Pages

Thursday, February 28, 2013

[ Asteroid ]விண்கற்களில் தங்கப் புதையலா? !!

சமீபத்தில் கூட ரஷ்யாவில் ஒளி வெள்ளத்துடன் மோதிய விண்கற்களை பற்றி செய்தி தாள்களில் படித்தோம். (அதனால் 1000 பேர் பாதிக்கப்பட்டனர்)  அது போல ஒரு பெரிய விண்கல் பூமி மீது மோதும் அபாயம் விலகியது என்பதும் செய்தியாக இருந்தது.



எரிகல் விழுவதை பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

சிறிதும் பெரிதுமான ஒரு குறிப்பிட்ட வடிவம் அற்ற “அஸ்ட்ராய்டுகள்” என அழைக்கப்படும் விண்கற்கள் சூரியனை மையமாக கொண்டு சுற்றுபவை. சர் வில்லியம் ஹெர்ஷீல் 1802 ல் முதன் முறையாக இக்கற்களை அவ்வாறு அழைத்தார். அஸ்ட்ராய்டுகள் என்பது கிரேக்க மொழியில் ”நட்சத்திரத்தைப் போல” எனப் பொருள் கொள்ளும் வார்த்தை.

சூரிய குடும்பம் உருவாகிய போது ஏற்பட்டவை இந்த உதிரி பெரும் பாறைகள் என்று சொல்லுகிறார்கள். 

அஸ்ட்ராய்டுகளை விட சிறிய அளவு உள்ள பாறைகளை மெட்ராய்டுகள் (meteoroids) என்கிறார்கள். இவை சில சமயங்களில் பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் காற்று மண்டலத்தினூடாக பூமியை நோக்கி வரும் பொழுதே வேகத்தாலும் வெப்பத்தாலும் காற்றின் உராய்வினால் வெளிச்சத்துடன் உருகி  பூமியை தொடும் முன்னரே சாம்பலாகி விடுகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் அதிர்வலைகளால் சன்னல் கண்ணாடிகள் நொறுங்குகின்றன.

சில சமயங்களில் இந்த மெட்ராய்டுகள் பாறைகளாக விழுவதும் உண்டு. ஒருகாலத்தில் டைனசோர் போன்ற பெரும் விலங்குகள் இப்படி விழுந்த மெட்ராய்டுகளால் முற்றிலும் அழிந்து போனதாக நம்பப்படுகிறது (65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்).

லட்சக்கணக்கான மெட்ராய்டுகள் இப்போதும் பூமியின் மீது விழுந்து கொண்டுதான் இருக்கின்றன வெறும் கண்களுக்கு ஏதோ நட்சத்திரம் விழுவது போன்று தெரியும். இவற்றின் சராசரி எடை 100 டன் என்பது ஆச்சர்யம் தான். கூட்டமாக இவை விழுவதை “மீடீ பூ தூரல் (meteor shower)” அல்லது ”மீடீ புயல்(meteor strom)” என்றும் செல்லமாக கூறலாம்.

அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுள்ள பிரம்மாண்டமான குழி (crater) இப்படி விண் கல் (கல்லா ? இரும்பா ?) விழுந்ததினால் ஏற்பட்டது. இது சுமார் 50,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது என்கிறார்கள்.

பியல்லா எனும் வால் நட்சத்திரமும் இப்படி விண்கற்பாறைகளோடு சூரியனை சுற்றிக்கொண்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழன் (கோள்கள்) இவற்றின் சுற்று பாதையின்  இடையில்  சூரியனை சுற்றும் ஆயிரக்கணக்கான அஸ்ட்ராய்டுகள் உள்ளன. இதை ”அஸ்ட்ராய்டு பெல்ட்(asteroid belt)” என்று அழைக்கிறார்கள்.


(ஆஸ்திரேலியாவில் விழுந்த எரிகல் இந்த அஸ்ட்ராய்ட் பெல்டில் இருந்து விலகி வந்ததாக சொல்கிறார்கள்)

அஸ்ட்ராய்டுகளின் வேகம் நொடிக்கு 25 - 30 கிலோமீட்டர்கள் என்பது ஒரு சராசரி கணக்கீடு. 

அளவை பொருத்து அஸ்ட்ராய்டுகளை "சிறு கோள்கள்" என்றும் சொல்லலாம். (கற்களாலும் உலோகங்களாலும் ஆனது) உதாரணமாக இடா எனும் அஸ்ட்ராய்டுக்கு டாக்டைல் எனும் (நிலா)துணைக்கோள் உண்டு. இது கலிலியோ ஸ்பேஸ்கிராப்ட்டால் 1993 ல் கண்டறியப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25(2013)ல் 7 சாட்டிலைட்டுகளுடன்   இந்தியாவின் PSLV C-20 ( Polar Satellite Launch Vehicle) ராக்கெட் செலுத்தப்பட்டது. அந்த ஏழில் ஒன்று சூட்கேஸ் அளவிலான கனடாவின் சாட்டிலைட் (NEOSSat) நூறு நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றிவிடும். இதன் முக்கிய பணி பூமிக்கருகில் வரும் அஸ்ட்ராய்டுகளை கண்காணிப்பதுதான். கனடியன் ஸ்பேஸ் ஏஜென்சி இதை ”வானத்திலொரு காவல்காரன்” ("sentinel in the sky") என்று வர்ணிக்கிறது.



அஸ்ட்ராய்டுகளில் தங்கம், பிளாட்டினம், ரோடியம், இருடியம், பலாடியம்..இப்படி மதிப்புமிக்க பல தாதுக்கள் அடங்கி இருப்பதாக விண்ணியல் ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மதிப்பு மிக்க உலோக தாதுக்களை பூமிக்கு கொண்டு வர ரோபோ விண் இயந்திரங்கள் தயாரிப்பு முயற்சியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

241 GERMANIA  எனும் அஸ்ட்ராய்டில் 95 டிரிலியன் டாலர் மதிப்புமிக்க உலோக தாதுக்களை கொண்டு வரலாம் என மதிப்பிடுகிறார்கள். எதிர்காலம் தான் இதற்காண விடையளிக்க வேண்டும்.

நாசா அடுத்த பத்தாண்டுக்குள்ளாக ஒரு கிராப்டை(CRAFT) ஒரு அஸ்ட்ராய்டில் (1999 RQ36) தரை இறக்கி அதிலிருந்து சாம்பிளை எடுத்துவர திட்டம் (OSIRIS -REx MISSION) வைத்துள்ளது.

Friday, February 22, 2013

கொம்பிற்காக வேட்டையாடப்படும் காண்டாக்கள் (அதிர்ச்சி தகவல்)

இந்த பதிவு கொம்பிற்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள் என்ற பதிவின் தொடர்ச்சி. இந்தியாவைத் தவிர பிற பகுதிகளில் காண்டாக்களின் நிலைமை குறித்து இப்பதிவில் காண்போம்.


தென்னாப்பிரிக்காவில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு கொல்லப்படுகின்றன.  2008ல் ஆண்டுக்கு கொல்லப்படும் எண்ணிக்கை 83 ஆக இருந்தது  2012 ல் இது 583 ஆக அதிகரித்து விட்டது.

அப்பொழுது இவைகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களும் தற்போது பயன் படுத்தும் வித விதமான ஆயுதங்களுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

டெக்னாலஜி வளர வளர உயிரினங்களின் வாழ்வு நாசமாக்கப்படுகின்றன.

ஆசிய வகை மருந்துகளில் வலிநிவாரணியாகவும் காண்டாவின் கொம்புகள் பயன் படுத்தப்படுகின்றன. அதிலும் சைனா மற்றும் வியட்நாமில் இதன் கொம்புகளை கொண்டு செய்யப்படும் மருந்து புற்றுநோயை குணப்படுத்துவதாக சொல்வது உச்ச கட்டம். 

சமீபமாக காண்டாவின் கண்களும் மருத்துவ குணம் மிக்கது என்கிறார்கள் (முடியல...)

வாத ரோகம், ஆர்திடிஸ் இவைகளுக்கு காண்டா கொம்புகள் அருமருந்து என்று சொல்வதற்கு அறிவியல் பூர்வமான எந்த உத்தரவாதமும் இல்லை.

பல கோடிக்கு கொம்பின் பொடிகள் விற்பனை நடக்கிறது. ”சின்ன கல்லு பெத்த லாபம் என்பது போல்” தங்கம் அடுத்து காண்டா கொம்பு அடுத்து ஹெராயின் உலக மார்கெட்டில் பிரபலம். (உ.தா  : தங்கம் 24,700 டாலர்/lb, 30,000 டாலர்/lb,
ஹெராயின் 90ம்000 டாலர்/lb இன்றைய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 54.38 lb=Pound)


உண்மையில் நமது நகத்தில்,தலை முடியில் எப்படி கெரடின் எனும் மூலப்பொருள் உள்ளதோ அதே போன்றே காண்டா கொம்புகளும் அழுத்தப்பட்ட முடி போன்றது தான். அதனால் இது நமது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்வது சுத்த பொய் என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.

சைனா கலாச்சார மருத்துவர்கள் சொல்வது பழங்கால மருத்துவங்கள் பொய்யாகாது. இக் கொம்பில் உள்ள மருத்துவ குணம்
சார்ஸ், எய்ட்ஸ் இவற்றையும் சரியாக்கும் அருமருந்து என்கிறார்கள்.
சைனா அரசு சொல்வது கள்ள மார்கெட்டை ஒழிக்க வேண்டுமானால் காண்டாமிருகங்களை இனப் பெருக்கம் செய்து வளர்க்க வேண்டும் என்று சொல்கிறது. (கவனிக்க ஒரு காண்டாமிருகம் 15 வயதிற்கு பிறகே இனப்பெருக்க தகுதியை பெறுகிறது )

மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது காண்டாவின் கொம்பு மட்டுமல்ல. இன்னும் சைனாவின் பூர்வீக மருத்துவ நம்பிக்கைகள் என்ன சொல்கிறது?
(இவை சில உதாரணங்கள்...)

  • ஆர்தடிஸ் மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்க்கு புலியின் எலும்புகள்.

  • ஒற்றைத் தலைவலி, கல்லீரல் பிரச்சனை,பல்வலிக்கு அருமருந்து கருங்கரடியின் பித்த நீர்.

  • அடிவயிற்று வலி, ரத்த ஓட்ட குறைபாடு, தோல் நோய்க்கு கஸ்தூரி மானின் கஸ்தூரி.

  • கிட்னி மற்றும் ரத்த ஓட்ட் குறைபாட்டிற்கு - கடல் குதிரை மருந்து (ஒவ்வொரு ஆண்டும் பல நூறு டன் கடல் குதிரைகள் இதற்காக கொல்லப்படுகின்றன)

  • ஆண்மை குறைவிற்கு நன்கு காயவைக்கப்பட்ட வல்லூரின் மூளை.

  • ஆசியாவில் பிரபலமான மருந்து புலியின் எலும்பும், கடல் குதிரையை பயன் படுத்தி செய்யப்படும் மருந்து தான்.

உலக அளவில் காண்டாமிருகங்களின் மொத்த எண்ணிக்கை கூட்டி கழித்து பார்த்தால் 23,000 மட்டுமே.  இவற்றில் ஐந்து வகைகள் உள்ளன. தற்போதைய எண்ணிக்கை நிலவரம் கீழே. இதில் சில கூடிய சீக்கிரம் அழிந்து போய்விடும் அபாய கட்டத்தில் உள்ளன.

இந்திய காண்டாமிருகம்






தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டா
(இந்த இனத்தை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது)


இந்தோனேசியா,மற்றும் மலேசியாவில் காணப்படும்
சுமத்ரா காண்டாமிருக வகை (அழிவின் விளிம்பு நிலை விலங்கு)

இதுவும் இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் இருக்கும்
ஜாவா காண்டாக்கள் (விரைவில் இவ்வுலகைவிட்டு மறைந்து போக இருக்கின்ற வகை)

தென் ஆப்பிரிக்கா மற்றும் டெமாக்ரடிக் ரிபப்ளிக் காங்கோ நாட்டில் காணப்படும் வெள்ளை காண்டாக்கள். இதில் முக்கியமாக காங்கோவில் ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டது. தென் ஆப்பிரிக்கா தீவிர பாதுகாப்பில் உள்ளதால் இந்த எண்ணிக்கை குறையவில்லை.

படத்தில் கொம்பு போய் உயிர் பிழைத்து தன் இணையோடு சேர்ந்திருக்கும் காண்டாக்கள்

காண்டாமிருகங்களை பாதுகாக்க பயன் படுத்தப்படும் நவீன தொழில் நுட்பங்கள்:

GPS டிரான்ஸ்மீட்டர் - அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்க
கொம்புகளில் மைக்ரோசிப் பொருத்துதல்

டாக்சிபிகேசன் - கொம்புகளுக்கு நிறமாற்றம் செய்யும் கெமிக்கலை பயன்படுத்துதல். இதனால் அவைகளுக்கு பாதிப்பு இல்லை. கொம்பை மட்டும் திருடும் கும்பல் இதை அறிந்து கோபத்தில் அவற்றை கொல்கின்றனர்.

DNA மூலக்கூறு லைப்ரரி (இந்த டேட்டாவை வைத்து அடையாளம் மட்டுமே காண முடியும்.)

கண்காணிப்பு உள்ள இடங்களுக்கு இவைகளை குடியமர்த்துதல்.

வட கென்யாவில் வெள்ளை காண்டாக்கள் நான்கு மட்டுமே உள்ளன இவற்றிக்கு 24 மணிநேரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. (காலக் கொடுமை) படத்தில் இருப்பது அந்த காட்சி.


(நன்றி : நேஷனல் ஜியாகிரபி)

Thursday, February 21, 2013

கொம்பிற்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள் !


காண்டாமிருகத்தின் ஒற்றை கொம்பு அதன் பாதுகாப்பிற்காக இயற்கை அளித்த வரம் ஆனால் அதுவே அவற்றிற்கு எமனாகிறது. ஒற்றை கொம்புடைய குதிரைகள் (யூனிகார்ன்ஸ்) பற்றி கதைகளில் படித்திருக்கிறோம். நிஜத்தில் நடமாடும் யூனிகார்ன்கள் காண்டாமிருகங்கள்.



இந்தியாவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் குறைந்த அளவிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இப்படி வேட்டையாடப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகள் உடனடியாக பொடியாக மாற்றப்பட்டே கள்ள மார்கெட்டில் விற்கப்படுகின்றன.

ஒரு கிலோ எடையுள்ள ரினோவின் கொம்பு சுமார் 65000 டாலர் மதிப்புடையது (தங்கத்தை காட்டிலும் விலை ரொம்ப சாஸ்தி இந்திய ரூபாயில் 35லட்சத்து 30ஆயிரம்) (இதன் கொம்பு மருத்துவ குணம் மிக்கது அட தேவுடா எவன் இதை கண்டுபிடிச்சானோ ?)

காஷிரங்கா தேசிய பூங்காவில் உள்ள தாயும் சேயும்

அசாமில் கைபற்றப்பட்ட காண்டாவின் கொம்பு

இந்திய காண்டாமிருகத்தின் கொம்புகள் 25 செ.மீ நீளம் கொண்டது. 
எடை 1500 முதல் 2100 கிலோகிராம். 
 தலைமுதல் வால் வரை 3.1 மீ முதல் 3.8 மீட்டர். 
கால் மற்றும் உடல்களில் தடிமனான செதிலான தோல் கொண்டது. 
உணவு பழங்கள் மற்றும் புற்கள்.  அரிசி மக்காச்சோளம் மற்றும் பயிர்கள் பிடித்த உணவு. 
பெண் காண்டா 15 ஆண்டுகளுக்கு பிறகே குட்டி போடும் பக்குவம் பெறுகிறது. பேறு காலம் 16 மாதங்கள். தாய், குட்டியை நான்கு ஆண்டுகள் பாதுகாக்கிறது. (vulnerable) அழிவு நிலை விலங்கு எண்ணிக்கை 2900 இருக்கலாம். 

இந்திய காண்டாமிருகம், முன்பு இது ஆப்கான் எல்லையில் இருந்து தென் கிழக்கில் பர்மா வரையிலும் இவை வாழ்ந்து வந்தன இப்போதுகுறிப்பிட்ட  10 இடமாக குறைந்து விட்டது மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதம் காஷிரங்கா(kaziranga அஸ்ஸாம்) தேசிய பூங்காவிலும், மீதம் பூட்டான், ஷிட்வானிலும் (நேபாளம்) உள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 1905ன் கணக்கெடுப்பின் படி இவை 2000 இருந்தன இன்று 20 ஆக குறைந்து விட்டது ( வாழ்க மனிசர்கள் !)


யானைகளை போன்றே இவையும் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக காஷிரங்கா வாசிகள் கூறுகிறார்கள்.

காஷிரங்கா தேசிய வன பாதுகாவலர்கள் 500 பேர் உள்ளனர்.  காண்டாமிருகங்களை வேட்டைகும்பலில் இருந்து பாதுகாப்பதே பெரும்பணி. பாதுகாப்பது கடுமையான பணி, சராசரியாக ஒரு நாளுக்கு 10 முதல் 20 கிலோமீட்டர்கள் அவர்கள் நடக்க வேண்டியுள்ளது. உயிர் ஆபத்து நிறைந்த வேலை என்கிறார்கள். பாதுகாப்பிற்காக 315 ரைபிள் ரக துப்பாக்கி தான் பயன்படுத்துகிறார்கள்.

காஷிரங்கா தேசிய பூங்காவில் பணியாற்றும் வன பாதுகாவலர்களின் ஒருமாதத்திய சம்பளம் 160 டாலர்கள் (ரூபாயில்.8700).  ஒரு பாதுகாப்பு குழுவில் குறைந்தது மூன்று நபர்கள் பணியில் ஈடுபடுவர்.

இன்னும்...அடுத்த பகுதியில் பல அதிர்ச்சி தகவல்களுடன் தொடர்கிறேன்.

நன்றி : prof.ஆண்ட்ரூ பாம்போர்ட், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி மற்றும் பி.பி.சி

Wednesday, February 20, 2013

ஒரே தினத்தில் இரண்டு அழைப்பிதழ்கள்


கோவை இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கியச் சந்திப்பு இம்மாதம் 27ம் நிகழ்வு வரும் ஞாயிறு (24.2.2013) காலை 10 மணிமுதல் மதியம்  1.30 மணி வரை நடைபெற உள்ளது.  இடம் கோவை மரக்கடை பஸ் நிறுத்தம் அருகில் எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி.

அன்றைய தினம் அஜயன் பாலாவின் “உலக சினிமா இரண்டு தொகுதிகள்”


எச்.பீர் முகமது வின் இரண்டு நூல்கள் அறிமுகம்.

அதோடு கூட கோவை பதிவர்களின் புத்தகங்கள் பற்றி சிறப்புரை நிகழ உள்ளது.


கோவை மு.சரளாவின் “மெளனத்தின் இறைச்சல்கள்” குறித்து கவிஞர் யாழி

அகிலாவின் “சின்னசின்ன சிதறல்கள்” குறித்து கவிஞர் ப. தியாகு

ஜீவாவின் “கோவை நேரம்” குறித்து பொன் இளவேனில்


இயக்குநர் திரு.ராம், திரு.ஆனந்த் (கோணங்கள்), திரு.ஞானி, திரு.நித்திலன், திரு.அஜயன் பாலா, திரு.சுப்ரபாரதி மணியன், மற்றும் கோவை பதிவர்கள் - ஜீவானாந்தம், கோவை.மு.சரளா, அகிலா அவர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.


இன்னொரு நிகழ்ச்சி


கீதா இளங்கோவனின் ஆவணப்படம் ”மாதவிடாய்” சிறப்புரை மற்றும் திரையிடல் 


கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அதே தினம் மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற உள்ளது.


இவ்விரு நிகழ்ச்சிக்கும் அன்பர்கள்.. நண்பர்களை வருக வருக என வரவேற்கிறோம்.


Monday, February 18, 2013

ஏன் எதற்கு எப்படி ? (மர்மப்பொருட்கள்)


அதிசய மர்ம உலோக கோளங்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்தில் 2.8 மில்லியன் ஆண்டு பழமையான கற்பாறைகள் கிடைத்தன. அவற்றில் இரண்டு ஒரு இஞ்சு விட்ட அளவு உள்ள அபூர்வ உலோக கோளங்கள் (உருண்டைகள்) கிடைத்தன.  ஒன்று நீல நிற உலோகத்தாலானது. இவற்றின் வெளிப்புரத்தில் நடுவில் குறுக்கு கோடு சரி சமமாக பிரிக்கப்பட்டு  இருந்த்து.  இணையான மூன்று சிறு துளைகள் போடப்பட்டு இருந்தன.
இன்னொரு கோளம் உள்ளீடு அற்றது (காலியான) இதனுள்
பஞ்சு போன்ற பொருள் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தது. எதற்காக யார் இவற்றை உருவாக்கினார்கள் என்ற மர்மம் இன்றுவரை துளங்க வில்லை.


அதிசய கற்பாறை உருண்டைகள்.

1930 ல் கோஸ்டாரிக்காவின் காட்டு பகுதியில் வாழைத்தோட்டம் அமைப்பதற்காக நிலம் சுத்தப்படுத்தப்பட்டது.  அந்த இடத்தில் டஜன் கணக்கிலான சிறிதும் பெரிதுமான கற்கோள உருண்டைகள் கிடைத்தன.
சிறியது டென்னிஸ் பந்து அளவிலும் பெரியது 16 டன் எடையுடன் 8 அடி விட்டத்துடன் இருந்தன.  மிக துள்ளியமான உருண்டைவடிவில் இது இயற்கையாக உருவாக வாய்ப்பு இல்லை மனிதன் உருவாக்கி இருந்தால் எப்படி உருவாக்கி இருக்கமுடியும் எதற்காக? யார் ? இதை உருவாக்கினார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது.



Saturday, February 16, 2013

மாயமாய் மறைந்து போன புத்தர் தங்கச்சிலை


லூஜான் என்ற பிலிப்பைன் தீவு (மணிலாவிற்கு தெற்கே 200 மைல் தெலைவிற்கப்பால் உள்ளது) இதில் 1970 ல் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரோஜர் ருக்ஸாஸ் (Roger Roxas).

ஃபெர்டிணன்ட் மார்கோஸ்  (Ferdinand Marcos )1965 முதல் 1986 வரை பிலிப்பைனை தன் கட்டுக்குள் வைத்திருந்தவர். (ஆரம்பத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னாலில் சர்வாதிகாரியானவர்) அவரின் அப்போதைய சொத்துமதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்கிறார்கள்.

(மே 5,1971ல்) அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்தான் ரோஜர் ரூக்ஸாஸ். வழக்கு என்னவென்றால்,  மில்லியன் டாலர் மதிப்புடைய தங்க புத்தர் சிலையை மார்க்கோஸ் மெய்காப்பாளர்களுடன் வீடு புகுந்து திருடிச்சென்றுவிட்டார் என்பது தான்.

சரி ரோஜருக்கு ஏது இந்த தங்க புத்தர் சிலை ?

ரோஜர் ருக்ஸாஸும், ஆல்பர்ட் பூஜிகாமியும் நண்பர்கள்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் ஆர்மியில் ஆபீசராக வேலைபார்த்தவர் ஆல்பர்ட் பூஜிகாமியின் தாத்தா.   இவர்களுக்கு பெட்டி பெட்டியாய் தங்க கட்டிகள் இருக்குமிடம் பற்றிய தகவல் அடங்கிய ஒரு வரைபடம் கிடைக்கிறது.   அந்த வரைபடத்தின் படி ஜப்பானியர்கள் (இரண்டாம் உலகப்போர் சமயத்தில்) கட்டிய சுரங்கப்பாதையில் ( Tunnel) புதையல் இருக்கலாம் என்ற குறிப்புகளை பெற்ற  இருவரும், சிலருடன்  புதையல் தேடி புறப்பட்டனர்.

பல வாரங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் அந்த இடத்தை கண்டு கொண்டனர்.  வெடி வெடிக்கப்பட்டு அந்த சுரங்கப்பாதையின் வாயில் அடைபட்டு போயிருந்தது.  கடினமான தோண்டுதலுக்குபின் ஒரு வழியை கண்டு கொண்டனர். முதலில் ரோஜர் ரூக்ஸாஸ் இறங்கினான்.  ஒரு இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட (ஜப்பானிய) எலும்புக்கூடுகள் இருந்ததன அதன் பின்னே 2000 பவுண்டு எடைகொண்ட புத்தர் சிலை கிடைத்தது அதை தன் வீட்டிற்கு கொண்டு சென்றான் ரோஜர்.

அவர்களுக்கு மேற்கொண்டு புதையலைத் தேட,டிரக், வெடிப்பொருள்கள், கருவிகள் வாங்க, பணம் தேவைப்பட்டது அதனால் அந்த புத்தர் சிலையை விற்க முயற்சி செய்தனர்.  இவர்களுக்கு ஒரு சந்தேகம் சிலையினுள் எங்கேனும் ஒரு இடத்தில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்,  கட்டையால் சிலையை அடித்துப்பார்த்து சோதித்தனர். இந்த சிலையை வாங்க ஒருத்தன் வந்தான் அவன் அது தங்க சிலைதான் என்பதை உறுதி செய்தான். அவனது பார்வை முழுவது சிலையின் கழுத்து மீதே இருந்தது.




