#ப.பி படித்ததில் பிடித்தது
---------------------------------------------
யூகோஸ்லவியா நாட்டு கிராமம் ஒன்றில் நாய்,பசு, கழுதை ஆகிய மூன்றும் வாழ்ந்து வந்தன. நாட்டின் நிலைமை மோசமாக மாறி அங்கே வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவை மூன்றும் அந்த கிராமத்தை விட்டு காட்டுக்கு ஓடின.
ஆனால் அவைகளால் தாங்கள் வாழந்த கிராமத்தை மறக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து கிராமத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை பார்த்து வரும் படி நாயை மற்ற இரு மிருகங்களும் அனுப்பி வைத்தன. அந்த நாய் அடுத்த நாளே ஓட்டமாக ஓடி வந்தது "கிராமத்து நிலைமை இன்னும் மோசமாக மாறி விட்டதாகவும், குரைக்க ஆரம்பிக்கும் போது ஜனங்கள் கொல்ல வந்துவிட்டதாகவும் தப்பி வந்தது தம்பிரான் புன்னியம் எனவும், தன்னால் எப்படி குரைக்காமல் இருக்க முடியும் எனவும் சொன்னது.
சிறிது காலம் கழிந்து, கிராமத்தின் நிலையை கண்டுகொள்ள பசு சென்றது. அடுத்த நாளே திரும்பி வந்து "என்னை பார்த்ததும் என்னிடம் பால் கரக்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு என்னை அடிக்கவும் செய்தார்கள். நான் இனி அங்கே போக மாட்டேன் எனச் சொன்னது.
அதே போல கழுதையும் கிராமத்துக்கு போய் வந்து சொன்னது " கிராமத்தில் தேர்தல் நடக்கப் போகிறதாம் என்னை பார்த்தும் மக்கள் பிரதி நிதிக்காக நான் போட்டியிட வேண்டுமாம் அதற்கு நான் தான் தகுதியானவனாம்...யப்பா...சாமி ஓடியே வந்துட்டன் என்றது.
இது ரஷ்ய தலைவர் க்ருஷ்ச்சேவ் சொன்ன கதை
@@@@@@@@
கவிஞர் கண்ணதாசன் #எனது சுயசரிதை புத்தகத்தில்...
சாதாரணமாகப் பாட்டெழுத உட்கார்ந்தால், ஒரு சுகமான உலகத்தில் மிதப்பது போல் எனக்கு தோன்றும், அகக் கவலை,புறக்கவலை எதுவும் தோன்றாது.
பாகப் பிரிவினையிலும், பாசமலரிலும் சில பாட்டுகள் பிறந்த இடங்கள் வேடிக்கையானவை.
நான் சிவகங்கைச் சீமைக்காக எழுதிய பல பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். திட்டமில்லாத அந்த வேலையால், நஷ்டமடைந்த பணம் சுமார் 20000 ரூபாய். சிவகங்கை அரசு எப்படித் தோன்றியது என்பது பற்றிச் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஆயிரம் அடிப்பாடல் ஒன்று எழுதி இருந்தேன். அதில் பல வகையான மெட்டுக்கள் மாறி மாறி வரும்.
மருது பாண்டியரும், ராணி வேலுநாச்சியாரும், திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியைச் சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், "குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்" என்று ஒரு பாடல். அது அந்தப் படத்தில் இல்லை. அதே மெட்டில் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ"என்ற பாடலை எழுதினேன்.
அது போல் "மண்ணில் கிடந்தாலும் மடியிலிருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா ? " இது எடுக்கப் படவில்லை. பாசமலரில் மலர்ந்தும் மலராத " பாடலை அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.
பாட்டுத் தொழிலில் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த அந்த நேரத்தில், வேறு பிடிக்காமலிருந்தால் கூட என் தொல்லைகள் வளர்ந்திருந்திருக்க மாட்டா.
சிவகங்கைச் சீமையிலே எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம் தான். அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் வலிமையான விதி என்னை மேலும் இழுத்தது. கவலை இல்லாத மனிதன் அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய கிளைமாக்ஸ் கட்டத்தை நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தை கொலை செய்தோம். முழு முதற்க் காரணம் சந்திரபாபு. தன் குணத்த்தாலே தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்
@@@@@@@@@
அப்போது பானுமதி நடித்த ராணி என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாளில் பாடல் எழுதுவதென்பது பிரசவ வேதனை போன்றது. தானானானா என்றொரு தத்த காரத்தைக் கொடுத்துவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களயும் அதற்குள் திணிக்கச் சொல்லுவார்கள்.
