"சாதனை புரிய முதலில் எங்காவது தொடங்கு என்பார்கள் இந்த இளைஞர் பென்சில் முனையில் இருந்து தொடங்கி உள்ளார். எந்த ஒரு சாதனையும் எளிதாக கிடைப்பதில்லை கடினமான முயற்சி தான் வெற்றியை கொடுக்கிறது. இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவரைப்பற்றி இதோ தெரிந்து கொள்ளலாம்."
கின்னஸ் சாதனை படைத்த புதுவை அண்ணாமலையின் படத்தை இளைஞர் மலரில் (தேதி : 3.3.2012 ) அட்டையில் வெளியிட்டு பாராட்டியுள்ளது " தினத்தந்தி"
பேச்சு, மூச்செல்லாம் ஓவியம்...ஓவியம் என்றிருக்கிறார் அண்ணாமலை. அந்த அதீத மோகம்தான் இந்தக் கல்லூரி மாணவரை ' கின்னஸ் சாதனை' என்ற சிகரம் ஏற வைத்திருகிறது.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி. விஸ்காம் (காட்சித் தொடர்பியல்) முதலாமாண்டு பயிலும் அண்ணாமலையை அண்மையில் சந்தித்தோம். தூரிகை போலவே ஒல்லியாக இருந்த அந்த இளங்கலைஞர் பேசினார்...
சின்னவயதில் சுவற்றில் கரி கொண்டு கிறுக்குவதில் தொடங்கியது எனது கலை ஆர்வம். படிப்பையும் தான்டி எனது ஓவிய விருப்பம் இருந்தது. எனவே வீட்டில் இருந்து படித்தால் சரிவராது என்று புதுவையில் உள்ள ஆச்சாரியா சிக்ஷா மந்திர் பள்ளிக்கு எனது பெற்றோர் அனுப்பினர். அப்போது பிறர் குறைசொல்லாத அளவுக்குப் படித்த நான், ஓவிய ஆர்வத்தையும் விட்டு விடவில்லை.
முதல் வெற்றி : 6ம் வகுப்பில் படிக்கும் போது பிரபல தொலைக்காட்சி ஒன்று மாநில அளவில் நடத்திய காந்தியடிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. பெற்றோர் உள்ளிட்ட பிறரும் எனது ஓவிய ஆர்வத்தை அங்கீகரித்தது அப்போதுதான்.
ஆசிரியர் வழிகாட்டுதல் : 8ம் வகுப்பில் படிக்கும் போது ஓவிய ஆசிரியர் முத்துகுமரன் எனது ஓவிய தாகத்தை ஊக்குவிப்பவராகவும், வழிகாட்டியாகவும் வந்து அமைந்தார். பள்ளி நேரம் முடிந்ததும் அவரிடம் சென்று முனைப்போடு கற்றுக்கொண்டேன். எனது ஆர்வத்தை செதுக்கி சீர்திருத்தி தொழில் நுட்ப ரீதியாக மேம்படுதியவர்கள் அவரைத்தவிர செந்தில்குமரன், அச்சுதன், செல்வகுமார் போன்ற ஓவிய ஆசிரியர்கள்.
கவனிக்க வைத்த வெற்றிகள் : 10ம் வகுப்பில் புதுவை அரசு சார்பில் நடத்தப்பட்ட 'பிளாஸ்டிக்கை தவிர்போம்' என்ற கருத்தின் அடிப்படையிலான போஸ்டர் உருவாக்கும் போட்டியில் புதுவை அளவில் முதலிடத்தையும், மண்டல அளவில் இரண்டாம் இடமும் பெற்றது.
கின்னஸ் போட்டியில் முயற்சி மற்றும் வெற்றி : ஆச்சார்யா சிக்ஷா மந்திர் (நிர்வாக இயக்குநர் அரவிந்த், முதல்வர். மணி விஜயராகவன்) சார்பில் கின்னஸ் சாதனை முயற்சி மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்குரிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நீளமான கார்டூன் தொடர் என்ற பிரிவில் சாதனை புரிய முடிவெடுக்கப்பட்டது.
