இதற்குமுன்னர் பிறவா பனை எனும் அதிசய மரத்தை பற்றி எழுதி இருந்தேன்.
இன்னொரு மரம் "பிறவா புளி" எனும் புளிய மரம் பேரூர் பேருந்து நிறுத்ததின் அருகில் உள்ளது. பல நூற்றாண்டுகளை கடந்த இம்மரத்தின் புளியங்கொட்டையை எங்கு விதைத்தாலும் முளைப்பதில்லை. இது குறித்து ஆராயும் போது சில உண்மைகள் பிடி பட்டன. அதாவது இந்த புளியம் பழமானது பழுத்த நிலையில் புளியங்கொட்டை முற்றி நிலத்தில் விதைத்தால் முளைக்கும் ஆனால் இந்நிலைக்கு வரும் சூழ்நிலையில் விதையில் துளை ஏற்பட்டு பட்டுபோய் விடுகிறது. ஆனால் எது எப்படியோ மக்களிடம் ஒரு நம்பிக்கையை மட்டும் ஆணித்தரமாக விதைக்கிறது அது
"இவ்விடம் பிறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்பதை உணர்த்துகிறது "
முற்பிறவி, மறுபிறவி இந்த ஆராய்ச்சிக்கு நாம் செல்ல போவதில்லை. நம்புவதும் நம்பாமையும் அவரவர் கருத்து சுதந்திரம் அதில் பிறர் கருத்துகளை திணிப்பது அல்லது தலையிடுவது சரியல்ல என்பது எனது கருத்து.
அடுத்து கொங்கு மண்டலத்தின் நாகரீகம், பண்பாடு,கலாச்சாரம் நொய்யலாறு தொடங்கி முடியும் இடம் வரை கரையோர கிராமங்களில் வேறூன்றி ஒரேமாதிரியாக காணப்படுகிறது. நொய்யல் குறித்த எனது கவிதை ;
நுரைதெறித்து மனங்குளிர வருவாய் குதித்தோடி
சப்தமென்ன சந்தமென்ன இசைப்பாய் செந்தமிழே !
கருவாகி கதிர்தழைக்க உருவானாய் தமிழ்மகளே - தமிழர்
வீரமென்ன வெற்றியென்ன? கதைப்பாய் முத்தமிழே !
(கவிதை எழுதுவதில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை சொற்பிழை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்)
காஞ்சிமாநதியான நொய்யலின் பிறப்பிடம் மேற்கு மலைத்தொடரின் வெள்ளியங்கிரி மலை. இங்கு பெரியார், சேயார் எனும் சிற்றாறுகள் நொய்யலுடன் சாடிவயலில் துணை சேர்கின்றன.
பெரியார் சிறுவாணி மலையிலிருந்து கோவைக்குற்றால அருவியாக விழுகிறது.
நொய்யல் 160 கிலோமீட்டர்கள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்ந்து கொடுமுடி (ஈரோடு) அருகில் காவிரியுடன் கலக்கிறது இவ்விடம் நொய்யல் கிராமம் (கரூர்) என அழைக்கப்படுகிறது.
கரை புரண்டோடும் நொய்யல் வழியில் 23 அணைக்கட்டுகள், 23 கால்வாய்களின் வழி பாசணத்திற்கு செல்கிறது. 100 சதுரகிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட 31 குளங்களை நிரப்புகிறது எண்ணற்ற ஓடைகள் இதனுடன் சேர்கிறது. 20,000 ஏக்கர் நிலங்களை பசுமையாக்குகிறது. 30,000 ஏக்கர்கள் பாசனவசதி பெருகின்றன. இந்நதி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழிபாய்ந்து செழிப்பாக்குகிறது.
இவ்வாற்றின் மொத்த பரப்பு 3500 சதுர கிலோ மீட்டர்கள்.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையில் இருந்து இந்நதிக்கு நீர் சேகரமாகிறது. கோயமுத்தூரின் நீர் மட்டம் நடுநிலையுடன் இருக்க இங்குள்ள குளங்களே நீர் ஆதாரம் என்பது மிகையல்ல.
சாளுக்கிய சோழவம்சம் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் அனேக கால்வாய்களை வெட்டி குளங்களை அமைத்து நீர் வளம் பெருக்கினார்கள். வெள்ளம் பெருக்கெடுத்து சொல்லும் போது சுற்றியுள்ள கிராமங்களுக்கு எவ்வித சேதரமும் ஏற்படுத்தாமல் இந்த கால்வாய்களின் மூலம் ஏரி குளங்களை நிறப்ப சமயோசித ஏற்ப்பாட்டினை வழிவந்த கொங்கு மன்னர்கள் திறம்பட செய்திருந்தார்கள். குளங்களங்களின் கொள்ளலவும் மீறும் போது வாய்கால்களின் மூலம் திரும்ப நொய்யலுக்கு வந்து சேரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
கொங்கு வரலாற்றின் சுருக்கம் அறிவோமா ?
தமிழகத்தின் மேற்கு பாகம் கொங்குநாடு என அழைக்கப்படுகிறது. சேரர்களின் பிரதான பகுதி கொங்குநாடு. இதன் தலை நகராக கரூர் விளங்கியது.
அதன் பிறகு வந்த கொங்கு வம்சத்தினரின் தலைநகர் தாராபுரம் (பழங்கால பெயர் தர்க்கபுரி மற்றும் விஜயஸ்கந்தபுரம்) அதன்பின் சோழர்களின் வம்சாவழியினர் கட்டுப்பாட்டில் வந்தது (ஐந்து அரசர்கள் வீரசோழா முதல் ராஜராஜன் வரை கொங்குதேச ராஜாக்கள் என குறிப்பிடப்படுகிறது)
அதன்பின், ஹொய்சால வம்சத்தினரின் துணைகொண்டு பாளையக்காரர்கள் சோழர்களை தோற்கடித்தனர். சில காலம் விஜயநகரம்,மைசூர் ராஜ்ஜியங்களின் கீழும், தீரன் சின்னமலையின் கீழும் கொங்கு ஆளப்பட்டது. இறுதியில் ( 1805 ) பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியக் கம்பெனியுடன் இணைக்கப்பட்டது.
கிரேக்கர்கள் மற்றும் ரோமானியருடனான வணிகத்தொடர்பு இருந்ததற்காண நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. (இது குறித்த மற்றொரு பதிவு)
சிற்பக்கலையின் சிறப்புடன் திகழும் பேரூர் கோயிலின் சிறப்புகளை அடுத்து காண்போம்.
பிறவா புளி உண்மையில் அதிசயம். தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteஇன்னும் பல உண்மை தகவல்களை அளிக்க இருக்கிறேன். நன்றி, பாலா.
ReplyDelete''...மீறும் போது வாய்கால்களின் மூலம் திரும்ப நொய்யலுக்கு வந்து சேரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு...'' மிக அருமையான விவரணம். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
கோவைகவி-க்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
ReplyDelete