உள்ளம் வலிக்கும், உடம்பு வலிக்கும், நினைப்பதை சொல்ல முடியாது ஏதோ வயிற்றுப் பாட்டுக்காக எழுதி தீர்க்க வேண்டும். நானும் சித்திரவதைப் பட்டு ஒரு பாடலை எழுதி முடித்தேன். ஒத்திகை பார்க்க பானுமதி வந்தார். பாட்டை வாங்கிப் பார்த்துவிட்டு "இது என்ன பாஷை ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
எனக்கு அவமானமாகப் போய்விட்டது.
நமக்கும் ஒரு காலம் வரும் என்று நான் பொறுமையாக இருந்தேன்
@@@@@@@@@
ஒரு மனிதனுக்குத் திறமை மட்டுமே போதுமானதாக இல்லை; தோதான சந்தர்ப்பங்களும் வாய்க்க வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ, திறமை இல்லாதவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமோ பயன் படுவதில்லை.
சிந்தனையிலேயே சுகமான சிந்தனை கடந்து போன காலங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும்
@@@@@@@@@
~ கவிஞர் கண்ணதாசன்
உங்களுடைய பெற்றோரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை உங்கள் ஒருவரால் தான் தேர்ந்தெடுக்க முடியும்
சொன்னவர் ; ஸெர்னி
( ஆனால் சுவாமி என்ன சமைக்கலாம் என்ற உரிமையை வீட்டம்மணியிடம் தந்து விட்டேனே வாட் டு டு !)
@@@@@@@@@
கருநாடகத்துடனான #அணைப்பிரச்சனை என்பது இப்போது அல்ல
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்த பிரச்சனை.
#ராணி_மங்கம்மாள் வரலாற்றை படித்தோமானால், ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவதற்காக காலங்காலமாக தமிழர்கள் சண்டை போட்டு
வந்துள்ளனர்.
மைசூர் போர் என்பதை வரலாற்று ஏடுகள் இப்படி சித்தரிக்கின்றன.
முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.
சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது
@@@@@@@@@
ஒத்தரூபாயின்மகிமை
----------------------
அதுவொரு எடை பார்க்கும் மெசின் அதுமட்டுமல்ல உயரம் இந்த நாள் இனிய நாளா என்பதையும் துக்கடா சீட்டில் சொல்லி விடும்.
சரி நம் எடையை சோதித்துப் பார்போமே என்று அருகில் சென்று மணி பர்சை துழாவினேன் ஒரு ரூபா நாணயம் ஏதும் சிக்குமா வென.
ஆஹா ...ஒன்னே ஒன்னு கண்ணே கண்னு இருந்தது. ஆனால் அது நாலணா சைசில் , இது ஏதடா வம்பா போச்சி யாரிடமாவது கேட்கலாம் ...
என் அதிர்ஷ்டம் ஒன்று உதட்டை சுழித்தார்கள், இல்லை என்று தலையாட்டினார்கள், வெரித்துப் பார்த்தார்கள். நான் என்ன கேட்டேன் இந்த காசை வைத்து விட்டு வேறு. சைஸ் காசு தானே கேட்டேன்.
பக்கத்தில் காயின் பாக்ஸ் போனில் பேச எத்தனித்தவருக்கு லைன் கிடைக்கவில்லை போல டொக்கென்று காயினை துப்பியது.
"ஏனுங்க காச மாத்திகலாமா?" தரமாட்டாராம்.
"அதையே போட்டு பாருங்க ஹி..ஹி "
ஆனது ஆகட்டும் மெசினுக்கு எதிரில் ஏறி நின்றேன்.
"காசை போடவும்"
போட்டேன். மீண்டும்
"காசை போடவும்"
" ச்சேச்சே மெசினோடு மல்லுக்கட்டுவதா? "
என் ஒத்தரூபாயை விழுங்கி விட்டு தேமேனென்றிருந்து...
@@@@@@@@@
ரோமாபுரியே அவளின் அழகில் சொக்கி போனதாக சொல்லுவார்கள். மென்மஞ்சள் உடல் நிறமும், மயக்கும் நீலவிழிகளையும் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா. நூற்றுக்கணக்கான கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப் பட்டன. நித்தம் கழுதைப்பாலில் குளிப்பாளாம். அதிருக்கட்டும் இத்தகவல் எதற்கு என்றால் இப்போது கழுதைப் பால் லிட்டர் ஐந்தாயிரத்திற்கு விற்கிறார்களாம். குழந்தைகள் கழுதைப் பால் குடித்தால் நோய் நொடியில்லாமல் திட காத்திரமாக இருப்பார்களாம். ஆனால் உண்மையா ? என்றால் டுபாக்கூர் தான். குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.
@@@@@@@@@
கதை ஹா... ஹா...
ReplyDeleteஅனுபவக் கவிஞர்...