பிறக்கும் போதே யாரும் முதலாளியாகவோ, பேரறிஞனராகவோ பிறப்பதில்லை. தங்களுடைய சுய முயற்சி, சிந்திக்கும் ஆற்றல், அயராத உழைப்பு, காலத்தின் ஒத்துழைப்பு இவைகளினால் தங்களுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதற்கு இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு சரியான உதாரணம். கோவையின் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் உருவாக ஒரு முக்கிய ஆளுமை ஜி.டி நாயுடு அவர்கள். உலக அளவில் கோவையின் பெருமையை முன் நிறுத்தியவர். அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு அனுபவப் பாடங்கள்.
விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் மனம் திறந்த வார்த்தைகள் “கோவை வாசிகள், தங்களிடையே கல்வியிலும் இளைஞரிடமும் மிகுந்த அக்கறை கொண்டுடிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப் பட்ட மனிதருடன் வசிக்க எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்”
புரோகிதர் இல்லாமல் கலியாணமா ?
கல்யாணத்திற்கு எல்லோரும் வந்தாச்சு, எல்லாமும் தயார். புதுப் பொண்ணும்(செல்லம்மாள்) காத்திருக்கிறார் மாப்பிள்ளையான ஜி.டி நாயுடுவை காண வில்லை. நாலப்புறமும் தேடுறாங்க, கடைசில தோட்டத்தில இருக்காரு. மாப்பிள்ளைக்கு என்ன குறை?என்ன பிரச்சினை?
“புரோகிதர் தேவை இல்லை, சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தேவை இல்ல, அம்மி மிதிச்சு, அருந்ததி பார்பதெல்லாம் முடியாது, சரின்னா சொல்லுங்க கல்யாணம் செஞ்சுக்கறேன்” என்றார்.
அவரின் விருப்படியே அந்த சீர்திருத்தக் கல்யாணம் நடந்தது.
பின்னாளில் அவரின் இரண்டு பெண்களுக்கும் இது போன்றே சீர்திருத்த கல்யாணம் நடந்தது.
பட்டணத்திற்கு சென்ற கிராமத்தான்.
கலங்கல் தோட்டத்தின் வழியாக ஒருநாள், பட்..பட், பட பட வென இரைச்சலுடன் மோட்டார் சைகிளில் வெள்ளைக்கார துரை (லங்காஷியர்) அந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு இரண்டு அதிசயங்கள் ஒன்று வெள்ளை துரை இன்னொன்று அந்த மோட்டார் சைக்கிள். திரும்ப செல்லும் போது மோட்டார் சைக்கிள் தகராறு ஏற்பட சரி செய்ய சிறுவன் ஜீ.டி.நாயுடுவிடம் மண்ணெண்னையும் துணியும் கேட்டார், துரை.
கொடுத்துவிட்டு உன்னிப்பாக துரை சரி செய்வதை கவனித்தார். அவரின் மோட்டார் சைக்கிள் ஆசை தான் ,பின்னாளில் அவரை மோட்டார் கம்பெனியின் முதலாளி ஆக்கியது.
அவருக்கு 20 வயதிருக்கும் போது கோவை பட்டணத்திற்கு வருகிறார். ரயில் செல்வதை நடுக்கத்தோடு.. கண் இமைக்காமல் கவனித்தார். கையில் காசில்லாத நிலையில் நடந்து வந்த அலுப்பினால் பிளாட்பாரத்திலேயே தூங்கி எழுந்தார். ஒரு ஓட்டலில் 12 ரூபாய் மாத சம்பளத்தில் சர்வர் வேலை கிடைத்தது.
அவர் தேடி வந்த அதே வெள்ளை துரை செட்டில்மெண்ட் ஆபீசராக இருந்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை அவினாசி சாலையில் ஓட்ட கற்றுக்கொண்டார். பல மாதங்கள் அல்லும் பகலும் வேலை செய்து அவரிடம் 200 ரூபாய் கொடுத்து அந்த மோட்டார் சைகிளை சொந்தமாக்கிக் கொண்டார். அந்த மோட்டார் சைக்கிளை பிரித்து பொருத்தும் திறமை அவருக்கு இருந்தது.
தொழிலாளி முதலாளியானார்
G. D. Naidu (Gopalaswamy Doraiswamy Naidu) (Birth: 1893 - died: 1974)
உருவ ஓவியம்: மாருதி
கோவை மற்றும் திருப்பூரில் பஞ்சு வியாபாரம் செய்த காசெல்லாம் பம்பாய் வியாபாரத்தில் இழந்தார். செய்வதறியாது கோவை வந்த அவர் ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனியில் மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பித்தார். ஸ்டேன்ஸ் துரை ரப்பர், தேயிலை, காஃபி எஸ்டேட்டுகளுக்கு சொந்தக்காரர். இவரை மெக்கானிக்காக சேர்த்துக்கொள்ள விருப்பப் படாத துரை அவரிடம் ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டார்.
தம்மிடம் இருக்கும் ஒரு பஸ்ஸை அவருக்கு கடனாக அளிப்பதாகவும் தினமும் வசூல் ஆகும் தொகையை கொண்டு வந்து தந்துவிட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம். அந்த பஸ் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் ஓடியது அவரே முதலாளி அவரே தொழிலாளி. அவரது தேவைகளை சுருக்கிக்கொண்டார். ஒருநாளைய உணவு இரண்டு வாழைப்பழமும் அரைக்கால் படி பாலுமே.
பின்னாளில் இந்த பஸ் சர்வீஸ் 2500 தொழிலாளர்களுடன் “ யுனைடெட் மோட்டார் சர்வீஸ்(UMS)” என்ற பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. டிக்கெட்டுக்களை கொடுக்க ஒரு இயந்திரம் இவரே கண்டறிந்து பயன்படுத்தினார்.
பணியாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க மாறுவேடத்திலும் செல்வார். பணியாளர்களின் மேல் அக்கரை கொண்டவர். அவர்களுக்கு நல்ல பல நலத்திட்டங்களை செயல் படுத்தினார். போனஸ் என்ற ஒரு சலுகையை இவர் தான் ஆரம்பித்து வைத்தார் எனவும் சொல்கிறார்கள். அவரிடம் 640 பூட்டுக்களை திறக்கக்கூடிய மாஸ்டர் கீ இருந்தது அதை பயன் படுத்தி அவரின் பல நிறுவனங்களின் கதவுகளை எளிதாக எப்போது வேண்டுமானாலும் திறந்து பயன் படுத்துவார்.
தன் அறையில் இருந்த படியே தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் இரகசிய சாதனம் அவரிடம் இருந்தது. கண்டிப்பு மிகுந்தவர் குற்றம் செய்த தொழிலாளிக்கு ஒரு சிறிய சீட்டில் “வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள்” என எழுதி கொடுத்துவிடுவார்.
அலுவலகத்தில்,அலங்கோலமாக கிடந்த டேபிலில் காகிதங்கள் மற்றும் பைல்களை அடுக்கி வைத்து ஒரு துண்டு காகிதத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார். “நீங்கள் உங்களுடைய மேசையை சுத்தமாக வைத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது உங்கள் எஜமானரை தினமும் இரவில் இது மாதிரி வந்து சுத்தம் செய்யச் சொல்லுகிறீர்களா ?”
தான் செய்யும் தவறுகளை “my own blunders" என்று தலைப்பிட்டு ஒரு பைலில் எழுதி வைத்திருப்பது இவருடைய வழக்கம்.
ஜெர்மன் அழைப்பு
ஜெர்மன் ரப்பர் வர்த்தகம் செய்துவந்த குன்ஸ்ஸீம் என்பவர் கோயம்புத்தூருக்கு வந்திருந்த போது காய்சலால் அவதிப்பட்ட அவரை நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். ஜெர்மன் திரும்பி சென்ற அவரின் அன்புத் தொல்லையால் ஜி.டி.நாயுடு ஜெர்மன் சென்றார். கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல் ஒன்றின் மூலம் ஐரோப்பாவிற்கு அவர் பயணம் தொடங்கியது.
