ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தோட்டத்து பங்களா.... சேர்த்து அணைத்த இருட்டு கருக்கொண்ட நிசப்தமான இரவை மரக்கிளைகளில் படபடத்த பட்சிகளின் சிறகுகளின் சப்தத்தை விடவும், விசு விசுத்து கிளம்பி இலைகளை பட படக்க வைத்து ஏற்படுத்திய.... ஹோ.... வென்ற ஓசை சன்னல் திரைச்சீலைகளை கிச்சு கிச்சு மூட்டி உள்ளே புகுந்தது காற்று.
இலைகள் விலக்கி புகுந்த நிலவின் கீற்றொளி ஏனோ ஒரு அமானுஷ்ய காட்சியை வெளிச்சம் போட்டு காட்டியது.
பங்களாவிற்கு சற்று தொலைவில் இருந்த மரத்தின் சிறு கிளைகளின் அசைவுகள் ஏதேதோ பேசுவதைப் போல இருந்தது.
பூமிக்குள் இருந்து மேலே கிளம்பிய வேர்கள் சட சடவென வளைந்து நெளிந்து பங்களாவை நோக்கி தன் கரங்களை அசைத்து திறந்திருந்த சன்னலினுள் புகுந்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அவளின் கால்களையும் கைகளையும் சுற்றி வளைத்து அப்படியே சுருட்ட
“ ஹக் ”
( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )
பட படத்த நெஞ்சைப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்த அவளுக்கு குப்பென வியர்த்து கொடிட்டியது தேகம் முழுவதும்.
இது கனவுதான் என்பதை அவளுக்கு உணர்த்தினாலும்...ஏன் இப்படிப்பட்ட கனவுகள் தனக்கு வருகிறதென்பது தெரியவில்லை அவளுக்கு..
அவள் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது.
கனவில் நடக்கும் சம்பவங்களை விடவும் சில சமயங்களில்.., நிஜத்தில் நடப்பவைகள் இன்னும் புதிராக தோன்றி மறைந்தது.
ஜன்னலின் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. அந்த மரத்தை வெறித்து பார்க்கும் பொழுதெல்லாம் ஏதேதோ பேசும் குரல்கள் கேட்டது... இதை எல்லாம் அவரிடம் சொன்னாலும் ஏதும் கேட்பதே இல்லை...,
பித்து பிடித்தவள் பேசிய பேச்சுகளாகவே அவருக்கு படுகிறதா?
நான்கு வயதிலும் ஒன்னறை வயது கைக் குழந்தையையும் வைத்துக்கொண்டு தான் படும் கஷ்டங்கள் ஏன் அவருக்கு புரிவதில்லை.?
மாமனாரும் அத்தையும் துணைக்கிருப்பது அவளுக்கு ஒரு ஆறுதல்.
ஓவியாவின் போக்கும் வர வர சரியில்லை அந்த மரத்தின் பக்கம் போகாதே என்றால்,,,சொல்வதை கேட்பதே இல்லை.. பார்த்துக் கொண்டிருந்த போதே மரத்தின் மீது தன் காதுகளை வைத்து என்னவோ... பேசிக் கொண்டிருந்தாள்
“....வா...டீ...ஈ ””
என கூப்பிட்டு ரெண்டு சாத்து சாத்தினாள் ஆனால் அழுவதற்கு பதில் அவள் கண்களை மலங்க வெறித்து அவளையே பார்த்தாள்.
குழந்தையின் தள்ளுவண்டியை ஒரு நாள் மரத்திடம் தள்ளிக் கொண்டு போனாள்.
தனக்கு தெரிந்து அத்தையும் மாமாவும் அந்த மரத்தின் பக்கம் செல்வதேயில்லை...
அவர்களும் அந்த மரத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லை.
( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )
ஒரு நாள்
“...சு...ரே...ஷ் ”
கூப்பிட்டு கொண்டே ஓடினாள். அவன்...வெளி ரோட்டை நோக்கி ஓடினான் கொஞ்ச தூரம் சென்று பார்த்தும் அவன் அவள் கண்களுக்கு தட்டுப்படவில்லை வெறும் இருட்டு மட்டுமே நீண்டிருந்தது.
