எறும்புதின்னி எனும் இந்த விலங்கு பீடபூமி,மழைக்காடுகள் மற்றும் மலைக் குன்று பிரதேசத்தில் வசிக்கக் கூடியது. வெப்பமண்டல பிராணி. இந்தியாவில் மட்டும் இன்றி ஆப்பிரிக்கா, இலங்கை, நேபாள், பாகிஸ்தானில் சில பகுதிகளில் இருக்கிறது. மேற்சொன்ன பகுதிகளிலும் பரவலாக காண முடியாது.
இதனுடைய உடலின் மேல் பகுதி மற்றும் வால் பகுதிகள் முழுமையும் கெட்டியான கடினமான செதில்களை (Perils) கொண்டிருக்கும். ஆமை ஓடு போல இதன் மேல் கூடுதான் இதற்கு பாதுகாப்பளிக்கும் கேடயம். புலி போன்ற விலங்கு இதை தாக்க வரும் போது பந்து போல சுருண்டு கொள்ளும்.
இதற்கு பிடித்த மற்றும் முக்கிய உணவு கரையான்கள், எறும்புகள். புற்றுக்களில் உள்ள இவற்றை இதன் நீண்ட நாக்கால் பசைபோல ஒட்டி இழுத்து உண்கிறது. 80 சென்டிமீட்டர் நீளம் உள்ள இதற்கு நாக்கு 40 சென்டிமீட்டர்கள். சாதுவான இப்பிராணி குழிகளிலும், பொந்துகளிலும் வசிக்கிறது. இதன் சுவையான இறைச்சிக்காகவும், மருத்துவ எண்ணெய்க்காகவும் இது வேட்டையாடப் படுகிறது.
ஆண் பெண் அலுங்குகள் வெளியிடங்களில் இல்லாமல் பொந்துகளுக்குள்ளேயே இணைகின்றன. பிறந்த குட்டி இரண்டு நாட்களிலேயே அதன் செதில்கள் கெட்டித்தன்மை அடைகிறது, அதோடு அப்போதே பந்தாக தன்னை சுருட்டிக்கொள்ளவும் செய்யும். சமயங்களில் தாய் அலுங்கு தன்னோடு சேர்த்து பந்தாகவும் சுருட்டிக்கொள்ளும். மெதுவாக மேப்பம் பிடித்து செல்லும் அலுங்கு இரைதேட பயணிக்கும் பொழுது குட்டிகள் இவற்றின் மேல் அமர்ந்து கொண்டு சவாரி செய்யும்.
கேரளாவில் இதனை ஈனம்பேச்சி என்றும்
சிங்களத்தில் இதனை காபாலீவா என்றும்
செந்தமிழில் அலங்கு (அ) அலுங்கு என்றும்
ஒரியாவில் பஜ்ராகப்டா என்றும்
ஆங்கிலத்தில் பங்கவ்லின் pangolin என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கில வார்த்தை மலேய வார்த்தையின் திரிபு (அந்த பாஷையில் இதன் அர்த்தம் சுருட்டி)
அலுங்கு தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இவை ஆயிரக்கணக்காக 2000 ஆம் வருடம் வரையிலும் திருட்டு தனமாக கடத்தப் பட்டு விற்கப் பட்டன (சரியான புள்ளிவிவரம் இல்லை) இதன் பாதுகாப்பிற்காக இயற்கை அளித்த செதில்களே இவற்றிற்கு எமனாகவும் மாறியது மனிதனின் பேராசையால். ஆம் இதன் செதில் களில் இருந்து பெறப்படும் எண்ணெய் புற்றுநோயை குணப்படுத்துவதாக சொல்லி இவை அழிக்கப்பட்டு வருகின்றன. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க அலுங்குகள் கடத்தல் கண்காணிக்கப் படுகின்றன.
இருப்பினும் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த இனம் இருக்குமோ என்பது ( ? )
Labels: Scaly Anteater, pangolin,