மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயர் நூலின் இரண்டாவது
அத்தியாயம் இப்படித் தொடங்கும்:
“சனிக்கிழமை காலைப் பொழுது தொடங்கியிருந்தது. கோடை உலகம் புதுப்பொலிவோடு ஒளிர்ந்தது; ஜீவன் பொங்கி வழிந்தது; ஒவ்வொரு இதயத்திலும் பாடல் ஒன்று பதிந்திருந்தது;
அந்த இதயம் இளமையாயிருப்பின் உதடுகளில் இசை கசிந்து
கொண்டிருந்தது. ஒவ்வொரு முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்;
எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் வசந்தம் குடிகொண்டிருந்தது. லோகஸ்ட் மரங்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களின் வாசம் காற்றில் கலந்திருந்தன.”
மருதுவின் இருப்பில் மார்க் ட்வைனின் இந்தக் கிராமத்து இதமும் வசந்தமும் கலந்திருக்கும். ட்ராட்ஸ்கி மருதுவின் செயல்பாடுகளிலும் உரையாடல்களிலும் உடனிருக்கும்போது பலமுறை இந்த வரிகள் என் நெஞ்சில் நிழலாடுவதை உணர்ந்திருக்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் மருதுவுடன் நிகழ்ந்த சந்திப்புகள் எல்லாம் எனக்கு வைகாசி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன. மணிக்கதவின் தாழ்திறப்பாகத் தொடங்கும் மருதுவின் நேர்ப்பேச்சு, உலகை ஏகதேசமாக்கிக் காட்டும்; தமிழ்த் தொன்மங்களை பேசியும் எழுதியும் சித்திரங்களாக்கியும் சிலாகிக்கும்; அவரது அம்மா
வழி தாத்தா சோலைமலையின் பிம்பம் எழும். அவருடன் நேற்றைய திரை உலக ஆளுமைகளின் முகங்கள் வந்து போகும்.
அவரது கோரிப்பாளையம் வீட்டின் இரண்டு தலைமுறை கலை இலக்கிய அரசியல் வரலாறு அதிர்ந்து கொண்டிருக்கும். அவரது கோட்டோவியங்களில் காணப்படும் தீர்க்கமான கோடுகளும் முகங்களும் நமது வேர்களை அடையாளப் படுத்துவதைப் போல அவரது உதடுகள் தமிழர் சார்ந்த கலை
அரசியல் பண்பாட்டு வெளிகளில் அவரது நிலைப்பாட்டை தீர்க்கமாக உச்சரித்துக் கொண்டிருக்கும். மொன்னைத் தன்மை அறியாதது அவரது மொழி;
எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் மருதுவுக்கு வெளிப்படையான மதிப்பீடுகள் உண்டு. அவரது உணர்வுகளுக்கும் உந்துதல்களுக்கும் வாழ்வியல் அறத்திற்கும் அப்பால் உள்ள எதையும் யாரையும் நிராகரிக்க அல்லது
புறக்கணிக்க அவர் தயங்குவதே இல்லை.
அவர் வாழ்வதும் வரைவதும் ஒரே தளத்தில்தான். வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்து வரும் உறுதியும் தெளிவும் துணிவும் அவரது பதின் வருவ வரலாற்றிலேயே இடம்பிடித்துள்ளன. ‘கல்லூரிக் கல்வி எனக்கு பிரதானமில்லை’ என்று தனது தந்தையிடம் பிரகடனப்படுத்தும் சொற்கள் பொருள் பொதிந்தவை. தனது வாழ்க்கையைத் தானே தகவமைத்துக் கொண்டவர் அவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா தனது ஆசான் மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘அவர் தமிழின் விளைபுலமாக’ விளங்கினார் என்று குறிப்பிடுவார். என்னைப் பொறுத்தவரை நவீன கால தமிழக கலைப் பெருவெளியின் விளைபுலமாக மருது வாழ்கிறார்
என்று எவ்வித தயக்கமுமின்றி உரத்துச் சொல்லமுடியும். அப்படிச் சொல்வதற்கான காரணிகள் நிராகரிக்க முடியாதவை.
