
நிசப்தமான இரவு டிக்..டிக்..டிக் கடிகாரத்தின் ஒலி;
தென்னைமரங்களின் அசைவுகள் எனக்கு வினோதமாய் தோன்றுகிறது பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தில் ;
திறந்திருக்கும் சன்னலின் வழியே ஸ்...எனும் ஓசையுடன் சில்லெனும் தென்றல்; முகத்தை வருடி செல்கிறது.
எழுதிக் கொண்டிருக்கிறேன்..கணிப்பொறியில்;
ஹெட்போனை காதில் மாட்டிகொண்டு கோமெட் ப்ளேயரில் இசையை ஓட விடுகிறேன்.
உயிரின் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடலற்ற இசைக் கோர்வை.
எவ்வளவு காலங்களானாலும் இசைக்கு வயதில்லை என்றும் அதே இளமை துள்ளலுடன்...
கண்களை மூடி நாற்காலியில் சாய்கிறேன்.....
முகத்தின் முன்விழும் சிறு முடிக் கற்றையை கைகளால் ஒதுக்கிவிட்டபடியே கேட்கிறாள்
மருதமலை கோயிலுக்கு போயிருந்தோம். என் கன்னத்தைப் பிடித்து.....
நெற்றியில் திருநீரு வைக்கிறாள்.
கண்களில் விழும் திருநீற்றுத்துகள்களை உஃப் பென ஊதிவிடுகிறாள்.
ஆ காட்டு மீதமிருந்த பாதி லட்டை வாயில் தினிக்கிறாள். நந்தவனத்தில பூப்பறிக்கனும் என்னோட வரியா...பதிலை எதிர்பாராமல் கைபிடித்து இழுத்து செல்கிறாள்...
மழைத்தூறல் விட்ட சாயங்கால இள மஞ்சள் வெயில் மாலைப்பொழுது மரங்களினுடே புகுந்து வருகிறது..ஏதோ ஒரு உலகத்திலிருப்பது
போன்று உணர்கிறேன்.....
ஸ்..ஹோ..தொடந்து வரும் காற்றின் ஓசை...
தோட்டத்து வயல் வரப்பு வாய்கால்களில் சலசலத்து செல்லும் நீர்,
வளைந்து வளைந்து செல்லும் பாதையின் இருபுறங்களிலும்
விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள்
பறக்கும் பூக்களென படபடத்து செல்லும் வண்ணத்துப்பூச்சிகள்...
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்க மலர்களின் வாசனையோடு மண்வாசனையும் ;
ஆஹா..மனோரஞ்சிதம்..துள்ளிக்குதித்தோடினாள், கொலுசின் சினுங்கல்களுடன்
அந்த பச்சை மஞ்சள் கலந்த மலர் ஏதோ ஒரு பழத்தின் இனம்புரியாத சுவையான... வாசனை. அவளுக்கு மிகப் பிடிக்கும்
பூவை பறிக்க முயற்சித்தாள் விரலில் முள் குத்த ஸ் ஆ...கையை உதறுகிறாள்.முள் குத்திய வலி உணர்கிறேன்.
அம் மலர்களை பறித்து கொடுக்கிறேன். என் விரல்களில் துளிர்க்கும் ரத்தத்துளிகள்... எனக்கு வலி இல்லை.
இதில உட்காரேன்...உட்கார்ந்தேன் வீழ்ந்து கிடக்கும் தென்னை மட்டையில் இரு கால்களையும் சற்று உயரே தூக்கிக் கொள்கிறேன். இழுத்து கொண்டு ஓடுகிறாள்
வேகமாக...வே...க..மா..க..இன்னும் வே..க..மா..க ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வு.
மேகங்கள் என்னை கடந்து செல்கின்றன அதே வேகத்துடன்...
ஹ..ஹா..உம்..ஹி..ஹி..ஹ..ஹா
அவள் சிரிப்பு ஒலி மட்டும் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டே இருக்கிறது...
சட்டென நிசப்தம்...
அடுத்த இசை...
என் சிறு வயது நினைவுகளை சிதறடித்து இது தான் நிசமென்கிறது ;
இசை...நான்..நீ...
=====================================================================
இக்கதை அதீதம் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. [ திரு. வாமணன், திரு.எல்.கே அவர்களுக்கு எனது நன்றி ] இதன் லிங்க்
http://www.atheetham.com/?p=2413