தமிழ் கூறும் நல்லுழகத்தில் உள்ள சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர். கண்ணதாசன் சரித்திரம் பற்றி அவர் எழுதிய கட்டுரை இது. எளிமையான மொழிநடை மடை திறந்த வெள்ளமென பொங்கிப்பாயும் அவரின் தமிழ் எழுத்துகளைப் படிப்போமா ?
(இதை உடனே படிக்க இயலாதாவர்கள் இங்குள்ள PDF மின் பக்கத்தை தரவிரக்கிக் கொள்ளவும்)
(நன்றி ஓவியர் திரு.ஜீவா)
சரித்திரம்
சரித்திர நதியின் ஓட்டத்தை நிறுத்தியவனும் இல்லை; திருந்தியவனும் இல்லை.
அதன் இரண்டு கரைகளில் ஒன்று வெற்றி; ஒன்று தோல்வி !
வெற்றிக் கரை பசுமையாக இருக்கிறது; தோல்விக் கரை சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.
பசுமையான நிலப்பரப்பை விட சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பிவழிவதை பார்த்த பிறகும், அடுத்து வருகின்றவன் தன்னுடைய, பசுமை நிரந்தரமான தென்றே கருதுகிறான்.
அந்தச் சுடுகாட்டில் அலெக்சாண்டரைப் பார்த்த பிறகும், அகில ஐரோப்பாவுக்கும் முடி சூட்டிக் கொள்ள முயன்று, அங்கேயே போய்ச் சேர்ந்தான் நெப்போலியன்.
அந்த நெப்போலியனின் எலும்புக் கூடுகள் சாட்சி சொல்லியும் கூட, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்குப் பக்கத்திலேயே படுக்கை விரித்துக் கொண்டான் ஹிட்லர்.
அந்த ஹிட்லரை எப்போதும் தனியாக விடாத முசோலினி, அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போய் அவனுக்கு இடம் தேடி வைத்தான்.
அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள், ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிக் காலங் காலங்களாகச் சாட்சியங்கள் இருந்தும் கூட கண்மூடித்தனமான அதிகார வெறி இருந்து கொண்டே இருக்கிறதே, ஏன்?
அதுதான் இறைவன் பூமிக்கு வழங்கிய தர்மம் !
அழிய வேண்டியவன், ஆடி முடித்துத்தான் அழிய வேண்டும் என்பது காலத்தின் விதி.
பதவி என்னும் பச்சை மோகினியின் கரங்களில் பிடிபட்டவனிடமிருந்து அடக்கம் விடைபெற்றுக் கொள்கிறது; ஆணவம் தலை தூக்கி நிற்கிறது !
வெற்றி வெற்றி என்று தொடர்ந்து வர வர, தோல்வி என்பது தன் அகராதியிலேயே இல்லை என்ற துணிச்சல் வருகிறது !
கண்ணுக்கு முன்னாலிருக்கும் பயங்கரப் படுகுழிகூட தனக்காகக் கட்டப்பட்ட நீச்சல் குளம் போல் தோன்றுகிறது.
விழுந்த பிறகு, எலும்பு முறிந்த பிறகுதான் மாயை விலகுகிறது; மயக்கம் தெளிகிறது !
ஒரு மனிதனின் கரங்களுக்குள் உலகத்தின் சுக துக்கங்கள் விளையாட, இறைவன் ஒரு போதுமே அநுமதித்ததில்லை.
அடித்த பந்து, திரும்பி வந்து தாக்கும் போது தான் இந்த உண்மை புலப்படுகிறது.
ஆணவக்காரன் ஒவ்வொருவராக விரோதித்துக் கொள்கிறான்.
பிறகு அவனே எல்லா எதிரிகளையும் ஒன்றாகச் சேர்த்து விடுகிறான்.
அவர்கள் தனக்கு எதிராக விசுவரூபம் எடுத்து நிற்கும்போது, ' யாரோ செய்த சதி' என்று அலறுகிறான்.
சர்வாதிகாரத்திலேயே ஆணவ அதிகாரம் சாஸ்வதமில்லை யென்றால், ஜனநாயகத்தில் எப்படிச் சாத்தியமாகும் ?
விழித்துக் கொண்டே வெற்றிகளைப் பெற்ற ஹிட்லரை, நார்மண்டி முற்றுகையின் போது, தூங்கிக் கொண்டே தோல்வியைத் தழுவ வைத்த இறைவன், உலகத்தில் பதவியையும் பணத்தையும் சமப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.
எங்கேயும் எதுவும் அளவுக்கு மேல், காலா காலங்களுக்கு நின்று விடுவதை அவன் அனுமதிப்பதில்லை.
ஆகவே, அதிகாரமுள்ளவனிடம் அடக்கத்தையும் பதவியிலுள்ளவனிடம் பணிவையும் நாடு எதிர் பார்க்கிறது.
புகழ்ச்சிகள் மிகுதியாக மிகுதியாக ஹிருதயம், விமரிசனத்தைத் தாங்குவதற்குச் சக்தி இல்லமல் போய் விடுகிறது.
எந்த விமரிசனத்தையும் தாங்கக்கூடிய சக்தி எவனிடமிருக்கின்றதோ, அவனுடைய தோல்வி கூட மோசமான தோல்வியாக இருக்காது.
நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனசாரப் புகழ்வேன்; விமரிசிக்க வேண்டிய கட்டத்தில் மனசார விமரிசிப்பேன்.
நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, இருந்தும் அவர்கள் பேச்சைக் கேட்காததாலோ தான் பல மன்னர்வர்கள் முடி இழந்திருக்கிறார்கள். பல மந்திரிகள் முடிவடைந்திருக்கிறார்கள்.
இயற்கையின் நியாயங்கள்; நண்பர்களின் வாதங்கள் அனைத்தையும் பரிசீலித்து, ஒழுங்காகச் சாலையை வகுத்துக் கொள்வோர்ருக்கு என்றும் அழிவில்லை.
அவர்களது நதிக்கரை, என்றும் பசுமையாகவே இருக்கும்.
நான் நண்பன் என்று நம்புவோர் எனது இந்த வாதத்தை விருப்பு வெறுப்பில்லாமல் பரிசீலிப்பார்களா ?
மேலே நீங்கள் படித்த கட்டுரை நான் இப்போது எழுதியது அல்ல.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 1962 ல் தி.மு.க வினர் ஐம்பது பேர் வெற்றி பெற்றுச் சட்டசபைக்குள் நுழைந்தபோது எழுதியது.
என்னுடைய எழுத்துகளில் சில, காலங்கடந்து நிற்கும் என்பதற்கு இது சான்று.
*******************
கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !
ReplyDeletehttp://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.html
தங்களை தொடர்வதில் (Follow) மகிழ்கிறேன்...நல்ல பகிர்வு
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி விஜயன்.
Delete