கணினியை அறிவியல் உலகத்திற்கான அதிசயப் பொருளாகக் கண்டு காத தூரம் விலகியிருந்த தமிழ்க் கலையுலகில் கணினி தமிழ்க் கலையுலகின் விரைவான விரிவாக்கத்திற்கான திறவுகோல் என்று பேசியும் பயன்படுத்தியும் உணர்த்தியவர் மருது. ஒரு காலக்கட்டத்தில் தமிழகத்தில் டிஜிட்டல் என்ற சொல்லை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கலைஞன் மருதுவாகத்தான் இருக்க முடியும். தமிழில் உலகத்தரமான காமிக்ஸ் புத்தகங்களின் தேவையை கிராஃபிக்ஸ் நாவல் பற்றிய அறிமுகத்தை இவை சார்ந்த மாபெரும் உலகக் கலைஞர்களை ஓயாமல் ஓதிக் கொண்டிருந்தவரும்
இவரே.
வருங்காலத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பின் பெரும்பகுதி ஒரு பெரிய அறைக்குள்ளே முடிந்துவிடும் என்று அலறிக் கொண்டிருந்த கலைஞனும் இவரே. அனிமேஷன் செய்யப்போகிற அதிசயங்களை திரைப்படத் துறை
நண்பர்களிடம் ஏன் சொல்கிறேன்? எதற்குச் சொல்கிறேன் என்று வினாக்களை எழப்பியபடி 20 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசிவந்த விஷயங்கள் அவரின் தொடுவான எல்லையை தீர்மானிக்க முடியாதபடி நம்மைத் தடுமாறச்
செளிணிகின்றன.
சிற்றிதழ் கூடாரங்களில், நவீன இலக்கிய முகாம்களில் வான்காவும் டாலியும் வலிந்து பேசப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வந்த காலங்களில் மருது 19ஆம்
நூற்றாண்டின் ஈடு இணையற்ற பிரெஞ்சு ஓவியர் புகெரவ்வை எனக்கு அறிமுகப்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் இழிபுகழைத் தவிர வேறோன்றும் காணாத அந்த மகா கலைஞனின் மனித உருவ சித்தரிப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் அந்த மனிதர்களின் நுட்பமான மனநிலையையும்
ஆளுமையையும் உணர்த்தும் மேதைமையை பேசிக் கொண்டிருந்தார்.
‘எழுத்தாளர்களுக்கு ஓவியர்கள் பக்கவாத்யகாரர்கள் அல்ல’ என்று பகிரங்கமாக பிரகடனம் செளிணித மருதுவுக்கு கலைஞர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை எல்லையற்றது. கலைஞனின் தனித்துவதத்திற்கும் சுதந்திரத்திற்கும் அறிந்தோ அறியாமலோ ஏற்படும் கடுகளவு பிசகைக் கூட அவர் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருமுறை தமிழ்நாட்டின் பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் தனது நூலுக்கான அட்டையை வடிவமைத்து தருமாறு மருதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
மருதுவின் வடிவமைப்பில் நாளுக்கொரு திருத்தங்களைச் சொல்லியதோடு முகப்பு ஓவியத்தின் வண்ணங்களிலும் சிலமாற்றங்களைச் செளிணியுமாறு கூறினார். அவர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டதோடு சரி.
குறுக்கீட்டை விரும்பாத மருது அந்த எழுத்தாளரை புறக்கணித்தார். வடிவமைத்த அட்டையை கிடப்பில் போட்டார். கடைசியாக மருதுவின் மனநிலையை உணர்ந்து தன் மீது ஏதேனும் வருத்தமா? என்று கேட்டார் அந்த பிரபல எழுத்தாளர்.