சில சமயம் காணாமல் போன மூத்த பையன் அந்த மரத்தினடியில் நிற்பது போல் தோன்றும்
ஒரு நாள் ஓவியா ”...பொலிஸிர்கு சொல்ல...லியா...? என வார்த்தைகள் உதிர்த்தாள்.
ஏன் ? எதுக்கு ??
”அண்ணா வை கண்டுபிச்சி குடுப்பாங்கல்ல...”
”..யார் உனக்கு சொன்னா? ”
கேள்விக்கு பதிலாய்.... அந்த மரத்தை நோக்கி கை நீட்டினாள்.
( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )
சில தினங்கள் கழிந்து அதிசயமாக பூத்துக் குழுங்கியது அந்த மரம். ஒடிந்து விழுந்த பூங் கொத்தை முகர்ந்து பார்த்த அத்தை மூர்சையாகி விழுந்தாள். சரியாக ஒருவாரம் இருக்கும் நினைவிழந்த நிலையில் இறந்து விட்டாள்.
மாமனாரும் யாரையாவது வரச் சொல்லி அந்த மரத்தை வெட்டிப் போட வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தார். சரியான ஆள் கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களின் பின்னே அந்த மரத்தையே வெறித்துப் பார்த்தபடி அதன் அருகில் போனார். நிலத்தின் அடியிலிருந்து குபு குபுவென கட்டெரும்புகள் அவர் உடல் முழுதும் ஏறியது தடுமாறி விழுந்தவர் பின் எழவே இல்லை.
அவ்வப் போது பையனின் நினைப்பாகவே இருந்தது. இரவு நேரங்களில் இரண்டு கைகளாலும் அத்தானின் நெஞ்சை குத்தி சட்டையைப் பிடித்து பையன இன்னும் தேடி கண்டுபிடிக்காம இருக்கியே த்தூ...என சிலுப்பினாள். அவன் ஏதும் பேசாமல் மெளனி யாகி விட்டான்.
சிலசமயங்களில் இருப்பு கொள்ள மாட்டேனெகிறது. என்ன எளவு ...நாய் பொளப்பு என சலித்த அவளுக்கு கண்களில் நீர் முட்டியது.
( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )
வெட்டிப்போடப்பட்ட மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த அவனுக்கு நித்யாவின் போக்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. அவள் ..அவள் செய்த காரியத்தை நினைத்தால் .... கிர் என்ற தலையை பிடித்து கொண்டான்.
பையன் காணமல் போய்விட்ட ஏக்கம் அவளை நிரப்ப பாதித்து இருப்பது புரிந்து கொள்ள முடிந்தது.
அவளிடம் பேச்சு கொடுத்து பரிசோதனை செய்த டாக்டர் அதைத்தான் சொன்னார். அவனுக்கு புரியாத வார்த்தைகள் சொன்னார் அந்த பாதிப்பு கொஞ்ச காலத்திற்கு பிறகு சரியாகி விடும் என்றார்.
அவன் முடிவெடுத்து விட்டான் இனி இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. அவள் செய்த காரியம் அவளுக்கே தெரியவில்லை. எதுவோ தன்னை தாக்க வருவதாக நினைத்து பலமாக தள்ளிவிட்டு அந்த பிள்ளையின் சாவுக்கு காரணமாகி விட்டாளே. யாருக்கும் தெரியாமல் மறைத்தாலும் அவன் மனது கேட்கவில்லை....ஓ..வென பீரிட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. அவன் உடல் குலுங்கியது. கண்கள் சிவந்து போயிருந்தது. தாரை தாரையாக கண்ணீர் ஓடிய தடத்தை இரண்டு கைகளாலும் அழித்தான், கெட்ட சம்பவங்களோடு சேர்த்து.
சாமான்களை ஏற்றப் பட்ட வாகனம் வெளிச்சக்கீற்றை மறைத்து புழுதி பறக்க அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சென்றது நிசப்தத்தை கரைத்து.
( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )
நினைவெல்லாம் நித்யா !! கதையாக்கம் : கலாகுமரன்
( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )
காதல் கதை எதிர்பார்த்து வந்த என்னை ஏமாத்தீட்டீங்களே.. :-P
ReplyDeleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.
ReplyDelete