அழுத்தமான கதை அல்லது திரைக்கதையின் சோக கட்டம் நம் மனதில் ” பசுமரத்து ஆணி” போல பதிந்துவிடும். அது எளிதில் நம் மனதை விட்டு அகழ்வது இல்லை.
இதற்கு ஒரு உதாரணம், ”கும்கி” திரைப்படம், உற்ற நண்பனாக கருதும் யானை அவனுக்காக செய்யும் உயிர் தியாகம், தீயிர் கருகிய சித்தப்பா மற்றும் நண்பனை கதாநாயகன் இழந்து தவிக்கும் இறுதிக்காட்சியை சொல்லலாம்.
"எனக்கு வாழ்க்கையின் எதார்த்தங்களை கற்றுக்கொடுத்த தந்தையை ஒரு சாம்பல் கூடாக பார்க்கும் சந்தர்பமும் ஏற்பட்டது. அப்போதும் அவர் உறங்கிக் கொண்டு இருப்பதை போல் தான் தோன்றியது, வெட்டியான் ஒரு மண் சட்டியில், மூன்று முக்கிய எலும்புதுண்டுகளையும் சாம்பலையும் ஒரு குச்சியில் தட்டி, தட்டி எடுத்து போடும் வரை.”
நாம் தினமுமோ அல்லது சில சந்தர்பங்களிலோ சுடுகாட்டை கடந்து செல்கிறோம். நம் உறவுகள் பிரிந்து செல்லும் இறுதி இடமும் அது தான்.
தொழில்கள் பல விதம் அதில் வெட்டியான் தொழில் சந்தர்ப்ப வசத்தால் பெரும்பாலும் திணிக்கப்படுகிறது.
இந்த வகையில் பெண்கள் வெட்டியாளாக இருப்பது மிக மிக அரிதான ஒன்று. சமீபத்தில் ஒருவரை ஈர நெஞ்சம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் சந்திக்க நேர்ந்தது. அவரது பெயர் வைரமணி. தன் குடும்பச் சூழல் காரணமாகவும் தன் தந்தைக்குப் பின் இந்த பணியை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். அவரை பாராட்டி என் கையால் நினைவு பரிசு அளிக்கப்பட்ட போது உணர்ச்சிப் பெருக்கால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.
இங்கு நண்பர் ஈர நெஞ்சம் மகி என்ற மகேந்திரனை பற்றி குறிப்பிட வேண்டும். இலட்சோப இலட்சத்தில் அவர் ஒருவர். இவரின் சமூக சேவை எளிதானது அல்ல. குறிப்பிட்டு சொல்வது என்றால் அவரின் சமூக பணியில், தொலைந்து போன மனநிலை சரியில்லாதவர்களை அவர்களின் உறவுகளை கண்டு பிடித்து சேர்ப்பது, உறவுகளற்ற வயதானவர்களை காப்பகங்கள் மூலமாக பாதுகாப்பது, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்வது...இன்னும் பல. கோவைக்கு கிடைத்த நல்முத்து அவர்.
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு (குறள் : 211)
Duty demands nothing in turn; how can the world recompense rain ?
[ கைமாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைமாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் ]
பி.கு : மேலதிக தகவல்களுக்கு ”கலரா” தெரியும் வார்த்தைகளை சொடுக்கவும்.
Download As PDF