேன், அபூர்வ ராகத்தில் நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ" என்ற பாடலில் மெக்ஸிகன் ஆர்ப்பாட்டத்தைக் கண்டேன்...சொல்லி கொண்டே போனால் இடம் போதாது.

கடுமையான உழைப்பாளி.  தூங்குகிற நேரம் மிகவும் குறைவு.  நாள் முழுதும் உழைப்பு.  இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.

"ஊமைத்துரையில்  "துரை" என்று வருகிறதே அண்ணே,  அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.

காபூல் நகரில் தங்கி இருந்தபோது , " இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன் "யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.

பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.

ஆனால் அவனோடு பாட்டெழுத உட்கார்ந்துவிட்டால் பொழுது போவதே தெரியாது.

முப்பது வருடங்கள்.

தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.

எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள்.  இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

தம்பிக்கும், மாமா (கே.வி.மகாதேவன்) வுக்கும் அஸ்திவாரம் மிகப் பெரியது.

ஏழுவயதில் இரண்டு ரூபாய் சம்பளத்தில் கம்பெனி நடிகனாக வாழ்க்கையைத் துவங்கிய விஸ்வநாதன், பட்டபாடு கொஞ்சமல்ல.  பதினாறு வயதில் வைரம் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது ஒரு நெக்லஸைத் திருடி விட்டதாகத் தம்பியைப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸார் அவனை அடித்தும் விட்டார்கள். பிறகு செட்டியாருடைய மெத்தைக்கு அடியிலேயே நெக்லஸ் கிடைத்தது.

ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.

முன்பெல்லாம் இரவு பதினேரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தால் அது ஏ.எல்.எஸ் அல்லது விஸ்வநாதனாக இருக்கும்.  இப்போது விஸ்வநாதன் மட்டுமே.

இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?

இரண்டும் பாதிப் பாதி.

'ஆகாயப் பந்தலிலே'  இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை'  பாட்டுக்குப் போடப்பட்ட இசை.

"இது நன்றாக இல்லை" என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.

' மாலையிட்ட மங்கை ' படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.

ஆயிரம் புகழ் வந்தாலும், யாரையும் எடுத்தெறிந்து பேசாத குணம், தம்பி, மாமா, புகழேந்தி மூவருக்கும் உண்டு.

நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ "   நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை " என்ற பாட்டு.

எந்த இரவிலும் நான் போட்டுக் கேட்பது நான் எழுதி தம்பி இசை அமைத்து, சரஸ்வதி ஸ்டோர் பதிப்பித்த ஸ்ரீ கிருஷ்ண கானமே அதைக் கேளாமல் நான் தூங்கியதே இல்லை.  இதுவரை அது போல் ஒரு பக்திப் பாடல் வந்ததாகவும் எனக்கு ஞாபகம் இல்லை.

எழுத எழுத எவ்வளவு விஷயங்கள் வந்து குவிகின்றன எதைச் சொல்வது, எதை விடுவது ?

பெங்களூர் உட்லண்ட்ஸ், ரூம் நெம்பர் முப்பத்தாறு. 'கர்ணன்', பாத காணிக்கை' எல்லாமே அங்கேதான்.  "வீடு வரை உறவு " பிறந்த இடமும் அதுதான்.

பம்பாய் ஜன்பத் ஓட்டலில், எழுதி எழுதிப் பார்த்து முடியாமல் திரும்பி விட்டோம்.

நானும் தம்பியும் பாண்டிச்சேரியில் எழுதிக் கொண்டிருந்தபோதுதான், காரைக்கிடியில் என் சுவீகாரத்தாயார் இறந்துவிட்ட செய்தி வந்தது.  தம்பியின் காரை எடுத்துக் கொண்டே போய்ச் சேர்ந்தேன்.

1962ல் நான் இறந்து விட்டதாக தம்பிக்கு யாரோ தொலைபேசியில் சொன்னார்கள்.  தம்பி சாரதா ஸ்டுடியோவில் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு முட்டி மோதிக் கொண்டு ஓடி வந்தான்.  அதுபோலவே செய்தி கேட்டு எம்.வி. ராஜம்மா, எம்.ஆர்.ராதா, கிருஷ்ணன் - பஞ்சு ,பீம்சிங், ஸ்ரீ தர், சம்பத் ஆகியோர் ஓடிவந்தார்கள்!  எம்.ஜி.ஆர். டெலிபோனில் துழாவினார்.

நான் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

தொலைபேசியில் வதந்தி பரப்பியது யாருமல்ல...நானே தான் !

தம்பி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.

இந்த வகையில் அவனை நான் முந்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.

===================================================================
"சந்தித்தேன் சிந்தித்தேன்" இந்நூலின் முதல் பதிப்பு மார்ச் 1982
வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது 
===================================================================


" வெல்கம் 2013 "     

இந்த ஆண்டின் 2012 இறுதிவரை நூறு பதிவுகளை எழுதியள்ளதை நினைத்துப் பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. 

என் எழுத்துகளுக்கு தூண்டுதலாகவும், உறுதுணையாகவும், பின்னூட்டமிட்டு தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் நல் உள்ளங்களுக்கும்,  

வலைத்தளத்தை பின் தொடர்ந்து பேராதரவு அளிக்கும் நண்பர்களுக்கும்,  

பதிவுகளை முகபுத்தகம்,கீச்சு,ஜீ-ப்ளஸ்..மற்றும் மின்அஞ்சல் வழி வாசிப்பாளர்களுக்கும், 

இத் தருணத்தில் எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.            

இன்னும் சிறப்பான எதிர்காலம், பல மகிழ்ச்சிகரமான தருணங்கள் நமக்காக காத்திருக்கிறது...

உங்களோடு நானும் 2013 ஐ வரவேற்கிறேன்.

- கலாகுமரன்
============================================================

Friday, December 28, 2012

விண்ணியல் விஞ்ஞானிகள்

ஆரம்ப கால விஞ்ஞானிகள் அண்டத்திலுள்ளவைகள் எவ்விதம் நகர்கின்றன, அவைகள் புவியை கடந்து செல்லும் காலம் இப்படி அநேக விசயங்களை அளவிட்டனர்.

விண்ணியலுக்கு என்று ஒரு தனிப்பெரும் வரலாறு இந்தியாவிற்கு உண்டு. விண்ணியல் கணிப்புகளின் முன்னோடி இந்தியா. விண்ணியல் விஞ்ஞானிகள் யோகிகளாகவும் ஞானிகளாகவும் இங்கு பார்க்கப்பட்டனர்.

அதன் பின் வந்த விஞ்ஞான முன்னேற்றமும் பல படிகளை விண்ணியல் அடைந்தது எனலாம். முக்கியமாக பலவித கருவிகள் இன்றைக்கு இருக்கின்றன. அதே போல ஆய்வுகட்டுரைகளும் பெரும்பாலும் நிரூபிக்கப்படுகின்றன.

இப்பகுதியில் சில விண்ணியல் விஞ்ஞானிகள் பற்றி பார்ப்போம்.

Arthur Eddington (An English Astronomer)

ஆங்கில விண்ணியல் விஞ்ஞானி ஆர்த்தர் எடிங்டன் :

நட்சத்திரங்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன அல்லது அதனுள் இருப்பவை என்ன ? இப்படி பல ஆய்வுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன.
1920 சில கருத்துககளை உறுதிபடுத்தினார்.

அவற்றில் வெளிவிடப்படும் ரேடியேஷன் வெளிதள்ளும் விசையாகவும், அதனுடைய ஈர்ப்புவிசை உள்ளிழுப்பதும் நட்சத்திர தன்னிலை சமநிலைக்கு காரணம்.   நட்சத்திரத்தின் சக்தி வெளிப்பாடு அதனுள் நடக்கும் நியூக்ளியர் மாற்றங்கள் என்றார்.




Cecilia Payne Gaposchkin

சிசிலியா ஃபைனே மாணவியாக இருக்கும் போதே ஆர்த்தர் எடிங்டனின் பேச்சுக்கள் இத்துறையில் இவரை ஆர்வம் கொள்ள வைத்தது. இத்துறையில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியர்.  1920 ல் நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆனது என்று கண்டுபிடித்தார்.