இதைகவனித்த ரோஜர் சிலையின் தலையை கழற்றினான். (அதனுள் வைரங்கள் இருந்திருக்கலாம்!) அப்போது அவனது சகோதரன் புகைப்படம் எடுத்தான். இது எதற்கென்றால் பின்னாலில் இவர்களிடம் புத்தர் சிலை இருந்தது என்பதற்கான ஆதாரத்திற்கு தான். ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது.  தகவல் மணிலா அதிபர் அரண்மனைக்கு சென்றது.  துப்பாக்கி முனையில் சிகப்பு ரிப்பன் கட்டிய துப்பாக்கிதாரர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்றனர் (குழந்தை வைத்திருந்த உண்டியல் உட்பட) அவனிடமிருந்த புத்தர் சிலையை பறித்து சென்றது.

அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் பயனில்லை. அங்கிருந்து ஒரு தீவிற்கு தலைமறைவானான் ரோஜர்.  ஆயினும் விடாமல் துரத்தி வந்தது மார்கோஸ் கும்பல்.  அங்கிருந்து ரோஜரை ஹோட்டல் அறையில் அடைத்து துன்புறுத்தினர், ரகசியங்களை அறிந்து கொள்ள.

ஜன்னல் வழியாக தப்பித்தான் ரோஜர்.   நேரடியாக நீதிபதியிடம் புகார் அளித்தான்.  (மார்கோஸ் செல்வாக்கு சரிந்திருந்த தருணம் அது)

ஆனால் அந்த கும்பல் பொய்யான ஒரு சிலையை காட்டி இதுதான் எனசொல்லியது.  கோர்டிற்கு செல்லும் ஒருநாள் மயங்கி விழுந்து இறந்து விட்டான் ரோஜர் (ஹார்ட் அட்டாக்) அவனோடு சேர்த்து ரகசியமும் போய் விட்டது.


ஃபெர்டிணன்ட் மார்கோஸ் 1989 ல் இறந்து விட,  இன்றும் அந்த குடும்பத்தாரிடமே புத்தரின் தங்கச்சிலை (ஒரிஜினல்) இருக்கலாம்... என்ற யூகம் மட்டுமே எஞ்சியுள்ளது.


புத்தம் சரணம் கச்சாமி !

Friday, February 15, 2013

"காடுறை உலகம்" இதில் உள்ளது என்ன ?


மொழிக்காகவும், இயற்கைக்காகவும் இப்புத்தகம் ஒரே நேரத்தில் வாதாடுகிறது. இந்த புத்தகத்தில் இருக்கும் புகைப்படங்கள் அத்துணையும் இயற்கை ஆர்வலர்களும், சூழல் அக்கரை மிகுந்த புகைப்படக் கலைஞர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் எடுத்த படங்கள். கூட்டு முயற்சியால் பெறப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


”ஓசை“ கோவை சுற்றுச் சூழல் அமைப்பின் சீரிய முயற்சியில் வெளிவந்த புத்தகம் இது நமக்கு இயற்கைச் சூழலின் அவசியத்தை, காட்டு விலங்குகள், பல்லுயிர்களின் அவசியத்தை கிராமமாகட்டும், நகரமாகட்டும் காடிருந்தால் தான் நாடு என்பதை மனதில் பதிய வைக்கிறது.

”நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தில் (யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது) எடுக்கப்பட்ட புகைப்படங்களே இப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பு.


சுயநல மனிதர்களால் காட்டுயிர்கள் அழிக்கப்படுவது மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கப்பட வேண்டும் என போராடி வரும் போராட்டக்காரர்களுள் ஒருவர் இப்புத்தக கவிஞர் அவைநாயகன்.




இப்புத்தகத்தில் என்ன உள்ளது ? என்ன சொல்கிறது ?

இப்புத்தகம் ஒரு காட்டுயிர்களின் புகைப்பட ஆல்பமாக மட்டுமல்ல பல்வேறு சிந்தனைகளை நம்முள் விதைக்கிறது. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு கவிதை இதை செய்கிறது.

சில கவிதைகள்...

சேற்று உடம்புடன் மரத்தில் உரசி சென்ற யானையின் சுவடு பற்றிய ஒரு படம் அது கவிதை கண்களுக்கு இப்படி தெரிகிறது.

சேறுபடிந்த
வேங்கை மரத்தின்
ஈர முதுகில்
புரண்டெழுந்து நடந்து போன
யானையின்
வருகைப்பதிவு.


காற்றின் குறுக்காக கடந்து செல்லும் சாலையின் காட்சி இதற்கான கவிதை

காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக் கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை...



புள்ளிமானும் குரங்கும் நண்பர்களா?

நிழலில் நிற்கும்
புள்ளிமான் பசியாறத்
தேக்கிலை பறித்துப் போடும்
உச்சிமரச்
சாம்பல் மந்தி...


அத்துமீறி அழிக்கப்படும் மலைவளம் குறித்து இப்படி சாடுகிறது கவிதை

மலை தகர்த்துப்
பெயர்த்த கல்லில்
உருவான
நகரக் கட்டிடங்கள்
வரிசையில் நிற்கின்றன
குடிநீர் இணைப்பு வேண்டி


(இதில் எத்துணை பொருள் பொதிந்துள்ளது ஒருமுறைக்கு இருமுறை படித்தால் புரியும்)

இன்னும்..இன்னும் காட்டின் நுட்பங்களை கற்றுத்தருகிறது இப்புத்தகம்.

நீரில் அமிழ்ந்த புலியின் மீசையைப்
பூச்சியெனக் கருதி
இழுத்துச் சீண்டும்
கெண்டை மீன்கள்..


அழிந்துவிட்டதாய் கருதப்படும் வரகுக் கோழி எப்படி இருக்கும் இது பற்றி ஒரு கவிதை

நின்ற நிலையில்
எம்பிக் குதித்துத்
துணையை ஈர்க்கத்
தேடிக்கொண்டேயிருக்கும்
வரகுக் கோழி...


உடலில் உப்பு ஏறச் சொறிந்தலையும் சுழித்தலைக் குரங்கு...
கூட்டோடு அழிந்து போன தன் முட்டையைத் தேடும் கழுகு,
இறந்த குட்டிக்காக அருகிருந்து கண்ணீர் உகுக்கும் தாய் யானை..
இப்படி மனிதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளையும் படம் பிடித்துக்காட்டுகிறது சாடுகிறது கவிதைகள், கவிதைகள்..


”காடுறை உலகம்” முதல் பதிப்பு மார்ச் 2011
96 பக்கங்கள் விலை ரூ.120/-

Thursday, February 7, 2013

புத்தக வெளியீட்டில் நடந்தது என்ன ?

புத்தக வெளியீட்டில் நடந்தது என்ன ? இந்த மாதிரி தலைப்பு வைப்பது மூத்த பதிவர்களிடம்  கற்றுக் கொண்டது தான்.

இந்த தலைப்பிற்கு வருகிறேன்.  நிகழ்ச்சி எப்படி எப்படி நடைபெறவேண்டும் என்று முடிவான பின் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.  நிகழ்ச்சி எப்படியும் சிறப்பாக நடக்கும் என்பதில் நம்பிக்கை இருந்தது.

இனிய மாலை வேளை கடந்த ஞாயிறு பிப்ரவரி 3ஆம் நாள் கோவை ராம் நகரில் உள்ள மங்களா இண்டர்நேசனல் a/c  அரங்கில் வெளி நபர்களின் தொந்தரவு ஏதுமின்றி சிறப்பாக நடந்து முடிந்தது.






அகிலா அவர்களின் சின்னச் சின்ன சிதறல்கள் புத்தகத்தை திரு .கண்ணன் கனகராஜ் அவர்கள் வெளியிட ஈர நெஞ்சம் மகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


 கோவை மு.சரளாதேவி அவர்களின் மௌனத்தின் இரைச்சல் புத்தகத்தை கோவை திரு ஞானி வெளியிட ஆனந்தம் இதழின் ஆசிரியர் திரு .ஆனந்த் அவர்கள்.


திரு .ஜீவானந்தம் அவர்களின் கோவை நேரம் புத்தகத்தை திரு .ஓஸோ. ராஜேந்திரன் அவர்கள் வெளியிட சூழல் ஆர்வலர் திரு . யோக நாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்


இருவருக்கும் இடையில் பவ்யமாக பின்னால் நிற்பவர் நண்பர் ஜீவானந்தம்.


கோவையில் இருந்து வெளிவரும் இதழ் “ஆனந்தம்” இதன் ஆசிரியர் திரு. ஆனந்த் அவர்கள் ”மெளனத்தின் இரைச்சல்” புத்தகம் கோவை திரு.ஞானி அவர்களிடம் பெற்றுக்கொண்டு ஆற்றிய உரை.




கோவை பதிப்பாளர்களின் முதல் புத்தகங்கள் கால்பதித்ததற்கு என் வாழ்த்துக்கள்.

தமிழ் நாட்டை பொருத்தளவு கோவையில் இருந்து நிறைய புத்தகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த உருவாக்கம் நிறைய நபர்களுக்கு சென்று சேர்வதே இல்லை. முதல் பதிப்பே ஒரு வித்தியாசமான முறையில் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். 

இவ்வுலகத்தில் யாராக இருந்தாலும் சித்தர்களாக இருந்தாலும், புத்தனாக இருந்தாலும், அவர்கள் தேடுவது மெளனம் மட்டுமே. தேடும் மெளனம் வெளியே இல்லை உள்ளேதான் இருக்கிறது என்பதை கண்டுதெரிவித்தார்கள். அப்படி ஒரு தேடல் தான் கோவை மு.சரளாவின் “மெளனத்தில் தோன்றிய கவிதை மிகச்சிறப்பாக புத்தக வடிவில் வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள் (மெளனத்தின் சிதறல்கள் )

பெண்கள் என்றால் “சக்தி” என்று நாம் அனைவரும் சொல்வோம். இடைப்பட்ட காலத்தில் நடந்த பல வித போராட்டங்களால் அந்த ச க் தி என்ற வார்த்தையில் இருந்த புள்ளி மறைந்து  ச க தி என்றாகி விட்டது. இந்த மாதிரி பெருங் கவிஞர்கள் உங்கள் கால் பதிப்புகளை புத்தகங்களாகவும், சமூக ஆர்வளர்களாகவும், வெளியே வர,வெளியே வர... நீங்கள் வைக்கும் ஒவ்வொரு துளியும்  அந்த சகதியை சக்தியாக மாற்றும் அந்த சக்தி அனைவருக்கும் மிகப்பெரிய முன்னேற்றத்தை உருவாக்கும் என்பதில் ஒரு துளி ஐயமும் இல்லை.

இந்த வாய்ப்பிற்கும் நன்றி உங்கள் முயற்சியும் தொடரட்டும் அதற்கான பயிற்சியும் தொடரட்டும். விழாவை சிறப்புற நடத்தி என்னை அழைத்த மறைமுகமான நேரிடையான நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி.
நமது பாதிப்பை வாசிப்பாக மாற்றினாலும் இன்னும் பல கவிஞர்கள் நம் ஊரிலும் விதைபோன்று முளைப்பார்கள். இது போன்ற விதையை நமது கவிஞர்கள் மூலமாக விதைத்துவிட்டார்கள்.

விதை விதைத்தவன் உறங்களாம் விதை உறங்காது அதுபோல் நீங்கள் இன்று விதைத்த விதை  உறங்காது அது மிகப்பெரும் மரமாக மாறும்.

இந்த மூன்று புத்தகங்கள் மூன்று ஆப்பிள் பழங்களை போல் உள்ளன. ஒவ்வொரு ஆப்பிளிலும் சில விதைகள் உள்ளன ஆனால் ஒவ்வொரு விதையிலும் எவ்வளவு ஆப்பில் மரங்கள் உள்ளன என்பதை ஒருவரும் அறிய முடியாது. நீங்கள் விதைத்தது மட்டுமின்றி அறுவடை செய்து அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றியுள்ளீர்கள்.

ஆனந்தம் என்றென்றும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.



திரு ஞானி அவர்களின் கனீரென்ற பேச்சுகளை கேட்டிருந்தாலும் நேரில் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் அவரிடம் கைகுலுக்கும் போது ஏற்பட்ட ஸ்பரிசம் என் தந்தையின் நினைவலைகள் என் கண்முன் வந்து சென்றது ஏன் ? தெரியவில்லை.

கோவை ஞானியும், தினமலர் குமார் அவர்களும்



கோவை கவிஞர் அவை நாயகன், சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு யோக நாதன்,கோவை ஞானி, தினமலர் குமார் அவர்கள்...




திரு. கோவை ஞானி அவர்களின் பேச்சிலிருந்து சில துளிகள்

அதிகார வர்க்கமாகட்டும் அரசியலாகட்டும் நாம் சமூகத்தில் சந்திக்கும் பலவும் நம்மனதில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. இந்த தாக்குதலை உற்று நோக்கும் ஒரு கவிஞன் தன் மன அழுத்தங்களை மெளனத்தின் இரச்சலாக கேட்கிறான் இங்கு கவிதாயினி கோவை மு.சரளா அவற்றை தன் சில கவிதைகளில் கருப் பொருளாக கொண்டு நுட்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இம்மாதிரி சொற்களின் நுட்பங்களை அறிந்திருப்பது அவசியம். அத்தகைய தமிழின் வளர்ச்சிக்கு சரளாவின் எழுத்தின் போக்கு அமைந்திருக்கிறது.

எந்த ஒரு கவிதையும் தாம் வாழக்கூடிய சமூகத்தின் மீது அக்கரை கொண்டதாக இருக்க வேண்டும். சாதிக் கொடுமைகள் மலிந்துருக்ககூடிய சமூகம் நம் சமூகம். பெண்ணை இழிவு படுத்தக்கூடிய சமூகம். ஆணாதிக்க திமிர் மலிந்து வரக்கூடிய சமூகம். இது எந்த ஒரு கவிஞனையும் ஈர்த்து விடமுடியாது.  இவற்றை எதிர்த்தே தன் கருத்துக்களை எழுதுவான்.
சரளாவின் பல கவிதைகள் இவற்றை செவ்வனே சொல்கிறது.

தம்மையே காக்க முடியாத கடவுள் என்று சரளா தன் ஒரு கவிதையில் ( அது சாய்ந்த கோபுரங்கள் ) சாடுகிறார்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதையின் கூறு தமிழை பற்றி பாடும் போது தெரிகிறது. தமிழை தாய் தெய்வம் என்று பல இலக்கியங்களில் போற்றப்படுகிறது.  பெருமை பெற்ற இந்த மொழி இன்றைக்கு  நம்மவர்களால், அரசால, கல்வி நிலையங்களால, நிர்வாகங்களாக கவனிக்கப்படுவது இல்லை. இப்படி பல சிறப்புகளை பெற்ற மொழியை
மாபெரும் தமிழர்களான நாமே கை விடுகிறோமே என்ற வருத்தம் அவரின் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளில் வெளிப்படுகிறது.


இந்த கவிதைகளை படிக்கும் போது யார் நெஞ்சமும் குமுறும்.


அழகிய நடையில் இந்த காலத்திற்கு ஒத்த முறையில் மிக தெளிவான அழகிய நடையில் தேவையான பொருள் சுவையோடு, எந்த குறையையும் காண முடியாத வகையில் சிறப்பாக இருக்கிறது.

இவரோடு கூட புத்தகங்களை வெளியிட்டிருக்கும் நண்பர்களுக்கும் என்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

(எப்படி இவர் இவ்வளவு விசயங்களை கிரகித்து மடைதிறந்த வெள்ளமென பொங்கிப்பாயும் சொற் பிரயோகங்களை கையாள்கிறார் என்பது பெரும் வியப்பே ! இவரது பேச்சை கேட்க முடியாதவர்களுக்காக இங்கே சில வற்றை மட்டுமே ஆவணப்படுத்தியுள்ளேன். பதிவர்கள் என்றாலே ஆவணப்படுத்துபவர்கள் தானே.)



சிலர் சிறந்த பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள்..சிறந்த வலைப்பதிவர்களாகவும் இருக்கிறார் என்னை பொருத்தளவு நான் ஒரு சாதாரண பதிவர் மட்டுமே. என்னை இந்த விழாவின் சிறப்பு பேச்சாளராக போட்டு விட்டார்கள். என்ன செய்வது பேசித்தானே ஆக வேண்டும்.




எனது பேச்சிலிருந்து...

 பேருந்து, ரயில் பயணங்களின் போது மூன்றாவது ஆள் திருவாளர் பொது ஜனம் நாம பேசுவதற்கு இடையில் புகுந்து கொள்வார்.

ஒரு நாள் வலைத்தளம் பற்றி பேசிக்கிட்டு இருந்த போது பொது ஜனம் உள்ள புகுந்தார்.

“அண்ணே அதுல எத்தனை மாடி இருக்கு ? “

அது பில்டிங் இல்ல பிளாக்குன்னு சொன்னதும் “ அதான் எனக்கு தெரியுமே “ ன்னார்.

அடுத்து முகப் புத்தகம்..கீச்சு பத்தி பேச்சு வந்தது.

”இது எந்த கடையில கிடைக்குது “ ன்னு கேட்டார்.

Face book, twitter ன்னு சொன்னது என்ன சொல்லியிருப்பார்...

“அதான் எனக்கு தெரியுமே “

இப்படித்தான் பல பேர் தமக்கு தெரியாது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை.

நாம எழுதும் வலைப்பதிவுகளை புத்தகமாக கொண்டுவர முடியுமா?

இந்த கேள்விக்கு சாட்சியாய் நம் நண்பர்கள் அகிலா, சரளா, ஜீவா முத்தான மூன்று புத்தகங்களை முனைப்போடு நம்முன்னே கொண்டுவந்துள்ளனர்.

இந்த சமூகத்தில் பெண்களின் பல முகங்களையும், பரிமாணங்களையும் நம் முன் படம் பிடித்து காட்டுகிறது “ சின்ன சின்ன சிதறல்கள்”

இந்த சமூகம் பெண்ணான தம்மீது திணிக்கும் பல வித எண்ணத் தாக்குதல்களை “ சொல் “ எனும் சாட்டையால் சுழற்றியடிக்கிறது “ மெளனத்தின் இரைச்சல்”

இந்த சமூகம் மறந்து போன பல இடங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் ஞாபகப் படுத்தி நம்மோடு உரையாடுகிறது “ கோவை நேரம்”

பத்திரிக்கை, தொலைக்காட்சி இவற்றிற்கு அடுத்து இணைய தளங்கள் வழுவான ஊடகமாக இருக்கிறது.