‘நீங்கள்தான் வாயால் எதையும் வரைந்துவிட முடியும் என்றால் நான் எதற்கு? கலைஞன் உங்கள் கையில் ஒரு கருவியல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்’ என்று காட்டமாகப் பதில் சொன்னார். இது கலைஞர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கான மருதுவின் அறைகூவல்.
மருதுவின் கலைப்பயணம் வானில் சீறிஎழும் வாணவேடிக்கைகளின் வேகத்தோடும் அவை வெடித்துச் சிதறி விண்ணை வண்ணமயமாக்கும் அழகோடும் தொளிணிவின்றித் தொடர்கிறது. மருது ஒரு இறைமறுப்பாளர். பெரியார் அவருக்கு மிகநெருக்கமான ஆசான். தந்தை மருதப்பன் ஒரு
ட்ராட்ஸ்கியிஸ்ட்; தொடக்கத்தில் காந்தி ஆஸ்ரமத்தில் ஓராண்டு காலம் தங்கி பணியாற்றியவர்; இலங்கையிலிருந்து தப்பி வந்த கொமீனா டி செல்வா, என்னம் பெரைரா ஆகிய இரண்டு ட்ராட்ஸ்கியவாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.
பீம்சிங் படங்களுக்கு கதை வசனம் எழுதிய சோலைமலை மருதுவின் அம்மா வழி தாத்தா. இவர்தான் மருதுவின் கலையார்வத்தை சிறுவயதிலேயே இனம் கண்டு அவரை ஊக்குவித்தவர். நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருதுவுக்கு பெரியப்பா
மகன். இத்தகைய குடும்பச் சூழலில் மருதுவின் கலை இலக்கிய வாழ்க்கை பயணப்பட்டிருக்கிறது.
ஒரு நல்ல நாற்றங்காலில் முளைவிட்ட பயிர் மருது. இந்த இளம் நாற்று எந்த நிலத்தில் பிடுங்கி நடப்படவேண்டும் என்பதையும் தான் அளிக்கப்போகும் விளைச்சலின் தரத்தையும் மகசூலையும் தீர்மானித்து வைத்திருந்தது.
முதல் முறையாக மருது சென்னைக்கு வந்தது அவரது உறவினர் திருமணம் ஒன்றிற்காக. அது அவரது பதின்பருவம் தொடங்கிய காலகட்டம். அவரை அழைத்துச் செல்ல நடிகர் எஸ். எஸ். ஆர் அவர்கள் ஒரு நீண்ட கார் அனுப்பி
வைத்திருந்தார். தனது குடும்பத்தினரோடு அந்த மோட்டார் வண்டியில் ஏறி முன்சீட்டில் அமர்ந்த மருதுவின் கண்களில் ஸ்டியரிங்வீலில் பதிந்திருந்த எஸ்.எஸ்.ஆர் என்ற வார்த்தைகள் இன்னும் அவரது நினைவில் உள்ளது. சென்னையில் அவர் பயணித்த அதே வண்டியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்
மரணமடைந்த தியாகராஜ பாகவதரின் உடல் திருச்சிக்கு எஸ்.எஸ்.ஆரால் எடுத்துச் செல்லப்பட்டது. இதை எஸ்.எஸ்.ஆர் சொல்லக் கேட்டறிந்திருக்கிறார் மருது. நாடறிய வாழ்ந்த கலைஞனின் அவலம் மிகுந்த கடைசிப் பயணத்துடன் தான் பயணித்த வாகனமும் சம்பந்தப்பட்டிருப்பதைச் சொல்லி மருது நெகிழ்ந்து போவார்.
மருதுவின் வாழ்க்கை சம்பவங்களாலும் மனிதர்களாலும் நிறைந்தது. தீவிர கொள்கைகளோடும் தீர்க்கமான முடிவுகளோடும் இயங்கும் மருது தனது சுயசிந்தனைகளை மையப்படுத்தியே பயணிக்கிறார். வறட்டு வாதங்களுக்கு அவர் இடம் தருவதில்லை. புற அடையாங்களை உவப்பதில்லை. அழகியல்
பார்வையும் அறிவியல் பார்வையும் அவரது வழித்தடங்கள்.
ஒருமுறை நான் சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்கு சிதம்பரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கலைஞன் ரோடின் பார்த்து வியந்த ஆடல்வல்லானுக்கு இரவு 3.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கியது. அற்புதமான அந்த
வெண்கலச் சிலைமீது குடம் குடமாக ஊற்றப்பட்ட தேன் வழிந்தோடியது. வழிகிற கெட்டித்தேன் நடராசரின் முகத்தை மறைத்து நின்றது. முகமற்ற முகத்துடன் நடனம்புரிந்த அழகில் ஆயிரம் மாயவித்தைகளை கண்டுணர முடிந்தது. மருது வரைந்த ஒரு நடராஜர் ஓவியத்திலும் நடராஜர் முகமற்ற
முகத்துடன் இருந்தார். மற்ற ஆராதனைகள் தொடர்ந்தன.
மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட திருநீற்றில் முகமற்றிருந்த நடராசர் மறுஒன்றிலாத ஒளிரும் முகத்துடன் காட்சியளித்தார். பிறகு வண்ண மலர்கள் தூவித் தொழுதனர். ஏறக்குறைய மூன்று மணி நேரம் இந்த ஆராதனை தொடர்ந்தது. இவையணைத்தும் முடிந்தபின் கோயிலை விட்டு வெளியே வந்ததும் முகமற்ற நடராசரைப் பற்றிப் மருதுவிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. காலை 7 மணி இருக்கும். கைபேசி மூலம் மருதுவை தொடர்பு கொண்டேன். அவர் குடும்பத்துடன் பொங்கலுக்காக காரில் மதுரை சென்று கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் பேசினேன்.
“இல்ல மருது. இன்றைக்கு சிதம்பரம் வந்திருந்தேன். நடராஜரின் ஆருத்ரா தரிசனத்திற்காக, மூன்று மணிநேரம் அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிலைமீது குடம் குடமாகத் தேனைக் கொட்டியபோது நடராஜரின் முகம் முழுதுமாகத் தெரியவில்லை. நீங்கள் வரைந்த முகமற்ற நடராஜரை இன்று நேரில் தரிசித்தேன். மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்த ஆராதனையில் அழகின் பேரலைகள் எழுவதை உங்களால் கண்டுகொள்ள முடியும். அடுத்த ஆருத்ரா தரிசனத்திற்கு நீங்களும் உங்களது பிரதம சீடன் கருணாநிதியும் மற்ற இளங்கலைஞர்களுடன் இதைக் காணவேண்டும்” என்று சொன்னேன்.
“ஆஹா பிரமாதம். இதுதான் நான் சொல்றேன். இது எல்லாமே ஒரு ’Theatrical Effect’. உங்களுக்கு பக்தி, எங்களுக்கு கலை. இதை நீங்க புரிஞ்சி வைச்சிருக்கிங்க. அங்கதான் நாம ஒண்ணு சேர்றோம்” என்று என்றைக்குமான ஏகாந்த கிளர்ச்சியோடு பேசினார்.
இறைமறுப்பாளரான மருதுவின் அழகியல் பார்வையில் எந்த வறட்டு தத்துவங்களுக்கும் இடமிருக்காது என்று நான் சொல்லுவது இதை வைத்துத்தான். ‘தரிசனம் என்பது தானாக நிகழ்வது’ என்பார் லா.ச.ரா.
