ஒரு ஓவியன் ஓவியம் வரைய கற்று கொடுக்கலாம் ஆனால் ஒரு கவிஞனாயிருந்தால் ஓவியம் வரைவது எப்படி என்று கவியாலே காவியம் வரைவான். ப்ரெவர்ட்டின் கவிதைகளில் புகழ் பெற்ற ஒன்று " ஒரு பறவையின் சித்திரத்தை வரைவதற்கு' என்ற கவிதை.
இதோ அந்த கவிதை
முதலில் ஒரு கூண்டை வரை
திறந்த கதவோடு
பிறகு இந்தப் பறவைக்கு
ஏதாவது இனிமையாக
ஏதாவது எளிமையாக
ஏதாவது உபயோகமாக
வரை...
பிறகு திரைச் சீலையை
ஒரு தோட்டத்தில்
அல்லது ஒரு காட்டில்
ஒரு மரத்திற்கு எதிரில் வை
மரத்திற்கு பின்னால்
ஒளிந்து கொள்
பேசாமல்
அசையாமல்...
சில சமையங்களில் பறவை
சீக்கிரமே வந்து விடும்
சில சமயங்களில் அது முடிவெடுக்கப்
பல ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம்
சோர்வடைந்து விடாதே
காத்திரு
தேவையானால்
நெடுங்காலம் காத்திரு
பறவை விரைந்து வருவதோ
மெல்ல வருவதோ
படத்தின் வெற்றியைப்
பொறுத்ததல்ல
பறவை வரும் போது
அப்படி வந்தால்
ஆழ்ந்த மெளனத்தோடு இரு
அது உள்ளே நுழைந்ததும்
தூரிகையால்
கதவை மெல்ல மூடு
பிறகு ஒவ்வொன்றாக
எல்லா கம்பிகளையும்
வர்ணத்தால் அழி
பறவையின் எந்த இறகிலும்
பட்டுவிடாத படி ... ஜாக்கிரதையாக
பிறகு மரத்தின் சித்திரத்தை வரை
பறவைக்காக
மிக அழகான கிளைகளாகத்
தேர்ந்தெடுத்து...
பச்சை இலைகள்
காற்றின் புதுமை
சூரியப் புழுதி
கோடை வெப்பத்தில்
பூச்சிகளின் ஒலி
இவைகளையும் வரை
பிறகு பறவை பாடுவதற்குத்
தீர்மானிக்கும் வரை காத்திரு
பறவை பாடவில்லை என்றால்
கெட்ட குறிதான்
சித்திரம் மோசமானது
என்பதற்கான குறி
அது பாடினால்
நல்ல குறி
நீ கையெழுத்து இடலாம்
என்பதற்கான குறி
எனவே
பறவையின் இறகுகளில் ஒன்றை
மிக மெதுவாகப் பிடுங்கு
சித்திரத்தின் ஒரு இலையில்
உன் பெயரை எழுது.
சுதந்திரமான ஆன்மப் பறவையை அடைத்து வைப்பதற்குத்தான் இந்த உலகில் எத்தனை வகைக் கூண்டுகள்! அதைப் பிடிப்பதும் அவ்வளவு சுலபமா? அதை ஏமாற்ற அழகான கிளைகளைக் காட்டலாம் ஓவியத்தில்தான். ஆனால் புத்தம் புதிய காற்றை, ஒளியை பூச்சிகளின் ஒலியை எப்படி வரைய முடியும்?
எல்லையற்ற வானத்தில் இச்சைப்படி பறந்து திரியும் சுதந்திரம், காற்றுக் கடலில் கவலையற்று நீந்தும் பரவசம், உயரத்தின் உல்லசமான கர்வம் இவைகளை அல்லவா? பறவையிடம் பாட்டாகப் பொங்கி வழிகின்றன! இவைகளை இழந்து விட்டால் பாட்டு ஏது? அப்படியே பாடினாலும் அந்தப்
பாட்டுக்குச் சிறகு இருக்குமா?
பாடும் 'பறவைகளை ஏமாற்றிப் பிடித்து வைக்க முயலும் புத்திசாலிகளையும், அவர்கள் சூழ்ச்சியில் சில நேரங்களில் ஏமாறிச் சிக்கிக் கொள்ளும் அசட்டுப் பறவைகளையும் ப்ரெவர்ட் எவ்வளவு அழகாகக் கேலி செய்கிறார்.
<<குறிப்பு : உண்மையான உலகத்தின் பிரதிநிதியாக 1930 களில் பிரான்ஸில் உரத்த குரல் எழுப்பியவர் ப்ரெவர்ட் (Prevert) >>
நன்றி : கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் "இன்றிரவு பகலில்" எனும் விமர்சன கவிதை புத்தகம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !