சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் "உயிர் நிழல் 2012" (9 வது) எனும் காணுயிர் புகைப்படக்கண்காட்சி மற்றும் குறும்பட நிகழ்வு [சோலைகாடுகளைப் பாதுகாப்போம் -இயக்குநர் சேகர் தத்தாரி] நடைபெற்றது(5 அக் -14 அக் 2012) அவற்றில் இருந்து நாம் பெற்ற சில தகவல்களை இங்கு வழங்குகிறேன்.

உலகின் பாரம்பரிய இடங்களில் நன்றாக அறியப்பட்டுள்ள நமது மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மிக அரிய நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகியவற்றின் சிறப்பை அறிவுறுத்தி அவற்றின் பாதுகாப்பில் மக்களை பங்கேற்க வைப்பது இதன் சிறப்பு.
காடுகளை காப்பாற்றுவதன் மூலமே நம் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் நீர் நிலைகளையும் உயிர்ச் சூழலையும் பாது காக்க முடியும் என்பதை அறிவுறுத்தியது.
இக் கண்காட்சியில் கவனத்தை ஈர்த்த தகவல் ஒன்று:
அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள், வனசீரழிவு என்ற ஆபத்தை நமக்கு அறிவிப்பவை. செந்தலை வாத்தும் (Pink headed Duck) அப்படித்தான். கங்கைச் சமவெளியில் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த பறவை இது"
1935 ல் கடைசியாக இது தென்பட்டிருக்கிறது.
இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மெல்ல மெல்ல இவை அழிந்து வருவதை அறிந்திருந்தார்கள். 1896 ல் கொல்கட்டாவின் பறவைச் சந்தையில் இவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தனவாம். அறுபது ஆண்டுகள் கழித்து இவற்றைப் பிடிகவும் கொல்லவும் தடை விதிப்பதற்கு முன்பாகவே முழுவதுமாக இவை அழிந்து விட்டிருந்தன.
புல்வெளிகள், சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டதால் நீர் வாழ் பறவைகள் இம் மண்ணில் இருந்து மறைந்து விட்டன. (இந்த நிலை வேறெதற்கும் வர விடக்கூடாது...)
*********************************************************************
இயற்கை பாதுகாப்பு குறித்த பொன்மொழிகள் இவை :
இயற்கை முழு விதிகளையும் புரிந்து கொள்ளாமல் நாகரீக மனிதன் தன்னை உலகின் தலைவனாக கருதிக் கொள்கிறான். ஆனால் உண்மையில் அவன் இயற்கையின் குழந்தை - டாம்டேல்
இந்த உலகம் மூதாதையரிடமிருந்து பெறப்பட்டதல்ல, வருங்கால சந்ததியினரிடம் இருந்து கடனாக பெற்றது - ஆடுபன்.
********************************************************************
உலகில் மொத்தம் 54 இருவாச்சி (Hornbills) இனங்கள் உள்ளன. (அழைப்பிதழில் உள்ள பறவை) இந்திய துணைகண்டத்தில் 9 இனங்கள் வாழ்கின்றன. இதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 4 வகையான இருவாச்சிகள் வசிக்கின்றன. மலபார் சாம்பல் இருவாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்பவை.
செம்பகம், பட்சி, சாம்பல் தலை வானம்பாடி(ashy-crowned sparrow -lark), தேன்சிட்டு, தையல்சிட்டு, வெள்ளை கண்ணி,சீல்காரப்பூங்குருவி(Malabar whistling thrush), குடுமிப்பருந்து(Changeable Hawk-eagle), ராசாளிப்பருந்து(Bonelli's eagle),செம்பருந்து, தவளைவாயன்,கரண்டிவாயன், மீன் கொத்தி,வண்ண நாரை, ஆல்காட்டி(Northern Lapwing),கொசு உண்ணான்...
(இன்னும் ஏகப்பட்ட பறவைகள், விலங்குகளின் புகைப்படங்கள், எல்லாம் தமிழ் பெயர்களுடன் இருந்தது சிறப்பு)
சில புகைப்படங்கள் :
புல்வெளிகளின் பயன் என்ன ?
மேற்கு தொடர்ச்சிமலையில் 1200 மீட்டருக்கு மேலுயற்ந்த இன்றும் மனிதர்களால் காயப்படுத்தப்படாத எல்லா சிகரங்களின் உச்சியிலும் வெறும் புல்வெளிதான் இருக்கும் அவை அற்ப புற்களல்ல மழை உச்சியில் பெய்யும் மழையை இந்த புற்கள் பின்னி பிணைந்த வேர்கால்கள் அப்படியே ஒரு ஸ்பாஞ்சு போல தேக்கி வைக்கின்றன. ஒரு மழை பெய்தால் அதை குறைந்தது ஒரு மாதத்திற்கு திவளையாக்கி புல்வெளிகள் வெளியிடுகின்றன. மாதம் மும்மாரி பொழிந்தால் அதை மூன்று நான்கு மாதங்கள் வரை தேக்கி வைத்திடும் ஆற்றல் புல் வெளிக்கு உண்டு.
"குரங்குகளுக்கு பிரட் ,பிஸ்கெட் எல்லாம் அதுங்களோட உணவு இல்லை இவற்றை அவற்றிற்கு கொடுக்ககூடாது என்பதையும் அறிவுறுத்தி இருந்தார்கள்."
ஒரு பறவையின் புகைப்படம் எடுக்க பல மணிநேரம் செலவிட வேண்டியிருக்கும்.
இக் கண்காட்சியில் குழந்தைகளின் குதூகலத்தை பெரியவர்களிடமும் காண முடிந்தது.
இந்த கண்காட்சிக்கு பங்களித்த சுற்றுசூழல் ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள்,பாசமிகு நண்பர்கள்,ஆசிரியர்கள், மாணவ,மாணவியர்கள், இலக்கிய எழுத்தாளர்கள்,வனகாப்பாளர்கள் ...இன்னும் இன்னும் என பட்டியல் நீளுகிறது. ஒருங்கிணைத்த "ஓசை" யின் - இயற்கைக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.
மேலும் பல தகவல்கள் இந்த வலைபூவிலும் இருக்கு படிக்க வேண்டுகிறேன்.