இச்சாதனைக்கான நிபந்தனைகள் 40 மீட்டர் தாளில் 4 நாட்களுக்குள் வரைந்து முடிக்க வேண்டும். இருகையில் அமர்ந்த படியே வரைய வேண்டும். அப்படி இப்படி அசையக்கூடாது பிறருடன் பேசக்கூடாது, வேகம், நேர்த்தியுடன், ஸ்ட்ரோக் மாறக் கூடாது, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள்.
அனைவரது பாராட்டு மற்றும் உபச்சாரம் என்னை பெருமையில் மிதக்க வைத்தாலும் பொறுப்புச் சுமையும் உணர்ந்தேன். எனக்கு ஒருமாத கால விடுப்பு கொடுத்தார்கள் அப்போது உணவுக் கட்டுப்பாடு, கார்ட்டூன் பயிற்சி, பிசியோதெரபி என சவாலுக்குத் தயார்படுத்திக் கொண்டேன்.
குறிப்பிட்ட நாளன்று காலை 5 மணிக்கு சாதனைப்பயணம் தொடங்கியது.
பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்களும் திரண்டு நின்று வாழ்த்த தொடர்ச்சியான தாளில் கார்ட்டூன் கதைகளை பென்சில் கொண்டு தீட்டினேன். டுவிங்கிள் ஸ்டார் என்ற தலைப்பில் 10 கதைகளை தொடராக வரைந்தேன். ஒவ்வொரு கதையும் முடிவில் ஒரு நீதியைக் கொண்டிருக்கும். சும்மா கிறுக்கித்தள்ளவோ, நிறைய இடம் விடவொ முடியாது. ஸ்ட்ரோக் ஓரே மாதிரியாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட வி.ஐ.பி கள் வந்து வாழ்த்தினர். முன்னால் கின்னஸ் சாதனையாளர் பிரதீப்குமார் கின்னஸ் நிறுவனம் சார்பில் பார்வையாளராக வந்திருந்தார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டேன். பழச்சாறு மட்டும் அருந்தினேன்.
நேரம் செல்ல செல்ல கைவிரல்கள், மூட்டு, தோள்பட்டை எல்லாம் வலி பின்னியெடுக்க அரம்பித்தது. இருந்தாலும் எந்திர வேகத்தில், ஆனால் தரம் குறையாமல் வரைந்து கொண்டிருந்தேன். |
இரவு 11 மணி வரை வரைந்த நான், மறுநாள் 4 மணிக்கு எழுந்து பென்சில் பிடித்தேன். நேரம் செல்ல செல்ல என்னால் தாக்குப்பிடிக்க ரொம்ப கடினமாக இருந்தது. ஏ.சி அரங்கம் என்பதால் ஜலதோசமும் அவஸ்தைப்படுத்தியது. எனவே முயற்சியை முடித்துக்கொள்ளும்படி அனைவரும் கூற நான் முற்றும் போட்டேன்.
கின்னஸின் வரையறையையும் தாண்டி ஒன்றரை நாளில் 163. 17 மீட்டர் தூரத்திற்கு கார்ட்டூன் தீட்டிவிட்டேன். கின்னஸ் சான்றிதழைப் பெற்ற போது நான் பட்ட கஷ்டம் வலி எல்லாம் பறந்து விட்டது. |
அடுத்த இலக்கு : விஸ்காம் படிப்பை முடித்து விட்டு திரைப்பட கலை இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன். எனக்கு பிடித்த திரைப்பட கலை இயக்குநர் சாபு சிரில்.
எந்த விதமான ஓவியங்கள் பிடிக்கும் : கார்ட்டூன் தவிர காரிகேச்சர், உருவப்படங்கள் வரைதல், ரியலிச பாணி ஓவியங்கள், நிலப்பரப்பு ஓவியங்கள் எனக்கு இஷ்டமானவை. தடகளத்தில் மாநில அளவில் பல வெற்றிகளை பெற்றிருக்கிறேன்.
குடும்பம் குறித்து : நாவண்ணன் தனியார் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர். அம்மா விஜயலட்சுமி, தங்கை ராதிகா.
ஓவியம் இல்லாத வாழ்வை என்னால் கற்பனை செய்ய முடியாது. ஓவியமே என்னை உலகுக்கு காட்டியது.
-
" மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம் "
This comment has been removed by the author.
ReplyDelete