கட்டற்ற கலைகளஞ்சியமாக திகழ்கிறது.
கோவை வலைப்பதிவு நண்பர்கள் அமைப்பு இளைய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க ஆர்வமாக இருக்கிறது. இதற்காக தமிழார்வம் மிக்கவர்களை வலைத்தளம் துவங்கவும், அவர்களின் படைப்புகளை “ கோவை வலைப்பதிவர் பிரசுரத்தின்” மூலமாக புத்தகமாக வெளிக்கொண்டுவர ஆதரவு அளிக்கும்.

விவசாயி பயிர் வளர்க்கிறான், எழுத்தாளன் எண்ணங்களை விதைக்கிறான் வளர்க்கிறான்... என்று சொல்லி முடிதேன்.



 (ஏதோ புட் பாய்சன் போல உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாட்களாக வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை. அதனாலேயே இந்த பதிவை சற்று தாமதமாக எழுதியிருக்கிறேன். இன்னும் சில சந்தோச தருணங்களை பின்னர் பகிர்கிறேன்)

Friday, February 1, 2013

கேன்சர் சிகிச்சைக்கு நானோ டெக்னாலஜி..


ஒளியானது உலோகத்தின் மீது பட்டு பிரதி பலிக்கும் போது ஏற்படும் எலக்ட்ரான் அடர்த்தி அலைகள் ப்ளாஸ்மான்கள் (Plasmons ) என அழைக்கப்படுகிறது. இதனுடைய அலை நீளமானது சாதாரன ஒளியின் அலை நீளத்தை விட பத்து மடங்கு குறைவானது.



100 மில்லியன் மிகச்ச்ச்சிறு (அதாவது ஒரு துளையின் அளவு நம் தலைமுடியை குறுக்குவிட்டத்தின் அளவை விட 200 மடங்கு சிறியது)  துளைகளிடப்பட்ட மிக மிக மெல்லிய தங்க தகட்டில் (gold foil) மேற்கொண்ட ஆராய்ச்சியில் ப்ளாஸ்மான்ஸ் எனும் ஒளியானது பிரதி பலிப்பதை கண்டறிந்தார் “ தாமஸ் எபீஸன் (Ebbeesen)” ( ஆண்டு 1989 ) இது மேஜிக் ஒளி என்று மட்டுமே அப்போது அறியப்பட்டது.(நார்வே காரரான இவர் யு எஸ் NEC research institute ல் physical chemist ஆக இருந்தார் )

அவரின் உடன் வேலை செய்தவர் பத்து ஆண்டுகளுக்கு பின் இந்த மேஜிக் ஒளி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார் இந்த ஒளியே நானோ டெக்னாலஜியில் பல புது திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. டிஜிடல் கேமரா, சோலார் எனர்ஜி, கேன்சர் தெரபி,கம்யூட்டர் மைக்ரோ சிப்புகள்,ஆப்டிக் கேபில்கள், இப்படி பல துறைகளில் இந்த டெக்னாலஜி பரிசோதிக்கப்பட்டுள்ளது.


போஸ்டன் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் ப்ளாஸ்மான்களை பயோ சென்ஸாரை உபயோகப்படுத்தி ஒருவருக்கு எபோலா போன்ற கொலைகார வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை எளிதில் அடையாளம் கண்டறிய முடியும் என்கின்றனர்.

ப்ளாஸ்மான்கள் ஒளியோடு எலக்ட்ரோ மேக்னடிக் அலையையும் கடத்தும்.

லிகியூர்கஸ் கோப்பை (Lycurgus Cup)

நான்காம் நூற்றாண்டு (CE ) ரோமன் காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை லண்டன் மியூசியத்தில் உள்ளது. இது கண்ணாடி மற்றும் உலோக தாதுக் கலவையால் தயாரிக்கப்பட்டது. இதில் என்ன சிறப்பு என்றால்   வெளிப்புறத்தில் விழும் ஒளியினால் பச்சை நிறமாகவும் உள்புறத்தில் பிரதிபலிக்கும் ஒளியினால் வெளிர் சிகப்பு நிறமாகவும் கோப்பை ஒளிருகிறது.

அப்படியானால் அந்த காலத்திலேயே ப்ளாஸ்மான்களை பற்றி அறிந்திருக்கின்றனரா ? ( ரோம தேசத்தார்க்கும் தமிழருக்கும் தொடர்பிருந்தது என்று வரலாறு சொல்கிறது..அது தனி ஆராய்ச்சி ? ! )

புற்றுநோய்க்கு நானோ தங்கப்பொடி சிகிச்சை (Gold particles kill cancer cells)

(நம்மூர் தங்கபஸ்பம் சிக்கிச்சை நாம் அறிந்தது தான்)


புற்று நோய்க்கு நீண்ட கால ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன புற்று நோய் கிருமிகளும் பல வடிவங்களில் விஷ்வரூபமெடுத்து கொண்டே இருக்கின்றன.

நானோ டெக்னாலஜி மற்றும் மேலே சொன்ன ப்ளாஸ்மான் டெக்னாலஜியை இணைத்து இதற்கு தீர்வு காண எலிகளிடம் சோதனைகள் நிகழ்த்தி வெற்றி கண்டுள்ளனர்.

100 nm (nanometres)குறுக்குவிட்டமுள்ள மீச்சிறு தங்க துகள்களை சிலிக்கன் உட்கரு மற்றும் ரத்தசெல்களை பயன்படுத்தி ஒரு மாய உறை (Camouflages) நுண்பொருளை தயாரித்து அதை ரத்த நாளங்களினுள் செலுத்தி புற்று பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்புகிறார்கள்.

பின் ப்ளாஸ்மான் டெக்னாலஜியைப் பயன்படுத்தி 120 டிகிரி வெப்பக்கதிரை ஏற்படுத்தி புற்று கிருமிகளை அழிக்கிறார்கள்.பின் தங்க துகள்களை மீட்டெடுக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சையினால் பின்விளைவுகள் ஏற்படாது 10 - 12 நாட்களில் முழுக்க குணமடைந்து விடலாம் என்கிறார்கள்.

எலிகளிடம் மட்டுமே இச்சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்.

(பி.கு என்னால் புரிந்து கொள்ளப்பட்ட அளவிலேயே மேற்சொன்ன தகவல்களை கொடுத்திருக்கிறேன்.  கூடுதல் தகவல் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நானோ டெக்னாலஜி எதிர்கால வரலாற்றில் பல பல சாதனைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்)