மொழிக்காகவும், இயற்கைக்காகவும் இப்புத்தகம் ஒரே நேரத்தில் வாதாடுகிறது. இந்த புத்தகத்தில் இருக்கும் புகைப்படங்கள் அத்துணையும் இயற்கை ஆர்வலர்களும், சூழல் அக்கரை மிகுந்த புகைப்படக் கலைஞர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் எடுத்த படங்கள். கூட்டு முயற்சியால் பெறப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
”ஓசை“ கோவை சுற்றுச் சூழல் அமைப்பின் சீரிய முயற்சியில் வெளிவந்த புத்தகம் இது நமக்கு இயற்கைச் சூழலின் அவசியத்தை, காட்டு விலங்குகள், பல்லுயிர்களின் அவசியத்தை கிராமமாகட்டும், நகரமாகட்டும் காடிருந்தால் தான் நாடு என்பதை மனதில் பதிய வைக்கிறது.
”நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தில் (யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது) எடுக்கப்பட்ட புகைப்படங்களே இப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
சுயநல மனிதர்களால் காட்டுயிர்கள் அழிக்கப்படுவது மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கப்பட வேண்டும் என போராடி வரும் போராட்டக்காரர்களுள் ஒருவர் இப்புத்தக கவிஞர் அவைநாயகன்.
இப்புத்தகத்தில் என்ன உள்ளது ? என்ன சொல்கிறது ?
இப்புத்தகம் ஒரு காட்டுயிர்களின் புகைப்பட ஆல்பமாக மட்டுமல்ல பல்வேறு சிந்தனைகளை நம்முள் விதைக்கிறது. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு கவிதை இதை செய்கிறது.
சில கவிதைகள்...
சேற்று உடம்புடன் மரத்தில் உரசி சென்ற யானையின் சுவடு பற்றிய ஒரு படம் அது கவிதை கண்களுக்கு இப்படி தெரிகிறது.
சேறுபடிந்த
வேங்கை மரத்தின்
ஈர முதுகில்
புரண்டெழுந்து நடந்து போன
யானையின்
வருகைப்பதிவு.
காற்றின் குறுக்காக கடந்து செல்லும் சாலையின் காட்சி இதற்கான கவிதை
காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக் கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை...
புள்ளிமானும் குரங்கும் நண்பர்களா?
நிழலில் நிற்கும்
புள்ளிமான் பசியாறத்
தேக்கிலை பறித்துப் போடும்
உச்சிமரச்
சாம்பல் மந்தி...
அத்துமீறி அழிக்கப்படும் மலைவளம் குறித்து இப்படி சாடுகிறது கவிதை
மலை தகர்த்துப்
பெயர்த்த கல்லில்
உருவான
நகரக் கட்டிடங்கள்
வரிசையில் நிற்கின்றன
குடிநீர் இணைப்பு வேண்டி
(இதில் எத்துணை பொருள் பொதிந்துள்ளது ஒருமுறைக்கு இருமுறை படித்தால் புரியும்)
இன்னும்..இன்னும் காட்டின் நுட்பங்களை கற்றுத்தருகிறது இப்புத்தகம்.
நீரில் அமிழ்ந்த புலியின் மீசையைப்
பூச்சியெனக் கருதி
இழுத்துச் சீண்டும்
கெண்டை மீன்கள்..
அழிந்துவிட்டதாய் கருதப்படும் வரகுக் கோழி எப்படி இருக்கும் இது பற்றி ஒரு கவிதை
நின்ற நிலையில்
எம்பிக் குதித்துத்
துணையை ஈர்க்கத்
தேடிக்கொண்டேயிருக்கும்
வரகுக் கோழி...
உடலில் உப்பு ஏறச் சொறிந்தலையும் சுழித்தலைக் குரங்கு...
கூட்டோடு அழிந்து போன தன் முட்டையைத் தேடும் கழுகு,
இறந்த குட்டிக்காக அருகிருந்து கண்ணீர் உகுக்கும் தாய் யானை..
இப்படி மனிதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளையும் படம் பிடித்துக்காட்டுகிறது சாடுகிறது கவிதைகள், கவிதைகள்..
”காடுறை உலகம்” முதல் பதிப்பு மார்ச் 2011
96 பக்கங்கள் விலை ரூ.120/- Download As PDF