கிழக்கு இன்னம் வெளுக்கல. காதோரம் 'ஙொய்' ன்னு கொசுக்களோட ரீங்காரம் கேட்டுக்கிட்டிருந்திச்சு.
ஏனோ இன்னைக்கு விடியறதுக்குள்ள விழிப்பு வந்திடிச்சி.
தாடிச்சாமியின் பொருமளுடன் இருமல் சத்தம் கேட்டது. நாய்களின் குறைப்புகளும் நின்று போயிருந்தது. அழுக்குப் பிடித்த டவுசரினுள் பீடி ஏதேனும் தட்டுபடுகிறாத வென தேடினான். சிக்கிடுச்சி.
நெருப்புப் பெட்டி அந்த மண்டபத்தின் வெளி மூலையின் இடவாரத்திட்டின் மேல் கைவிட்டு துழாவினான் கிடைத்தது. பெட்டியின் ஓரத்தை உள்ளங்கையால் தேய்த்து கைகளை குவித்து சரக்கென குச்சியை இழுக்கப் பற்றிக்கொண்டது உதடுகளில் பீடியை வைத்து நெருப்பு காட்டி உறிஞ்சினான். உப்பென வானத்தை நோக்கி ஊதினான்.
முப்பது வருடத்திற்கு முன் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இந்த கலியாண மண்டபத்தின் பின்புரம் தான் மழைக்கு ஒண்டிக்கொள்ள இடமிருந்த இந்த திட்டுதான் வீடு.
அப்ப இளமை முறுகென்ன.. அவளுக்கு அப்போது எட்டுமாத குழந்தை இருந்தது. அந்த குழந்தையை தூக்கிகொண்டு ஒருநாள் ராத்திரி எங்கோ ஓடிப்போய்விட்டாள். அப்போது அவளை எவ்வளவு அடித்து உதைத்திருப்பேன்.
இபோது வயதான அனாதையாய்...சீப்பாத்திகிட்டிருக்கோம். ஆனாலும் மிச்சமீதி தெம்பு இருக்குகிற வரை குப்பைய அள்ளி கொட்டுறதால ஏதாச்சு கிடச்சிட்டிருக்கு.
சைக்கிளின் கரக் முரக் சப்தத்துடன் பால்காரனின் சைக்கிள் கடந்து போனது.
கிழக்கு வெளுத்திடுச்சி, நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டீ தண்ணி குடிச்சா தேவலயாயிருக்கும் ஆனா போன உடனே அவன நமக்கொன்னும் வெரசா டீ போட்டு தரமாட்டான். காத்திருந்து தான் வாங்கிக்கோனும்.
மட்ட சாலை டீ கடையின் எதிர் புறத்தில் பார்வைக்கெட்டும் வகையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டான். இங்கிருந்து நாயர் கடை தெளிவாக தெரிந்தது.
மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் பட்டை போடப்பட்ட பாய்லர் தெரிந்தது. கிழவி வாசல் தெளித்துக்கொண்டிருந்தாள். ஜனங்கள் இரண்டு மூன்று பேராய் வந்து கொண்டிருந்தார்கள்.
புகைந்தது..பாய்லருக்கு நெருப்பு பத்த வைச்சாச்சி.
இவங்க பேசுறது ஒன்னும் அவனுக்கு வெளங்குவதில்லை.
எத்தனையோ வாழ்க்கை சம்பவங்கள் அவனுள்ளே அமிழ்ந்து மங்கிப் போயிருந்தது.
இந்த ஊரில் ஏதேனும் சுத்தப்படுத்தும் வேலை கொடுக்கிறார்கள். உணவு கொஞ்சம் கொடுக்கிறார்கள். அப்பப்ப காசு பணம் கொடுப்பாங்க. இவ்வளவு வேணும்னு கேக்கறதில்லை.
வரக்.. வரக்.. என புழுதி படிந்த தலையை சொறிந்து கொண்டான். கடை முன்னுக்கு போய் நின்றான்.
வந்துட்டியா...சங்கரா..அப்படி ஓரமா உட்காரு கூப்பிடுரேன் போ...கடுப்படித்தான்.
இந்த கடைய விட்டு இந்த ஊரை விட்டு வேறு ஊரு போக ஏனோ பிடிக்கவில்லை.
அவனுக்கு கொஞ்சம் தள்ளி.. ஆவென வாயை பிளந்து நாக்கை சுழற்றி இவனையே பார்த்துக்கொண்டிருந்தது நாய் ஒன்று.
வால் மேலும் கீழும் ஆடிகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தது. நம்ம கவனிக்கரத்துக்கு ஒரு சீவன்.
ஏய் ந்தா..
இரண்டு கைகளாலும் டீ தம்ளரை வாங்கிக்கொண்டான்.
வேரென்ன..?
ரெண்டு பன்னு..கசங்கிய பத்துரூபாதாளை நீட்டினான்.
பாதி பன்னை அந்த சீவனுக்கு போட்டான்.
அஹா...இந்த டீ இன்னிக்கு ஏனோ இம்புட்டு ருசியாருக்கு..சுவைத்து குடித்தான்.
******************************************************************************
அதீதம் மின் இதழில் இக்கதை வெளியாகியுள்ளது அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், லிங்க்;
http://www.atheetham.com/?p=2695
// இந்த டீ இன்னிக்கு ஏனோ இம்புட்டு ருசியாருக்கு..சுவைத்து குடித்தான்.// அருமை சார்
ReplyDeleteநன்றி சீனு..:)
Deleteஎப்படிச் சொல்வது நிஜமாகவே தேநீர் ருசியாகத்தான் இருந்தது. வட்டார மொழியும் , உணர்வும் அருமை கலாகுமரன்.
ReplyDeleteநன்றி எழில் :)
Deleteமறக்காமல் வாசியுங்கள்: கடவுளை சந்தித்தேன் ...ஒருபக்க கதை...
ReplyDeleteவாழ்க்கையை வெறுக்கும் நபர்களுக்கான சிறப்பு கதை...
http://tk.makkalsanthai.com/2012/09/godshortstory.html
இந்த நூற்றாண்டிலும் செய்யும் தொழிலை வைத்து மனிதர்களை தரம் பிரித்தல் தொடர்வது சோகமான நிகழ்வே! எல்லோரும் மனிதன்தான் என்ற எண்ணம் எப்போது மனிதர்களிடத்தில் பிறக்குமோ?
ReplyDeleteஇதுபோன்ற நிகழ்வை எப்போதாவது பார்க்க நேர்ந்தால் நான் மிகவும் வருந்துவதுண்டு.. குறிப்பாக என்னால் வருந்த மட்டும்தான் செய்ய முடிகிறது! :( :(
நெம்ப நாளைக்கப்புறம் Nativity யோட ஒரு கதை படிச்ச சந்தோசம்!!
ReplyDelete