தொடர்புடைய பதிவு : திமிங்கிலங்கள் [ whales ]
ஆண்டுதோறும் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்படலாம் என்று இது குறித்த மிகவும் துல்லியமான கணிப்பு என்று கருதப்படும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தமது வாழ்நாளில் சற்றே தாமதமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மைகொண்ட சுறாக்கள் இந்த அளவுக்கு கொல்லப்படுவது அபாயகரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனர்கள் தாம் அருந்தும் ''சூப்''புகளில் சுறா செதில்களை பயன்படுத்துவதே சுறா மீன்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
சரியான புள்ளிவிவரங்கள் இல்லாது இருப்பதால் உலகளாவிய அளவில் சுறாக்கள் பிடிக்கப்படுவது குறித்து துல்லியமாக கூறுவது கடினமாக உள்ளது. ஏராளமான சுறா மீன்கள் பிடிக்கப்பட்டவுடன் அதன் செதில்கள் வெட்டியெடுக்கப்பட்டு பிறகு மீண்டும் கடலில் வீசப்படுகின்றன. இப்படிக் கொல்லப்படும் சுறாக்கள் அதிகார பூர்வ புள்ளி விவரங்களில் இடம்பெறுவதில்லை.
விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சத்தில் இருந்து 27 கோடியே 30 லட்சம் வரையிலான சுறாக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படலாம் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தனர்.
அதாவது இந்த மீன்கள் பிடிக்கப்படும் வேகம் அதன் இனப் பெருக்க வேகத்தை விட அதிகமாக இருக்கிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நீயுயார்க் ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேமியன் சேப்மேன், மிகவும் மோசமான புள்ளி விவரங்கள் காரணமாகவே எவ்வளவு சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பது குறித்த கணிப்பீட்டில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் அதிக பட்ச எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது என்றும் ஆனால் ஆண்டுதோறும் 10 கோடி சுறாக்கள் கொல்லப்படலாம் என்பது ஒரு இடைப்பட்ட சிறப்பான கணிப்பீடு என்றும் கூறினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையே சுறா மீன்கள் பிடிக்கப்படுவதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. தேவையை ஈடுகொடுக்க மீன்பிடிக் கப்பல்கள் சுறாக்களை பிடிக்கும் இடங்களையும் பிடிக்கப்படும் சுறா இனங்களையும் மாற்றியுள்ளன. இதனால் சுறாக்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சி அடையும் என்ற அச்சம் இருக்கிறது. சிலவகைச் சுறா இனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன மேலும் இவற்றின் இனப் பெருக்க வீதம் மிகவும் குறைவானது என்பதால் சுறாக்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகறித்துள்ளன.
வரும் ஞாயிற்றுக் கிழமையன்று பாங்காக்கில் 178 நாடுகளின் பிரதிநிதிகள் அருகிவரும் உயிரினங்களின் வர்த்தகம் குறித்த சர்வதேச மாநாட்டில் சந்திக்க உள்ளனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 சுறா இனங்களின் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு திட்டம் இதில் முன்வைக்கப்பட உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இம் மாநாட்டில் சுறாக்களை பாதுகாக்கும் முடிவை நிறை வேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒரு சில வாக்குகளால் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் இம்முறை இந்தத் தீர்மானத்துக்கு வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் மத்தியில் ஒரு பரந்துபட்ட ஆதரவு இருப்பதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி : பி.பி.சி செய்தி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மார்ச், 2013 - 14:06 ஜிஎம்டி
Download As PDF