Fred Hoyle

கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக வானியல் விஞ்ஞானி ஃப்ரெட் ஹாயல்.  நட்சத்திரத்தின் உட்கருமையத்தில் வெளிப்படுத்தப்படும் மூலக்கூறுகள் (Elements) எவை எவை என்ற ஆய்வில் புகழ் பெற்றவர்.  அண்டம் எவ்விதம் உருவானது ? இதன் எதிர்காலம் என்னவாயிருக்கும் இப்படிப்பட்ட கட்டுரைகள், அப்புறம் Big Bang "பெருவெடிப்பு" பற்றிய சொல்லாக்கத்தை தந்தவர் (1950) என்ற சிறப்பு பெற்றவர்.

இவரைபற்றிய இன்னுமொரு குறிப்பு சிறந்த சயின்ஸ்பிக்ஸன் (Science fiction) எழுத்தாளர்.





Fred Whipple

ஃப்ரெட் விப்பில், சூரிய மண்டலத்தின் நுண்ணிய பொருட்களை ஆய்வு செய்தவர்.  ஹார்வர்டிலுள்ள ஸ்மித்சோனியன் அஸ்ரோபிஸிக்ஸ் ஆப்சர்வேட்டரி (ஆய்வரங்கம்)யின் டைரக்டர்.  வால் நட்சத்திரங்களின் மையம் பனிக்கட்டிகளாலும், பிரம்மாண்ட பாறைத்தூசுகளாலும் நிரம்பியது என 1949ல் விளக்கினார்.  எரிகற்களுக்கு வால் நட்சத்திரங்கள் ஒரு காரணம் என்றார். அதுமட்டுமல்ல இவர் ஆறு வால் நட்சத்திரங்களை கண்டுபிடித்தார்.








Subramanyan Chandrasekhar (Indian-American astrophysicist)

வெள்ளை குள்ளர்கள்  அல்லது நியூட்ரான் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்டும் நட்சத்திரங்களின் அழிவிற்கு அதனுள் உள்ள தனிமங்களின் அளவை பொருத்தது என கண்டறிந்தார் நோபல் பரிசு பெற்ற சுப்ரமண்யன் சந்திரசேகர்.

சந்திரா எக்ஸ்ரே அப்ஸர்வேட்டரி டெலஸ்கோப்  இவரை  சிறப்பிக்க வைக்கப்ப்பட்ட பெயர்.







Edwin Hubble

யுனிவர்ஸை பற்றி இதற்குமுன் நம்பப்பட்டு வந்த பல கருத்துக்களை மாற்றி காட்டியவர் எட்வின் ஹப்பில் 1920ல் வெளியிட்ட ஆய்வறிக்கைகள்.  கலிபோர்னியாவில் வில்சன் மலையில் அமைக்கப்பட்ட ஹூக்கர் வானிலை ஆய்வுக்கூடத்தில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.  பூமி பால்வெளியில் அமைந்துள்ளது.  இந்த அண்டம் முழுமையும் எண்ணற்ற கேலக்ஸிகளால் நிரம்பியது.  கேலக்ஸிகள் உருவம் அமைப்புகளை கொண்டு அவற்றின் வகைகளை பிரித்தறிந்தார்.  இவரை சிறப்பிக்க விண்வெளி தொலைநோக்கிக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டது.








Eugene shoemaker

இயூஜின் ஷூமேக்கர், நிலவிற்கு சென்று வந்ததினால் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் அப்போலோ விண்வெளி வீரர்களுக்கு நிலவின் புவியல் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.  தொடர்ந்து விண்கற்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். ஷூமேக்கர் லெவி-9 என்ற வால்நட்சத்திரத்திரம் 1993 ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  இவரின் அஸ்தி லூனார் ஸ்ப்ராஸ்பெக்டார் ஸ்பேஸ் கிராப்ட் மூலம் நிலவிற்கு கொண்டு செல்லப்பட்டது.










Vera Rubin

வெரா ரூபின் விண்வெளி பெண் ஆராய்ச்சியாளர் வாஷிங்டனில் கார்னிகி இன்ஸ்டிடியுட்டில் பணிபுரிந்தார் கேளக்ஸிகள் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
கேளக்ஸிகள் பொருண்மையை பொருத்து நட்சத்திரங்களின் சுற்றுவட்டமையம் இருக்கும் என்றும் நட்சத்திர நகர்வுகள் குறித்தும் இவரின் ஆய்வுகள் இருந்தது.  1983 ல் 90 சதவீத கேளக்ஸிகளை வரையறை செய்தார்.  டார்க் மேட்டர்களும் இவரின் ஆய்வில் குறிப்பிடத்தக்கது.








