அவர் பதிவுலக பிரபலம் என்பதை விடவும், சிறந்த பேச்சாளர். ரொம்ப தூரமல்ல காரமடையில் இருந்து வட கோவை வரைக்குமான ரயில் பயணத்தில் தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போ அவர பத்தி எனக்கு சுத்தமா தெரியாது.
அதுக்கப்புரம் அவரின் பேச்சு மேடைகளுக்கு அடிக்கடி போனேன். அவரின் பேச்சு மெய் மறந்து கேட்கச் செய்யும். கணீரென்ற குரலில் சரளமான பேச்சு எதுகை மோனையுடன் நாட்டு நடப்புகளுடன் சமூக அக்கரை தொனிக்க பேசுவார்.
முக்கியமா பெண்களின் முன்னேற்றம், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், நவீன நாகரீகத்தில் அவங்களோட சமூக பங்கு. தடையர தாக்கு இப்பிடி. அவருக்குன்னு பேஸ் புக்ல பெண்கள் கூட்டமே இருக்கு. அவருக்கு பத்தாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட பதிவர் வட்டத்திற்கு அவரை பேச அழைக்கலாம் என்று ஒரு தினம் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் சர்பரைசா இருக்கட்டுமேன்னு போன் செய்யவில்லை.
கூச்சத்துடன் நான் அடித்த அழைப்பு மணிக்கு, முதலில் குரைப்பு சத்தத்துடன் வரவேற்றது அவங்க வீட்டு நாய்.
வளையல் கை, ஜன்னல் திறந்து " யாருங்க ?"
நான்..சுருக்கமாக சொன்னேன்.
" உள்ள வாங்க..." கதவு திறக்க தயக்கத்துடன் நுழைந்தேன்.
"அவரு வெளியூர் போயிருக்கார்..ஒரு நிமிசம்.." சோபாவை காட்டிவிட்டு சமையலறையினுள் நுழைந்து விட்டாள்.
ஓழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட வார சஞ்சிகைகள்..முன்பிருந்த டீபாயின் மேல் அன்றைய செய்திதாள்கள் காற்றில் பட படத்தன. .
காபி கோப்பையுடன் வந்தாள். "அவரு இல்லாதப்ப வெளி ஆளுங்கள எப்பவும் உள்ள கூப்பிட மாட்டேன்.. அவருக்கு பிடிக்காது. நீங்க என்னோட பெங்களூர் பிரதர் மாதிரியே இருக்கீங்க..." சிரித்தாள்.
மனதில் பட்ட சந்தேகங்களை உடனே கேட்டு விடுவது எனது வழக்கம்.
கேட்டேன்... " உங்க படம் ஏதும் செல்ப்ல இல்ல.. எல்லாம் அவரோட படங்களும் கோப்பைகளுமா இருக்கு..."
"ஒரு நிமிசம்..."
உள்ளறைக்கு சென்றவள் கைகளில் அவர், அவள், மகள் சிரிக்கும் புகைப்படத்துடன் வந்தாள்... "இது ஏற்காடு போயிருந்தப்ப எடுத்தது..... அவரோட கூட்டங்களுக்கு நாங்க போறதில்ல.அவரும் கூப்பிட மாட்டார்."
அவரு, முன்னாடி வைக்க வேண்டாம் இதெல்லாம் பர்சனலுனு செல்லிட்டார்.
"நீங்க இப்படி.. கேட்டதும் எனக்கு தாங்கல... "
சட்டென அவள் விழிகளின் ஓரத்தில் லேசாக துளிர்த்த கண்ணீரை கவனிக்க தவற வில்லை.
நாக்கில் காஃபி கசந்தது. காலி கோப்பையை வைத்தேன்.
சரி வரேங்க...கேட் வரை வந்தார்.
சூரீரென்ற வெயில் முகத்தில் அடிக்க. சில அடிகள் நடந்திருப்பேன்.
"நீங்க வந்த விசயத்த சொல்லவா ..? "
தலை அசைத்து...புன்னகைத்தேன். "வேண்டாம் போன்ல பேசிக்கரேன் "
கீரீச்சிடும் கேட்டை என் எண்ணங்களோடு சேர்த்து சார்த்தி விட்டு நடந்தேன்.
*******************************************************************************