தலைப்பை படித்ததும் எந்த புத்தகத்தை என கேட்கலாம். புத்தகத்தின் பெயரே அது தான் எழுதியவர் "நீயா நானா -கோபிநாத்" இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2008 ல் வெளியிடப்பட்டது பதினாறு பதிப்புகளைத் தாண்டி 2 லட்சம் பிரதிகளை நோக்கி விற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் 2009 ல் மட்டும் 6 பதிப்புகள், 2011ல் 5 பதிப்புகள்.
[ சமீபத்தில் கோவையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் இந்த புத்தகம் கண்ணில் பட்டது ஆஹா .சைகாலஜிகலா தூண்டில் போடுறாங்களே என யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்காரம்மாவிடமிருந்து "வாங்குங்க" பின்னாலிருந்து ஆர்டர் வர அதுக்கு அப்பீலேது...வாங்கிவிட்டேன். ]
புத்தகம் எதைப் பற்றி சொல்லுகிறது மனித மனங்கள் தினம் மாறிக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கை நம் அணுகு முறை எப்படி இருக்கவேண்டும்.
என்ன வாழ்க்கை என சலித்து போனவர்களும் படிக்கலாம். எப்படி வாழ்க்கையை எதிர் கொள்வது என்பவரும் படிக்கலாம்.
பதினைந்து அத்தியாயங்களில் தலைப்பே கிடையாது தலைப்பிற்கு பதில் மேற்கோள்கள் தான்.
அவரை பிடிப்பவர்களும் ஏன் பிடிக்காதவர்களும் இதை வாசிக்கலாம் என்பதே இதன் சிறப்பு. நம்மோடு ஒரு நண்பர் பேசுவது போன்ற மொழிநடையில் வாழ்க்கையின் எதார்த்தங்களை நம் சிந்தனையில் தூண்டிலிடுகிறது. இப்புத்தகத்திலிருந்து சில மேற்கோள்களை தருகிறேன்.
"சந்தோஷத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்..அப்படி வைத்திருந்தால் யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது"
"சிரிப்பு வந்தால் சிரியுங்கள் நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்"
"தோல்வி உங்களைத் துரத்தட்டும் பரவாயில்லை ஆனால் தோல்வியை துரத்திக் கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்."
"உங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துகளை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை, வம்படியாய் எந்த சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு விட்டு எல்லோரும் போய் விடுவார்கள்"
"யார் யாருக்கோ வெளிப்படுத்துகிற அன்பு உங்களை சந்தோஷப்படுத்தும் என்றால் நீங்கள் அன்பாயிருப்பதும் நம்மிடம் அடுத்தவர் அன்புடன் நடந்து கொள்வதும் எவ்வளவு அலாதியான விஷயம்."
"உங்கள் பிள்ளைக்கு தெரியாமல் வெளிப்படுத்த அன்பு ஒன்றும் மோசமான விஷயமில்லையே"
"எல்லோரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து "
"ஏதாவது பண்ணனும் பாஸ்...ஒரு சினிமா பாட்டுல வர்ற மாதிரி..."
======================================================
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
புத்தகத்தின் பக்கங்கள் : 112 விலை : ரூ. 70-