எனக்கு கிடைத்த மருது தரிசனமும் அப்படித்தான். இந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே மருதுவை ஓவியர் என்ற அடைமொழியிட்டு குறிப்பிடவில்லை. நாயக்கர் மஹாலில் ஒரு தூணைக்காட்டி இதுதான் நாயக்கர் மஹால் என்று சொல்ல முடியுமா? அது பரமார்த்த குருவின் சீடர்கள்
யானையைப் பார்த்த கதைதான். உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு நிகழ்த்துக் கலைஞனாக மாறிவிடும் மருதுவின் பல்பரிமாணங்களை கண்டு கொண்டவர்களுக்கு வெறும் ‘ஓவியர் மருது’ என்ற விளி உவப்பாகாது. அவரது நெஞ்சில் தமிழ் மண்ணின் ஈரம் கசியும். அவரது நுண்மான் நுழைபுலத்தில் மேலைத் தேய நவீனங்களுடன்
ஆயிரம் கலைகள் பரவசப்படும்.
"அரசன்"
"2012 ல் ''
இத்தகைய கலைஞனின் வீட்டுக்கு கலைமாமணி மட்டும் வந்து கதவைத் தட்டிச் சென்றுள்ளது. ‘பத்ம’ங்களுக்கு இன்னும் பாதை தெரியவில்லையாம்.
‘நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்’ என்று வேண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்த பொழுது ஆஸ்கார் ஒயில்டு எழுதினான். இன்றைக்கு இந்த வாசகம் மருதுவுக்கும் பொருந்தும். ‘வாளோர் ஆடும் அமலை’ மூலம் கடந்த எட்டாண்டுகளில் மருதுவின் நவீன ஓவியங்கள் நூல் வடிவில் பதிவாகியுள்ளன. இதை வெளியிட்டு மருதுவுக்கு சிறப்பு செளிணிதிருக்கும் தடாகம் அமைப்பு சார்ந்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மிகுந்த கவனம் செலுத்தி அயராமல் இந்த நுலை உருவாக்கி மருதின் கலை ஆளுமையை பதிவு செளிணியும் கவிஞர். வெண்ணிலாவுக்கு எனது வணக்கங்கள். மருதுவுக்கு என்னை
ஆற்றுப்படுத்திய எனதன்புக்குரிய இளையபராதியை நினைவுகூர்ந்து அகமகிழ்கிறேன்.
tks to artist jeevananthan
Labels : ஓவியர் மருது, டிராட்ஸ்கி மருது, காலத்தின் திரைச்சீலை,ஒரு கலைஞனை அவன் வாழும் காலத்திலேயே கொண்டாடுவது என்பது மிக உன்னதமான காரியம்.அதையும் உயரியமுறையில் செய்வதென்பது அதைவிட உன்னதம்.ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது பற்றிய நாற்பது கட்டுரைகளை மருதுவை நன்கு அறிந்த சிறந்த ஆளுமைகள் ஆத்மார்த்தமாக எழுதியுள்ளவை தோழர் அ.வெண்ணிலா,தோழர் முருகேஷ் ஆகியோரின் ஈடுபாடு மிக்க உழைப்பினால் “காலத்தின் திரைச்சீலை” என்று புத்தகமாக வெளி வந்துள்ளது.அவசியம் படிக்க வேண்டிய நூல். “அகநி”வெளியீடு,வந்தவாசி -94443 60241/04183-226543அதில் வந்துள்ள ஒரு நல்ல கட்டுரை.நண்பர் (சந்தியாபதிப்பகம்) நடராஜன் எழுதியது. - "ஜீவாநந்தன்"
அறைகூவலில் உள்ள கோபமும், வலியும், உண்மையும் புரிகிறது... அவரைப் பற்றிய பல தகவல்கள் அறியாதவை... நன்றி... ஓவியங்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை... அற்புதங்கள்...
ReplyDeleteஅருமையான ஓவியர்! இவரது ஓவியங்களை குமுதம் விகடனில் பார்த்து வியந்திருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇவரது ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்..
ReplyDeleteநன்றி.
ReplyDelete