**கோடையின் காந்தளில்
வெறுமையாய் வரிசைகட்டி
தவமிருக்கும்
காற்று நிறம்பிய குடங்கள்... “
**உப்புக்காற்று உறத்து
சொல்கிறது...
உனக்கான
வேள்வித்தீயை
நீயே மூட்டிகொண்டாய்.. ! ”
ஏன் இந்த மாதிரி தலைப்பை வைத்து பீதியை கிளப்புறீங்க ? இது தான் பலரின் கேள்வி. நீங்கள் சிறுவயதில் அனுபவித்த பலவித சந்தோசங்களை உங்கள் வாரிசுகளுக்கு கொடுக்கிறீர்களா ? ஏன் இல்லாமல் ? சந்தோசம் என்பது நாம் எப்படி கொடுப்பது அவர்களாகவே உணரவேண்டிய ஒன்று என்றும் சொல்லலாம்.
சிறு வயதில் பளிங்கு போன்ற நொய்யல் நதியில் நான் விளையாடியிருக்கிறேன். நண்பர்களுடன் துண்டு விரித்து மீன் பிடித்திருக்கிறேன். நாவல் பழத்தை நதியில் கழுவி சுவைத்திருக்கிறேன். மணல் வீடு கட்டி விளையாடி இருக்கிறேன். ஏன் ரொட்டி துண்டைக்கூட கோவைகுற்றாலத்து நீரில் நனைத்து சாப்பிட்டு இருக்கிறேன். நம் குழந்தைகளுக்கு இந்த வாய்புகளை சந்தோசங்களை நாம் கொடுத்திருக்கிறோமா என்றால் ? ...மவுனமே இதன் பதில்.
" நீரின்றி அமையாது உலகு " திருவள்ளுவரின் தீர்க்கமான எதிர்காலம் குறித்த வாக்கு இது.
"22 மார்ச் 2013”
தண்ணீரின் அருமை எப்போது தெரிகிறது என்றால் அது இல்லாமல் கஷ்டப்படும் போது தான். குடிப்பதற்கு உபயோகப்படும் தண்ணீர் என்பது 3 சதவிகிதம் மட்டுமே மீதியெல்லாம் உவர்ப்பு நிலையில் உள்ள கடலாக இருக்கிறது.
இங்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.
தண்ணீர் இல்லாமல் வாழ்வு சுவைக்குமா ? [ குளிர் பானம்,வேறு பழச்சாறு எதை குடித்தாலும் அது ஒரு கோப்பை தண்ணீர் குடிப்பதற்கு ஈடு என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?
இயற்கை நமக்களித்த அற்புத பரிசு இது இல்லை ?
தண்ணீர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் இதை மறுக்க முடியுமா ?
இந்த தண்ணீருக்கு இணையான ஒன்றை உங்களால் காட்ட முடியுமா ? [மழைன்னு சொல்லாதீங்க..]
எவ்வளவு பெரிய கோடீஸ்வரருக்கும் ஏதுமற்ற ஏழைக்கும் இது ஒரு பெரிய சொத்து இது பொய்யா ?
உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.
ஒவ்வொரு பதினைந்து செகண்டுக்கு ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்த மான நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறது இது ஐநாவின் கணக்கீடு.
ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் இது சென்ற ஆண்டு கணக்கு.
அதிகமான நிலத்தடி நீரை உருஞ்சுவதால் பல தேசங்களில் நிலத்தடி நீர் வரண்டு விட்டது.
எண்ணை வளம் தீர்ந்து போவதற்கு முன் தண்ணீர் வளம் காணாமல் போகும் என்று ஒரு கணிப்பு உண்டு.
தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலையும் ஒரு புறம் உயர்கிறது. தண்ணீர் கிடைக்காமல் போவது பசிக்கொடுமையை ஏற்படுத்துகிறது.
உலகத்தோடு சில ஒப்பீடுகள் : மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது.
தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.
பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது.
[தலைப்பிற்கு வருகிறேன்..]
தமிழ் நாட்டை பொருத்தவரை 72 மில்லியன் மக்கள் தொகையில் தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக இருக்கிறது. அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது. நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.
நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது.தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, வீணான விரயம், உலக வெப்பமயமாதல்.
இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலையாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் கேள்வி : இதற்காக நான் என்ன செய்யமுடியும் ?
தண்ணீருக்கான சேமிப்பை உத்திரவாதத்தை நீங்கள் தரவேண்டும். நிலமையை ஓரளவு சமாளிக்க முடியும்.
உங்கள் பிள்ளைகளுக்கு தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை கற்றுக் கொடுங்கள். குளிப்பதற்கு 2- 3 பக்கெட்டுகள் தண்ணீர் செலவழிப்பதை ஒன்றாக குறையுங்கள். பெரிய ப்ளஸவுட் தொட்டிகளில் சிறியதை பயன்படுத்தலாம். நம் வீட்டு குழாய்களில் லீக்கேஜ் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
தினமும் துவைப்பதை வாரம் இரண்டு முறையாக்கலாம். சாப்பிடும் தட்டுகளுக்கு பதில் இலைகளை உபயோகிக்கலாம். தண்ணீர் விளையாட்டுகளை குறைத்துக் கொள்ளலாம். வீடுகளில் மழைநீர் சேமிப்பு நடைமுறைபடுத்துவது. மழை வரும் போது கார்களை திறந்த வெளியில் நிறுத்தலாம். வீட்டை சுற்றி சிமிண்ட் தரைகளை அமைப்பதற்கு பதில் ப்ளாக்குகளை உபயோகிக்கலாம். ஹோட்டல்களில் போதுமான தண்ணீரை கேட்டு வாங்கி குடியுங்கள். உணவை வீணாக்காமல் இருப்பது.
தண்ணீரை வீணாக்க மாட்டேன் என ஒவ்வொருவரும் சபதமெடுப்போம் கடைபிடிப்போம்.
[ இந்த கட்டுரைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர் Er.S. சிவலிங்கம், நீர் மேலாண்மை இயக்ககம் (water resources Organisation) அவருக்கு எனது இதயப்பூர்வமான நன்றி ]
Download As PDF