Riccardo Giacconi

Space telescope science institute (முக்கியமாக ஹப்பில் தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டிருதவை.)   மற்றும் European southern observatory இரண்டிற்குமான இயக்குனராக இருந்தார் ரிக்கார்டோ கிக்கோனி.   இயற்பியலுக்கான நோபல் பரிசு 2002 ல் இவருக்கு அளிக்கப்பட்டது.  நட்சத்திரங்கள் வெளிவிடும் எக்ஸ்கதிர்கள் குறித்து ஆளவீடு செய்யும் கருவியை ஹப்பில் மற்றும் சந்திரா எக்ஸ்ரே விண்வெளி ஆய்வுகூடத்தில் நிர்மானித்தார்.







    
JAN OORT

ஜேன் ஆர்ட் நெதர்லாந்திலுள்ள வெய்டன் ஆய்வரங்கத்தில் பல ஆண்டுகள் இயக்குநராக பணியாற்றினார்.  இளவயதில் அதாவது 1927 லேயே பால்வெளி சுற்றுவதை நிரூபித்தார்.  ரேடியோ அலை குறித்த விண்வெளி ஆராய்சியில் முக்கிய பங்களித்தார்.   வால் நட்சத்திரங்களால் ஏற்பட்ட பெரும் மேகக்கூட்டம் சூரிய மண்டலத்தில் சுற்றிவருவதை அறிவித்தார். இம்மேககூட்டத்திற்கு ஆர்ட் க்ளவுட் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


Saturday, December 22, 2012

எதிர்கால விண்வெளி பயணங்கள்...


விண்வெளி வீரர்கள் தற்போது விண்வெளியில் மிதக்கும்
இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் (  சுருக்கமாக ISS
international space station ) அதிக நேரங்களை செலவிட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா,கனடா, ஜப்பான் மற்றும் 11 ஐரோப்பிய நாடுகள், பிரேஸிலுடன் சேர்த்து 16 நாடுகள் ISS திட்டத்தில் பங்கெடுத்து உள்ளன. விண்வெளியில் 1998 ல் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் பல பகுதிகள் இணைக்கப் பட்டு வருகிறது. இதற்கென 50 திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு இணைப்பதற்காக 140க்கு மேற்பட்ட ஸ்பேஸ் வாக் நடத்தப்பட்டு உள்ளது.

அடுத்து பல கட்டங்களில் எதிர்கால விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.  குறிப்பாக அடுத்த பத்தாண்டுகளில், விண்வெளி வீரர்களை முதலில் நிலவுக்கும் அதன் பின் செவ்வாயிற்கும் அனுப்பும் திட்டம் அமெரிக்காவும் சைனாவும் வைத்திருக்கிறது.

செவ்வாயில் மூன்று வாரங்கள்  இருப்பதற்கு போக வர 18 மாதங்கள் விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் என்று சொல்லலாம்.

இன்னும் சில பத்தாண்டுகளில் (Decades) நிலவுக்கு ஓய்வெடுக்க சென்று வருவது என்பது விண்வெளி வீரர் அல்லாதோருக்கு சாதரணமாகி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


  • ஓரியான் (orion)


அமெரிக்க விண்வெளி வீரர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் ஒரு புது ஸ்பேஸ்கிராப்ட் (விண்வெளி ஓடம்) ஓரியான்.   வரும் 2014 ல் இது ஏர்ஸ்-1 ராக்கெட் மூலம் எடுத்து செல்லப்பட்டு  I S S ல் வீரர்களை இறக்கிவிடும்.
அங்கிருந்து அப்படியே நிலவிற்கு பயணப்படலாம்.  மேலும் ஒரே நேரத்தில் ஆறு பேர்கள் நிலவிற்கு சென்று வரக்கூடிய மேம்படுத்தப்படும் திட்டம் உள்ளதாம்.  குறைந்தது ஆறு மாதங்கள் நிலவில் அவர்கள் ஓய்வெடுத்து ..! ஓரியான் மூலமாக பூமிக்கு திரும்பிவிடலாம்.  ( ஜாலி டிரிப் !! )



  • லூனார் ரோவர் (Lunar Rover)


நிலவில் விண்வெளி வீரர்களுக்காக பிரத்தியோகமான ஒரு வாகனம் லூனார் ரோவர். இதில் அவர்கள் கார் பவனி வருவது போன்று நிலவில் சுற்றி வரலாம்.  இந்த ப்ரோட்டோ வகை ரோவர் பூமியில் ஏற்கனவே பரிசோதித்து பார்க்கப்பட்டுவிட்டது.  இரண்டு பேர் இதில் தாரளமாக செல்லலாம். இதன் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர்கள் தான். இதில் உள்ள எரி பொருள் 240 கிலோமீட்டர்களுக்கு தாங்கும் என்பது கூடுதல் தகவல்.


  • செவ்வாயில் மனிதர்கள்


மனிதன் காலடி வைக்கும் முதல் கோள் செவ்வாயாகத்தான் இருக்கும்.  இதற்கு புவியை சுற்றி வரும் ஸ்பேஸ்கிராப்டிற்கு ஓரியான் மூலமாக தங்க வைக்கப்பட்டு பின் அங்கிருந்து செவ்வாயிற்கு அழைத்து செல்லப்படுவர்.  கால அளவு ஒன்பது மாதங்கள்.  இதெல்லாம் நடப்பதற்கு 2030 இறுதி வரை காத்திருக்க வேண்டும்.


  • மார்ஸ் - 500


 நீண்ட காலம் செவ்வாயில் இருந்தால் மனிதனுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும், அப்புறம் உணவு பழக்க வழக்கங்கள், இன்னபிற பிரச்சனைகள் குறித்து ஆராய பரிசோதனையில் அடிப்படையில்  ஏற்படுத்தப்பட்ட ஐசுலேசன் சேம்பர் தான் செவ்வாய் -500.  2009 லேயே மாஸ்கோவில் பரிசோதிக்கப்பட்டது.  இதில்ஆறு பேர் கொண்ட ஒரு குழு 105 நாட்கள் இருந்திருக்கிறார்கள்.


  • ஸ்பேஸ் ஹோட்டல்




விண்வெளியில் பூமியை சுற்றும் வகையில் அமைக்கப்படும் ஒரு ஸ்பேஸ் ஹோட்டல் ( வித்தியாசமா இருக்கு இல்ல...இட்லியும் கெட்டி சட்னியும் ஸ்பெசல் மெனுவா...? ) விண்வெளி வீரரா இல்லாதவங்களும் இந்த ஹோட்டல தங்கி ஓய்வெடுக்கலாம்.   இது பூமியை ஒரு நாளுக்கு 16 முறை சுற்றும். தனியார் ஆர்கனைசேசன் ஒன்று GENESIS-1 என்ற ரஷ்ய ராக்கெட்டில் ஏற்கனவே ப்ரோட்டோ டைப் ஹோட்டலை அனுப்பி பரிசோதித்து விட்டது.


  • கொசுறு தகவல் 


முதல் விண்வெளி பயணி (first traveller ) ( அதாவது விண்வெளி வீரர் அல்லாதவர் ) டெனிஸ் டிட்டோ.   இவர் அமெரிக்க தொழில் அதிபர்.   20 மில்லியன் US டாலர் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 2001 ல் ஒருவாரம் பயணம் முடித்து திரும்பினார்.   இவருக்கு முன் சென்ற விண்வெளி வீரர்கள் 414 பேர். (சென்ற விண்கலம் சோயுஸ் TM 32) இவர் தங்கி இருந்த  7 நாள் 22 மணிநேரத்தில் I S S  - 128 முறை பூமியை சுற்றி காட்டியது.

தொடர்புடைய பதிவு :



Wednesday, December 19, 2012

ஆந்தைகள் பகலில் வேட்டையாடுமா ?


Northern Hawk owl  ராசாளி ஆந்தைகள் 

ராசாளி ஆந்தை இனம்  மத்திய ஆசிய-ஐரோப்பிய பகுதிகள் மற்றும் வட அமெரிக்கப்பகுதியில் வசிப்பவை.  நீளமான வால் கொண்டது.


இவை உயரமான பட்டு போன மரங்களில் கருப்பு மரங்கொத்தி பறவைகள் ஏற்படுத்திய பொந்துகளை தமது கூட்டிற்கு தேர்ந்தெடுக்கின்றன.

கடும் பனி பொழிவு இருப்பினும் இவற்றின் இரையை தேடுவதற்கு நாள் முழுதும் பயணிக்கின்றன.

இவ்வகை ஆந்தைகள் பகலும், இரவிலும் வேட்டையாடுகின்றன.









இவற்றின் முக்கிய உணவு வோல்ஸ் (Voles) என அழைக்கப்படும் நீர் கரையோரங்களில் வாழும் ஒருவகை மூஞ்சூரு எலிகள், சிறு முயல்கள் இவையும் கிடைக்கவில்லை என்றால் தவளைகள், பல்லிகளை பிடிக்கின்றன.

பூமியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர்கள் உயரத்திலேயே பாய்ந்தோடும் இரையை அடையாளம் கண்டு சப்தமில்லாமல் லாவகமாக பிடிப்பதில் வல்லவை இந்த ராஜாலி ஆந்தைகள்.  ( சைலன்ஸ் ஹண்டர்ஸ் !! )

பின்லாந்தில் இவை ஹிரிப்போலோ ( Hiiripollo ) அதாவது எலி-ஆந்தைகள் என அழைக்கப்படுகின்றன.

குஞ்சு பொறிக்கும் பருவம் மார்ச் மாதம்.  பெண் பறவை 4 முதல் 13 முட்டைகள் வரை இடும்.  25 முதல் 30 நாட்கள் அடைகாக்கிறது.

குஞ்சு பொறித்த 2 இரண்டு வாரங்கள் தாய் பறவை மற்றும் குஞ்சுகளுக்கு இரை தேடி கொண்டுவர வேண்டிய பொருப்பு ஆண் பறவைக்கு உண்டு.

குஞ்சுகள் 6 முதல் 8 வாரங்கள் பெற்றோரின் மேற்பார்வையில் பாதுகாப்பாக வசிக்கிறது. அதன் பிறகு வளர்ந்த குஞ்சுகள் சுதந்திரமாக பிரிந்து சென்று விடுகின்றன.


சாதாரணமாக இந்த ஆந்தைகள் 270 முதல் 340 கிராம் எடை கொண்டவை. தலை முதல் வால் வரை 36 - 38 செ.மீ நீளம் உடையவை. விரித்த நிலையில் இறக்கையின் நீலம் 74 - 81 செ.மீ.


வட பின்லாந்து காரரான ஜாரி பெல்ட்மாகி ( Jari peltmaki ) ஒரு சிறந்த வைல்ட் லைப் போட்டோகிராபர் மட்டுமல்ல இவ்வகை ஆந்தைகளை 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருபவர். அவர் எடுத்த புகைப்படங்களே இவைகள். 

Monday, December 17, 2012

மனிதன் முகச் சவரம் செய்ய ஆரம்பித்தது எப்போதிலிருந்து ?


ஆனந்த விகடனில் ஒரு கவிதை வெளியாகி இருந்தது.

சலூன்காரர் கவிதை

அவருக்கு தொழில் சவரம்
எனக்குக் கவிதை.

நான் வார்த்தைகளையும்
அவர் முள் முடிகளையும்
செதுக்கியவாறு உள்ளோம்.

நான்
சுயமாக சவரம் செய்ய முயன்று
காயமான தருணங்கள் அநேகம்
அவர் ஒரு முறைகூட
பேனா எடுத்ததில்லை
கவிதை எழுத

சமயங்களில்
ஒற்றுப் பிழைகள்
தங்கி விடுவதுண்டு எனக்கு
தெரிந்தவரையில் அவர்
சிராய்ப்பு ஏற்படுத்தியதாக
வரலாறு இல்லை

பிள்ளையார் பிடிக்க நினைத்து
குரங்காக ஆன நிகழ்வுகள்
ஏராளம் எனக்கு
ஒவ்வொரு முறையும்
அழகாக வரைந்து விடுகிறார்
முகத்தில் ஒரு கவிதையை அவர்.

இக்கவிதையை எழுதி இருந்தவர் நா. ராஜேந்திர பிரசாத்

மனிதன் முகச் சவரம் செய்ய  ஆரம்பித்தது எப்போதிலிருந்து ?

