தத்துவ ஞானி பிளேட்டோ அறிஞர் சாக்ரடீஸின் மாணாக்கர்
கி.மு 427 ல் ஏதென்ஸில் (கிரேக்கம்) பரம்பரை பரம்பரையான செல்வமும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்.
அவர் எழுதிய 50க்கு மேற்பட்ட நூல்களில் ஒன்று சிம்போசியம் (Symposium) ”ஆன்மீக காதல்” திருக்குறளின் காமத்துப் பால் போன்றது எனச் சொல்லலாம். காதலும் காமமும் பற்றி பிளேட்டோவின் கருத்துகளின் (ஒரு பகுதி ) சுருக்கத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
காதல் - ஒரு தீவிரமான மனநோய்
உன்னைக் காதலிக்க வேண்டுமானால் நீ காதலி.
காதலானது மனிதர்களை தங்கள் காதலிகளுக்காகச் சாகவும் துணியச் செய்கிறது. காதல் ஒன்றுதான் அந்தமாதிரி ஆக்குகிறது ; ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும்.
அழகில் சிறந்ததை காதலிப்பது இயற்கை. ஆத்மாவில் உள்ள குறை பாடுகளை காதல் விரும்பாதே தவிர, உடல் குறைபாடுகளை அது பெரிது படுத்துவதில்லை.
மனிதன் பல வழிகளில் இழுக்கப் படுகிறான். இரண்டு நோக்கங்களுக்கு இடையே இழுக்கப்படுகிறான் என்பதில் சந்தேகமே இல்லை. இளமையின் அழகை அனுபவிக்க ஒன்று தூண்டுகிறது ; இன்னொன்று அவனை தடுக்கிறது. ஏனெனில் முன்னவன், உடலை காதலிப்பவன், பழுத்த கனிபோல அழகைத் தேடிப் பசித்து அலைபவன். காதலியின் பண்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தன் பசியை வேட்கையுடன் திருப்தி செய்து கொள்வான். மற்றவனோ உண்மையில் இன்னொரு ஆத்மாவை விரும்பும் ஓர் ஆத்மா ஆவான் ; உடல் இச்சையை இரண்டாவதாகத் தான் கைக் கொள்கிறான். சரீர காதலின் திருப்தியை மூர்க்கத்தனமானதெனக் கருதுகிறான். சுபாவத்தையும் திட நெஞ்சையும், கம்பீரத்தையும், அறிவையுமே அவன் மதித்துப் போற்றுகிறான். அவன் வாஞ்சைக்கு பாத்திரமான தூய பொருளான ஒருத்தியுடன் தூய்மையான முறையில் வாழவே ஆசைப் படுகிறான்.
[ தோழமைக்காக பழகும் காதலை தோழமைக் காதல் என்கிறோம், உடல் ஈடுபாடு இல்லாமல் உள்ள ஈடுபாட்டை விரும்பும் காதலை “பிளேடானிக் லவ்” என்கிறோம் ]
ஆண்பெண் உறவை சிற்றின்பம் என்கிறார்கள் அதைவிட வலிமையான சுகம் வேறு ஏதும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதைப் போல வெறியூட்டும் போதையும் வேறொன்றுமில்லை.
எது சீராகவும் அழகாகவும் அமைந்திருக்கிறதோ அதை நிதானமாகவும் ஆழமாகவும் கலை உணர்வோடும் காதலிப்பது தானே உண்மையான காதல்.
எது வெறியூட்டக் கூடியதோ, மிதமிஞ்சிப் போவதோ அதற்கு உண்மையான காதலில் இடமில்லை.
உண்மையான காதல் நிலைத்திருக்க வேண்டுமானால் சிற்றின்ப ஈடுபாடு தலை காட்டக் கூடாது. காதலர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலிக்கிறவர்களாயிருந்தால் உடல் இன்பத்தில் அக்கரை கொள்ள மாட்டார்கள்.
காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடலாம்; இறுக கட்டியணைத்துக் கொள்ளலாம். ஓயாமல் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் இந்த எல்லையைக் கடந்து அவர்கள் போகக்கூடாது; சரீர சுகத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது. அவ்வாறு மீறி செய்வார்களானால் காதலின் நிஜச் சுவையை உணராமல் போவதோடு, சரீர ஈடு பாடு அதிகரிக்க நாளடைவில் பலஹீன மாவார்கள்.
(திருவள்ளுவர் இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார் காமம் மலரைவிட மென்மையனது. அதன் தன்மை அறிந்து நுட்பமாக ஈடுபடுபவர்கள் இவ்வுலகில் வெகு சிலரே )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !