ஆனந்த விகடனில் ஒரு கவிதை வெளியாகி இருந்தது.
சலூன்காரர் கவிதை
அவருக்கு தொழில் சவரம்
எனக்குக் கவிதை.
நான் வார்த்தைகளையும்
அவர் முள் முடிகளையும்
செதுக்கியவாறு உள்ளோம்.
நான்
சுயமாக சவரம் செய்ய முயன்று
காயமான தருணங்கள் அநேகம்
அவர் ஒரு முறைகூட
பேனா எடுத்ததில்லை
கவிதை எழுத
சமயங்களில்
ஒற்றுப் பிழைகள்
தங்கி விடுவதுண்டு எனக்கு
தெரிந்தவரையில் அவர்
சிராய்ப்பு ஏற்படுத்தியதாக
வரலாறு இல்லை
பிள்ளையார் பிடிக்க நினைத்து
குரங்காக ஆன நிகழ்வுகள்
ஏராளம் எனக்கு
ஒவ்வொரு முறையும்
அழகாக வரைந்து விடுகிறார்
முகத்தில் ஒரு கவிதையை அவர்.
இக்கவிதையை எழுதி இருந்தவர் நா. ராஜேந்திர பிரசாத்
மனிதன் முகச் சவரம் செய்ய ஆரம்பித்தது எப்போதிலிருந்து ?
(யோசிச்சு பாருங்க எவ்வளவு முக்கியமானது இந்த நவீன நாகரீகத்தின் அத்தியாவசிய கண்டுபிடிப்பு !!! ப்ளேடு போடாம சுருக்கமா எழுத முயற்சிக்கிறேன் ! )
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த தகவலின் நெருப்புக்கற்களில் (சிக்கிமுக்கிகல்-flint ) செய்யப்பட்ட ஆயுதம் முடி வெட்ட பயன்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது இதன் காலம் கி.மு 30,000 ஆண்டு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. ( கிடைத்த பொருளை வைத்து உறுதிப்படுத்தப்பட்ட கால அளவு இது அதற்கு முன்பும் இருந்திருக்கலாம் ? )
கி.மு 3000 ஆண்டு வாக்கில் உலோகத்தாலான சவரக்கத்திகள் இந்தியா, எகிப்து மற்றும் கிரேக்கத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
கைக்கு அடக்கமான இன்னும் மேம்படுத்தப்பட்ட சவரக்கத்திகள் இங்கிலாந்தில் மறுமலர்ச்சி காலத்தில் (17ம் நூற்றாண்டு) பயன்படுத்தப்பட்டன.
ஆக ஆண்கள் தங்கள் முகத்தினை பொலிவாக்க ?! ஆதி காலத்திலிருந்து முயற்சித்துவருவது கண்கூடு.
நியோலித்திக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நெருப்புக்கல்லால்
ஆன முடி வெட்டும் பொருள்
வெண்கலத்தால் ஆன சவரக்கத்தி (Iron Age)
அடுத்து நவீன பிளேடின் கதையையும் பார்த்துவிடுவோம்.
1903 ல் கில்லெட் ( King C. Gillette ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் ரேசர் உடன் கூடிய பிளேடு டெக்னிக்.
அதற்குமுன்பு வரை சவரக்கடைக்குதான் செல்ல வேண்டி இருந்தது பெரும்பாலானவர்களுக்கு ஷேவ் செய்வது என்பதே பெரிய வேலையாக இருந்தது. ( அந்தகாலத்தில் இங்க கடையேது ஆலமரத்தடிதான் !)
கில்லெட்டிற்கும் கண்டுபிடிப்பின் ஞானோதயம் ஒரு சலூன் கடையிலே தான் ஏற்பட்டது.
வில்லியம் பெயிண்டர் என்பவரிடம் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தவர் கில்லெட். வில்லியம் கண்ணாடி குப்பியின் கார்கிற்கு மேலாக மூடி தயாரித்து வந்தவர் ( கண்டுபிடிப்பாளரும் அவர் தான்).
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் மிக மெல்லிய சிறு கத்தி (அதாங்க பிளேடு) மற்றும் கையடக்க கருவியை (ரேஸர்) செய்ய அவருக்கு ஆறு ஆண்டுகள் ஆனது.
1904 ல் " Gillette safety Razor Company " ஆரம்பித்தார் முதலாம் உலப்போர் சமயத்தில் அமெரிக்க அரசு பெரிய ஆர்டர் கொடுத்தது ( 3.5 மில்லியன் ரேசர்களும், 32 மில்லியன் பிளேடுகளும்) இதன் பின் இவரது கண்டுபிடிப்பும் உலகம் முழுவதும் பரவியது.
எலெக்ரிக் ரேசர் கண்டுபிடித்தவர் செயிக் ( Colonel Jacob schick) 1928 ல் இதன் பேடன்ட் உரிமை பெற்றார். இவர் U. S ஆர்மியில் லெப்டினண்ட் ஆக இருந்தவர்.
கொசுறு தகவல் :
ஜெர்மன் சென்று வந்த போது கோவை ஐன்ஸ்டீனான ஜி.டி நாயுடு அவர்கள் அதி கூர்மையான எலெக்ரிக் ரேசர் கண்டுபிடித்திருந்த தாகவும் இது பாதுகாப்பானதும் அதே சமயத்தில் அதிக ஷேவிங் செய்ய தக்கதுமாக இருந்தது என்ற தகவல் நமக்கு ஆச்சர்யம் அளிக்க கூடியதே.