(யோசிச்சு பாருங்க எவ்வளவு முக்கியமானது இந்த நவீன நாகரீகத்தின் அத்தியாவசிய கண்டுபிடிப்பு !!!  ப்ளேடு போடாம சுருக்கமா எழுத முயற்சிக்கிறேன் ! )


தொல்பொருள் ஆய்வில் கிடைத்த தகவலின் நெருப்புக்கற்களில் (சிக்கிமுக்கிகல்-flint ) செய்யப்பட்ட ஆயுதம் முடி வெட்ட பயன்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது இதன் காலம் கி.மு 30,000 ஆண்டு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. ( கிடைத்த பொருளை வைத்து உறுதிப்படுத்தப்பட்ட கால அளவு இது அதற்கு முன்பும் இருந்திருக்கலாம் ?  )


கி.மு 3000 ஆண்டு வாக்கில் உலோகத்தாலான சவரக்கத்திகள் இந்தியா, எகிப்து மற்றும் கிரேக்கத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

கைக்கு அடக்கமான இன்னும் மேம்படுத்தப்பட்ட சவரக்கத்திகள் இங்கிலாந்தில் மறுமலர்ச்சி காலத்தில் (17ம் நூற்றாண்டு) பயன்படுத்தப்பட்டன.


ஆக ஆண்கள் தங்கள் முகத்தினை பொலிவாக்க ?! ஆதி காலத்திலிருந்து முயற்சித்துவருவது கண்கூடு.



நியோலித்திக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நெருப்புக்கல்லால்
ஆன முடி வெட்டும் பொருள் 


வெண்கலத்தால் ஆன சவரக்கத்தி (Iron Age)



அடுத்து நவீன பிளேடின் கதையையும் பார்த்துவிடுவோம்.


1903 ல் கில்லெட் ( King C. Gillette ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் ரேசர் உடன் கூடிய பிளேடு டெக்னிக்.

அதற்குமுன்பு வரை சவரக்கடைக்குதான் செல்ல வேண்டி இருந்தது பெரும்பாலானவர்களுக்கு ஷேவ் செய்வது என்பதே பெரிய வேலையாக இருந்தது. ( அந்தகாலத்தில் இங்க கடையேது ஆலமரத்தடிதான் !)

கில்லெட்டிற்கும் கண்டுபிடிப்பின் ஞானோதயம் ஒரு சலூன் கடையிலே தான் ஏற்பட்டது.  

வில்லியம் பெயிண்டர் என்பவரிடம் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தவர் கில்லெட்.  வில்லியம் கண்ணாடி குப்பியின் கார்கிற்கு மேலாக மூடி தயாரித்து வந்தவர் ( கண்டுபிடிப்பாளரும் அவர் தான்).

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் மிக மெல்லிய சிறு கத்தி (அதாங்க பிளேடு) மற்றும் கையடக்க கருவியை (ரேஸர்)  செய்ய  அவருக்கு ஆறு ஆண்டுகள் ஆனது.

1904 ல் " Gillette safety Razor Company "  ஆரம்பித்தார் முதலாம் உலப்போர் சமயத்தில் அமெரிக்க அரசு பெரிய ஆர்டர் கொடுத்தது  ( 3.5 மில்லியன் ரேசர்களும், 32 மில்லியன் பிளேடுகளும்) இதன் பின் இவரது கண்டுபிடிப்பும் உலகம் முழுவதும் பரவியது.

எலெக்ரிக் ரேசர் கண்டுபிடித்தவர்  செயிக் ( Colonel Jacob schick) 1928 ல் இதன் பேடன்ட் உரிமை பெற்றார்.  இவர் U. S ஆர்மியில் லெப்டினண்ட் ஆக இருந்தவர்.


கொசுறு தகவல் :

ஜெர்மன் சென்று வந்த போது கோவை ஐன்ஸ்டீனான ஜி.டி நாயுடு அவர்கள் அதி கூர்மையான எலெக்ரிக் ரேசர் கண்டுபிடித்திருந்த தாகவும் இது பாதுகாப்பானதும் அதே சமயத்தில் அதிக ஷேவிங் செய்ய தக்கதுமாக இருந்தது என்ற தகவல் நமக்கு ஆச்சர்யம் அளிக்க கூடியதே.

Monday, December 10, 2012

நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்டி கொள்ள முடிவதில்லை ?


இந்த கேள்விக்கான பதிலை பிறகு பார்ப்போம். நம் மூளையின் செயல்பாட்டை அல்லது இயக்கத்தை பற்றி கொஞ்சம் சிந்திப்போமா ?

நம்மூளை எதிர்காலத்தைப்பற்றி அடுத்த செகண்டில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கும். நாம் அயர்ந்து தூங்கும் நேரம் தவிர.

சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம் இப்பப்பாரு அவரு கூப்பிடுவாரு, சொல்லி முடிக்கும் முன் அதேபோல் போன் மணி அடிக்கும்.  அவர் சொன்னவரே லைனில் இருப்பார்.  இதற்கு அவர் சிந்தனை ஓட்டமெல்லாம் எதிராளி என்ன செய்வார் என்பது அவர் அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது அவ்வளவே.

சிறுவயதில் நீங்கள் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை நினைத்துப்பாருங்கள் எவ்வளவு தரம் விழுந்து பின் பெடல்களை, உடலை, ஹாண்டில்பாரை எப்படி பேலன்ஸ் செய்வது என்று பல தடவை பயிற்சி எடுத்துக்கொண்டீர்கள். பின்பே சைக்கிள் ஓட்டினீர்கள்.

இப்போது வளர்ந்தபின் நீங்கள் பலவற்றை யோசித்துக்கொண்டே சைக்கிளில் சென்றாலும் ஆட்டோமேடிக்காக உங்கள் உடலை சமநிலை வேலைகளை மூளை உடல் உறுப்புகளுக்கு கனகச்சிதமாக  கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

எதிர்பாராது காற்று வீசினாலோ ? டயர் பஞ்சர் ஆகினாலோ தடுமாறி நாம் சமநிலையை (balance ) ஏற்படுத்த சிரமப்படுவோம்.

முதன்முறை தீடீர் தீயில் மாட்டிக்கொள்பவனுக்கு எப்படி தப்பிக்க வேண்டும் என்ற உடனடி எதிர்கால யுத்தி அவனுக்கு இல்லாமையால் தடுமாறுவான். ஆனால் ஒரு தியணைப்பு வீரருக்கு உள்ள அனுபவம் அந்த ஆபத்திலிருந்து அவரை மீட்பார்.

இதுபோல பல விஷயங்களிலும் நமக்கு முன் அனுபவம் இல்லை எனில் மூளையால் உடனடி தீர்மானத்தை எடுக்க முடிவதில்லை.

எல்லாம் படித்தவருக்கும் அனுபவசாலிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான்.

குழந்தைகள் புது அனுபவங்களை டோரெமான், டாம் அன் ஜெரி,  சோட்டாபீம், நிஞ்சா ஹட்டோரி,பென்டென்,பவர் ரேஞ்சர்ஸ், இப்படி பல கார்டூன்களில் இருந்து கற்றுக்கொள்ள விழைகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.

என்ன.. முதல் கேள்வியை நீங்க மறக்கலியே ?

நம்மை நாமே கிச்சுக்கிச்சு (tickle) மூட்டிக்கொள்ளும்போது அந்த செயலை நம்மூளை ஏற்கனவே நடைபெறும் என்று யோசித்து முன்னேற்பாட்டை செய்துவிட்டது. எந்தவித எதிர்பார்பும் கிடையாது. விளைவு பூஜ்ஜியம்.

மற்றவர்கள் இதைசெய்யும் எப்போது? எங்கு? எப்படி? செய்வார்கள் என்பதை நம்மூளை முடிவுசெய்ய முடிவதில்லை.  உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். (ஹி..ஹி..தான் )

இறுதியாக, சில வார்த்தைகள் ;   புத்துணர்வோடு நம் உடல் மற்றும் மன உணர்வுகளை வைத்துக்கொள்வது நம்மை இளமையாகவும், வாழ்க்கையை இனிமையாக எதிர்கொள்ளும் அனுபவத்தையும் நமக்கு அளிக்கும்; சரியா ?

கீழே உள்ள ஆங்கில வாக்கியங்களை படிக்க முயற்சிசெய்யுங்கள் (பலருக்கு இது தெரிந்திருக்கலாம் ! )

நம்மூளை எப்படி தவற்றை திருத்தி சரியாக படிக்க முயற்சி செய்கிறது ?
சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நா பழக்கம் !

மேலுல்ல ஆங்கில வாக்கியத்தை படிக்க முடிந்தாலும்; இல்லை என்றாலும் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்.