எதிர்பாராத விதமாக அந்த கப்பல் தீ விபத்திற்கு உள்ளானது. தப்பிக்கும் எண்ணத்தை மறந்து தன் நண்பர்களை தேடினார். தப்பிப்பதற்காக சிலர் கடலில் குதித்தார்கள் அவர்களை சுறாமீன்களுக்கு இரையானார்கள். அவரின் அருகே இருந்த இரண்டு பெண்களும் கடலில் குதித்தார்கள். இவரும் துணிவுடன் தண்ணீரில் குதித்தார். பெண்கள் மூச்சு திணறி மூழ்கினர் அவர்கள் இருவரின் கூந்தலை தமது கைகளால் இறுகப் பற்றி இழுத்து சென்றார். நல்ல வேலையாக அவர்கள் அருகில் உயிர் காக்கும் படகு வந்தது. அப்பெண்களையும் காப்பாற்றினார். அந்த வழியாக வந்த ரஷ்ய எண்ணெய் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார். நண்பர்களும் உயிர் பிழைத்தனர். அந்த ரஷ்ய கப்பலில் உணவு தட்டுப்பாடு அவருக்கு நாய் பிஸ்கட்கள் தான் கிடைத்தன. இதுவே கிடைத்ததே என சந்தோசப்பட்டார் தீக் காயங்களுடன் இருந்த ஜி.டி.நாயுடு.
ஹிட்லருடன் சந்திப்பு
லண்டனில் இருந்து ஜெர்மன் சென்ற ஜி.டி.நாயுடுவிற்கு ஹிட்லரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில நாட்களுக்கு பின் ஹிட்லர் கோலோன் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவருடன் கோயரிங், ஹெஸ், கோயப்பெல்ஸ் நாஜித் தலைவர்களும் இருந்தனர். அந்த ஹோட்டல் நிர்வாகியின் பெரும் முயற்சியால் ஹிட்லரை சந்திக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சந்திப்பில் டாக்டர் லே என்பவர் மொழி பெயர்ப்பாளர். ஹிட்லருடன் அரசியல் பேசவில்லை. பண்பாடு கலாச்சாரம் பற்றி பேசினார். இறுதியில் ஹிட்லருடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டார். நாயுடு எடுத்த போட்டோவில் அவரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டார்.
நாஜி ராணுவ அணிவகுப்பை புகைப்படம் எடுக்க ரகசிய போலீஸ் அதிகாரியினால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சொன்ன உண்மைகளை புரிந்து கொண்ட அதிகாரி ஹிட்லர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்தார். கோயப்பெல்ஸ் இவரை விடுதலை செய்யச்சொன்னார்.
ஹிட்லரை புகைப்படம் எடுத்த ஜி.டி நாயுடு தெரிவித்த கருத்து “ஹிட்லரின் முகத்தில் காணப்படும் உணர்ச்சித் தோற்றங்கள் மிக விசித்திரமானவை. ஒரு புகைப்படத்தில் இருப்பது போல் மற்றொன்றில் அவரது தோற்றம் இருப்பதில்லை. சில புகைப்படங்களை பார்க்கும் போது அவர் தான என்று சந்தேகம் ஏற்படும்”
இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஒரு லாரி நிறைய பொருட்களுடன் வந்தார். அவர் நாஜி உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ரகசிய போலீசாரால் கொச்சி துறைமுகத்தில் சோதனை செய்யப்பட்டது தனி கதை.
ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவரின் அரிய தயாரிப்புகளான ரேஸாண்ட் சவரக் கத்திக்கு முதல் பரிசும், பிளேடிற்கு மூன்றாம் பரிசும் கிடைத்தன.
ஜெர்மனியில் பெற்ற பரிசு (ஹிட்லர் உருவம் பொறித்த ஷீல்டு)
இதேபோல முசோலினியையும் பல புகைப்படம் எடுத்திருக்கிறார். “இவைகளினால் உங்களுக்கு என்ன உபயோகம். என் படங்களை கெடுத்துவிட மாட்டீர்களே என சிரித்து கொண்டே கேட்டார்.” முசோலினி அதற்கு ஜி.டி நாயுடு ”அதுபற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நிச்சமாக கெடுக்க மாட்டேன்” என்று பதில் அளித்தார்.
இன்னும் பல தகவல்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...
தொடர்புடைய பதிவு :விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா